திமுக கூட்டணியில் இதுவரை சட்டப்பேரவைத் தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சியையும் தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சியையும் இன்று (மார்ச் 2) அழைத்து திமுக தலைமை கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையிலான குழுவினர் திமுக பொருளாளர் டி. ஆர். பாலு தலைமையிலான குழுவினரோடு பேசிவிட்டு வந்திருக்கிறார்கள்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகனும் இன்று திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவை சந்தித்துள்ளார். இந்த இரு கட்சிகளுக்குமான அழைப்பு மதிமுகவுக்கான செக் வைக்கும் படலமாக திமுக கூட்டணியில் பார்க்கப்படுகிறது.
மதிமுக சார்பில் ஏற்கனவே மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது.
பொதுவாகவே மூன்றாவது கட்டத்தில் தொகுதி உடன்பாடு கையெழுத்து ஆவதை அறிவிக்கும் பழக்கத்தை திமுக இந்த தேர்தலில் கடைப்பிடித்து வருகிறது.
ஆனால் மூன்றாவது கட்ட பேச்சு வார்த்தையிலும் மதிமுகவுடன் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.
கடந்த தேர்தலை போல ஒரு மக்களவைத் தொகுதி தருகிறோம், அதிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தி வருகிற நிலையில்…
மதிமுக கேட்ட ராஜ்யசபா இடத்துக்கும் உடனடியாக திமுக உத்தரவாதம் வழங்கவில்லை. ஆனால் ராஜ்யசபா பெறுவது என்பதிலும் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதில்லை என்பதிலும் மதிமுக உறுதியாக இருக்கிறது.
இதனால் மதிமுக உடனான திமுகவின் பேச்சுவார்த்தை இன்னமும் எந்த முடிவும் வராமல் நிற்கிறது.
இதற்கிடையே தான் நேற்று மாலை மனிதநேய மக்கள் கட்சிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திமுக அழைப்பு விடுத்தது.
இந்த இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்கு தயாராக இருக்கின்றன. இன்று பகல் விடுதலைச் சிறுத்தைகளோடு பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படும் என்று தெரிகிறது.
மமக, தவாகாவை திமுக அழைத்துப் பேசிய நிலையில் மதிமுக நிர்வாகிகள் குழப்பம் அடைந்து இருக்கிறார்கள். ஒரு சீட்டுக்கு ஒப்புக் கொள்கிறீர்களா இல்லையா என்பதுதான் திமுக குழுவினரால் மதிமுகவுக்கு அனுப்பப்பட்டிருக்கிற மெசேஜ்.
நேற்று திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.
வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…