அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற ஊழல்கள் சிஏஜி அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், “தமிழக ஊரக வளர்ச்சி துறை சார்பில் விளம்பரங்கள் வெளியிட்டதில் ரூ.2.18 கோடி முறைகேடுகள் நடந்ததாக சிஏஜி அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2016-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 5.09 லட்சம் வீடுகள் கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.
ஆனால் கட்டிமுடிக்கப்பட்டது 2.80 லட்சம் வீடுகள் தான். இந்த திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியை எடப்பாடி பழனிசாமி அரசு முறையாக கையாளவில்லை.
தகுதியுள்ளவர்களுக்கு வீடுகளை ஒதுக்காமல் தகுதியற்றவர்களுக்கு முறைகேடாக வீடுகளை ஒதுக்கியுள்ளார்கள்.
இந்த திட்டத்தில் பயனடைய வேண்டிய பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களை உரிய முறையில் அடையாளம் காணவில்லை என அதிமுக ஆட்சி மீது அடுக்கடுக்கான புகார்களை சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை முறையாக செயல்படுத்தி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால் மத்திய அரசு இந்த திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியில் ரூ.1,515.60 கோடி ரூபாயை அதிமுக அரசால் பெற முடியவில்லை.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பயனாளிகளை அடையாளம் காண்பதில் பெரும் முறைகேடுகளை நிகழ்த்தியிருப்பதன் மூலம் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் சமூக நீதியை எடப்பாடி அரசு சிதைத்து போட்டுள்ளது.
திட்டமிடலில் ஏற்பட்ட குறைபாடுகள் மற்றும் கவனக்குறைவால் ஆதி திராவிட பழங்குடியின குடும்பங்களுக்கு அளிக்க நிர்ணயம் செய்யப்பட்ட 60 சதவிகிதம் என்கிற இலக்கை அடைய முடியவில்லை என்று சிஏஜி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.
காவல்துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்தில் அதிமுக ஆட்சி காட்டிய அலட்சியத்தால் காவல்துறைக்கு ரூ.14.37 கோடி வீண் செலவு ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இதற்காக மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் ரூ.74.03 கோடி பயன்படுத்தாமல் வீணடிக்கப்பட்டுள்ளது. காவல்துறை வளர்ச்சியில் அக்கறை செலுத்தாமல் எடப்பாடி அரசு இருந்துள்ளது.
இலவச லேப்டாப் திட்டத்தில் ரூ.68.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 4.88 லட்சம் பள்ளி பைகள் தேவைக்கு அதிகமாக வாங்கியதால் அரசு நிதி ரூ.7.28 கோடி முடக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் நிதியில் ரூ.1627 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
“உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கிய எடப்பாடி”: மா.சுப்பிரமணியன்
ரஹானே: ஐபிஎல் அதிரடியால் அடையாளத்தை மீட்டெடுத்த நம்பிக்கை நாயகன்!