டிஜிட்டல் திண்ணை: சபாநாயகர் பொன்முடி… அமைச்சர் அப்பாவு… ஸ்டாலின் திடீர் ஆலோசனை!
வைஃபை ஆன் செய்ததும் ஃபேஸ்புக் மெசஞ்சர் ஆன் லைனில் வந்தது. “அமைச்சரவை மாற்றம் எப்போது?” என்று கேள்வியைத் தொடுத்து பதிலுக்காக வெயிட்டிங் என்றது.
மெசஞ்சருக்கு பதிலளித்து வாட்ஸ் அப் டைப் செய்யத் தொடங்கியது. “முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றம் இப்போது அப்போது என்று பல முறை பேசப்பட்டும் இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு, மூன்று தினங்களாக முதல்வர் ஸ்டாலின், மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் இடையே சில முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டிருக்கின்றன.
தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான முறையில் பொது வெளியில் கருத்துகளை வெளியிட்டு வரும் அமைச்சர்களை முதல்வர் ஸ்டாலின் தனிப்பட்ட முறையிலும் எச்சரித்திருக்கிறார். கடந்த திமுக பொதுக்குழுவிலும், ‘ஒவ்வொரு நாளும் நம்மவர்கள் யார் என்ன சொல்லியிருக்கிறார்களோ என்று நினைத்தபடியேதான் கண் விழிக்கிறேன். பல நாட்கள் இதனால் எனக்கு தூக்கமே வருவதில்லை’ என்று உருக்கமாகவும் வெளிப்படையாகவும் பேசினார். அமைச்சர் பொன்முடி மகளிருக்கான இலவசப் பேருந்து பயணத்தை ஓசி பஸ் என்று சொன்னது கடும் சர்ச்சையாகி பல விமர்சனங்களை அரசியல் தாண்டி பொதுமக்களிடையே ஏற்படுத்தியிருந்தது. இதன் விளைவாகத்தான் முதல்வர் ஸ்டாலின் பொதுக்குழுவில் அப்படி பேசினார். ஆனால் ஸ்டாலின் அவ்வாறு பேசிக் கொண்டிருக்கும்போது கூட பொன்முடி வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தது பொதுக்குழுவில் இருந்த திமுக நிர்வாகிகளுக்கும், டிவியில் பார்த்துக் கொண்டிருந்த திமுக தொண்டர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது.
இந்த சர்ச்சை போதாதென்று கடந்த வாரம் இன்னொரு சர்ச்சையிலும் சிக்கினார் அமைச்சர் பொன்முடி. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள சித்தலிங்க மடம் கிராம மக்கள் தங்கள் கிராம எல்லையை பிரிக்கும் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தினார்கள். அப்போது அவர்களை சந்திக்க அமைச்சர் பொன்முடி சென்றார். அங்கே மக்கள் அவரோடு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த பொன்முடி போடா ம…. என்று கோபத்தில் கத்திவிட்டார். இதை வீடியோவில் பதிவு செய்து வைரல் ஆக்கிவிட்டனர். தனது அறிவுரையை மீறியும் அமைச்சர் பொன்முடி இவ்வாறு நடந்துகொண்டிருப்பது பற்றி அறிந்து ஸ்டாலினும் வேதனைப் பட்டிருக்கிறார்.
இந்த பின்னணியில் ஓரிரு நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலின், அமைச்சரும் பொதுச் செயலாளருமான துரைமுருகன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்களோடு பேசிக் கொண்டிருந்தார். அப்போது இந்த டாப்பிக் பற்றி பேச்சு வந்திருக்கிறது ஒரு கட்டத்தில் முதல்வர் ஸ்டாலின், ‘ஏற்கனவே தென் மாவட்டத்துல முக்கியமான மாவட்டமான நெல்லை மாவட்டத்துக்கு அமைச்சரவையில பிரதிநிதித்துவம் இல்லைனு குறை பட்டுக்கிட்டிருக்காங்க. அதனால சபாநாயகரை ரிசைன் பண்ண சொல்லிட்டு அவரை அமைச்சராக்கிட்டு, நம்ம அமைச்சர் பொன்முடியை சபாநாயகர் ஆக்கிடலாமா?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு துரைமுருகன், ‘செய்யலாம், தென் மாவட்டத்தையும் திருப்திப் படுத்தின மாதிரி இருக்கும். வட மாவட்டங்களையும் திருப்திப்படுத்தின மாதிரி இருக்கும்’ என்ற ரீதியில் சில கருத்துக்களை சொன்னாராம். மேலும் பொன்முடி அவை நடவடிக்கைளை அத்துப்படியாக அறிந்தவர். பல முக்கியமான விவாதங்களில் பங்கேற்றவர். அவையை நடத்த தகுதியானவர் என்றும் சொல்லியிருக்கிறாராம்.
ஏற்கனவே நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளர் தேர்தலில் அப்பாவு ஆதரவாளர் ஜெயிக்க வேண்டிய நிலையில், தற்போதைய மாசெ ஆவுடையப்பன் அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து அழுது புலம்பியதால் அவரையே நீடிக்க விட்டார் ஸ்டாலின். இதனால் அப்பாவு கடும் அதிருப்திக்கு ஆளாகியிருந்தார். இந்த நிலையில் எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், நெல்லை மாவட்டத்துக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் கொடுக்கலாம் என்று கருதுகிறார் ஸ்டாலின். மாசெ தேர்தலுக்குப் பிறகும் அப்பாவு -ஆவுடையப்பன் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்பதே ஸ்டாலினுக்கு சென்றிருக்கும் ரிப்போர்ட். இந்த பின்னணியில் அப்பாவுவை அமைச்சர் ஆக்கலாமா என்று யோசிக்கிறார் ஸ்டாலின்.
ஏற்கனவே கீதா ஜீவன், மனோ தங்கராஜ் என்ற இரு கிறிஸ்துவ நாடார்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இந்து நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சராக இருக்கிறார். இந்த நிலையில் எம்பி தேர்தலுக்கு முன்னர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ நாடாரான அப்பாவுவை அமைச்சர் ஆக்கினால் என்ன என்பதுதான் ஸ்டாலின் விவாதித்துள்ள விஷயம்.
தற்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி மீது இந்த ஆட்சியின் ஆரம்ப நாட்களில் கோபமாகவே இருந்தார் ஸ்டாலின். பிறகுதான் ஸ்டாலினை பொன்முடியால் நெருங்க முடிந்தது. ஆனால் பொதுக்குழுவுக்கு முன்னும் பின்னுமான இந்த சர்ச்சைகளால் அரசியல் தலைவர்களைத் தாண்டி பொது மக்கள் மத்தியில் கட்சியின், ஆட்சியின் பெயர் கெட்டுப் போயிருப்பதை உணர்ந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அதனால், பொன்முடியை சபாநாயகர் ஆக்குவதன் மூலமாக இதுபோல சர்ச்சைக்குரிய வகையில் பேசும் திமுகவினருக்கு ஒரு ஸ்ட்ராங்கான எச்சரிக்கையை அளிக்க முடியும் என்பதும் ஸ்டாலினின் கணக்கு.
இந்த பின்னணியில்தான் இரு நாட்களாக இந்த விஷயம் குறித்து துரைமுருகன் உள்ளிட்டோருடன் பகிர்ந்துகொண்டிருக்கிறார் ஸ்டாலின். இந்த ஆலோசனை நடந்திருந்தாலும், சீனியர்கள் மீது அவ்வளவு எளிதில் ஸ்டாலின் ஆக்ஷன் எடுத்துவிடுவாரா என்றும் ஒரு கேள்வி எழுகிறது. தானாகவே சிந்தித்து ஒரு முடிவுகள் எடுத்துவிட்டு அதை அறிவிக்கப் போகும் நேரத்தில் அந்த முக்கிய முடிவுகளை பல முறை கைவிட்டிருக்கிறார் ஸ்டாலின். அப்படி ஒரு வேளை பொன்முடி விவகாரத்திலும் நடக்குமா அல்லது உறுதியாக இந்த நடவடிக்கையை மேற்கொள்வாரா என்பது ஆளுநர் மாளிகையில் இருந்து அறிவிப்பு வரும் வரை சஸ்பென்ஸ்தான்” என்று செண்ட் செய்தது வாட்ஸ் அப்.
இதைப் படித்த மெசஞ்சர், “அதெல்லாம் சரிதான். பொதுமக்களை இப்படி திட்டுகிற அமைச்சர் பொன்முடி, ஒருவேளை சபாநாயகர் ஆகிவிட்டால் சட்டமன்றம் நேரடி ஒளிபரப்பு நடந்துகொண்டிருக்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களைப் பார்த்து ஏக வசனத்தில் பேசிவிட்டால் ஸ்டாலினுக்கு இன்னும் சிக்கலாகிவிடுமே?” என்று ஒரு டவுட்டை அனுப்பிவிட்டு சைன் அவுட் ஆனது.
10 % இட ஒதுக்கீடு: விதை நாங்கள் போட்டது – வரவேற்கும் காங்கிரஸ்!
10% இடஒதுக்கீடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது-தினகரன்