டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம் – உதயநிதி எதிர்ப்பு, துரைமுருகன் கோபம், குழப்பத்தில் ஸ்டாலின்

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப்பிடம் ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லா கேள்விகளும் எதிர்பார்த்த பதில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை மாற்றப்படுகிறதா… மாற்றம் பற்றிய விவரங்கள் என்ன என்பதுதான்.
அத்தனை கேள்விகளுக்கும் வாட்ஸ் அப் பதில்களை தனது மெசேஜாக டைப் செய்யத் தொடங்கியது.

”தமிழக அமைச்சர்களின் பர்ஃபாமென்ஸ் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில உளவுத்துறை, சபரீசனின் தனியார் டீம் என இரு தரப்பில் இருந்தும் அறிக்கைகளைப் பெற்றிருக்கிறார். இதன் அடிப்படையில் டாப் லிஸ்ட், ஹிட் லிஸ்ட் என்று இரு தரவரிசைப் பட்டியலை முதலமைச்சர் தயார் செய்திருக்கிறார். இந்த ரேங்க் படி அமைச்சரவை மாற்றம் நடக்க இருக்கிறது என்று இந்த சீசனின் முதல் செய்தியை மின்னம்பலம் ஏப்ரல் 21 ஆம் தேதியே டிஜிட்டல் திண்ணையில் வெளியிட்டது. அந்த விவகாரம்தான் இப்போது வரை பேசப்படுகிறது.

இன்று (மே 9) வரையிலான அமைச்சரவை மாற்றங்கள் தொடர்பான அப்டேட் என்ன என்பதை இதில் அடிபடும் அமைச்சர்களின் அடிப்படையிலேயே தருகிறோம்.

எனக்கே தெரியாம… -கோபத்தில் துரைமுருகன்

தற்போது நீர் வளத்துறை மற்றும் கனிம வள அமைச்சராக இருக்கிறார் திமுக பொதுச் செயலாளரான துரைமுருகன். திமுக ஆட்சி அமைந்தபோதே ஸ்டாலின் தன்னை பொதுப்பணித்துறை அமைச்சராக ஆக்குவார் என்று எதிர்பார்த்தார் துரைமுருகன். ஆனால் பொதுப்பணித்துறையை இரண்டாகப் பிரித்து நீர்வளத்துறையை மட்டும் துரைமுருகனிடம் கொடுத்தார் ஸ்டாலின். இது துரைமுருகனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அதனால் போராடி கனிம வளத்துறையை பெற்றார்.

இப்போதைய அமைச்சரவை மாற்றத்தில் அந்த கனிம வளத்துறையையும் துரைமுருகனிடம் இருந்து எடுத்துக் கொண்டு, ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் அவர் வைத்திருந்த சட்டத் துறையை துரைமுருகனிடம் கொடுப்பதாக தகவல். இதனால் துரைமுருகன் அதிர்ச்சி அடைந்திருப்பதாக வேலூர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே இன்று (மே 9) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகனிடம் அமைச்சரவை மாற்றம் பற்றிய கேள்விகளுக்கு, “நீங்கதான் பரபரப்பா பேசிக்கிறீங்க. உங்களுக்கு என்ன தெரியுமோ அதுதான் எனக்கும் தெரியும். அமைச்சரவையில் யாரை சேர்க்கணும் யாரை நீக்கணும் என்பது முதலமைச்சரின் உரிமை. இதுபற்றி நீங்க முதலமைச்சரிடம்தான் கேக்கணும்” என்றார்.

இன்று தன்னிடம் பேசிய சில திமுக நிர்வாகிகளிடம் கூட, ‘அமைச்சரவை மாறுதுனு ஊரெல்லாம் பேசிக்கிறாங்க. என்னோட இலாகாவையே மாத்தப் போறதா என் காதுக்கு தகவல் வருது. ஆனா திமுக பொதுச் செயலாளரான எனக்கு இதப் பத்தி ஒண்ணுமே தெரியலய்யா. எம்ஜிஆர் கூப்பிட்டு கூட போகாத திமுக காரன் நான். ஆனா இப்ப அதிமுகவுலேர்ந்து வந்தவன்கிட்ட எல்லாம் கொத்துக் கொத்தா துறை இருக்குது. என்னதான் நடக்குதுனு முதலமைச்சர்கிட்டயே பேசுறேன்’ என்று கோபமாகச் சொல்லியிருக்கிறார்.

தங்கத்திடம் நிதி, கனிம வளம்

தற்போது தொழில் துறை அமைச்சராக இருக்கிறார் தங்கம் தென்னரசு. கடந்த ஆண்டு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்தவர். இந்த ஆண்டு நடைபெற இருக்கும் முதலீட்டாளர் உச்சி மாநாட்டுப் பணிகளிலும் பிசியாக இருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு தொழில் துறைக்கு பதிலாக துரைமுருகனிடம் தற்போது வரை இருக்கும் கனிம வளத்துறையை கொடுக்க இருக்கிறார்கள். ஏற்கனவே சர்ச்சைகளில் அடிபட்ட அமைச்சர் பிடிஆரின் நிதித் துறையை தங்கம் தென்னரசுவுக்கு கொடுக்கலாமா என்று முதலமைச்சர் ஆலோசித்தார்.

அப்போது தங்கம் தென்னரசு நிதியை ஏற்க தயங்கினார். நிதியை மட்டுமே தனக்கு கொடுத்துவிடுவார்களோ என்பதால் ஏற்கத் தயங்கினார். இப்போது நிதியோடு கனிம வளத்துறையையும் தங்கம் தென்னரசுக்கு கொடுக்கலாம் என்பதே நிலவரம்.

முதல் துறையே முக்கியமான துறை- டி.ஆர்.பி.ராஜா

தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற கூடிய அமைச்சராக முன்னணியில் பேசப்படக் கூடியவர் டிஆர்பி ராஜா. தொடர்ந்து மூன்று முறை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர். முதலமைச்சர் ஸ்டாலினோடு வாடா போடா என்று பேசிப் பழகக் கூடிய திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகன்.

டெல்டாவில் இருந்து அமைச்சர் யார் என்ற கேள்வியின்போது இவரது பெயரே 2021 ஆட்சி அமைத்ததுமே பேசப்பட்டது. ஆனால் டெல்டாவில் அது சர்ச்சையாகும் என்பதால் , ‘நானே டெல்டாக்காரன் தான்’ என்று சொல்லி சற்று ஒத்தி வைத்தார் ஸ்டாலின்.
இப்போது சீனியர் திருவையாறு துரை. சந்திரசேகரன், திருவாரூர் பூண்டி கலைவாணன் ஆகியோரை சமாதானப்படுத்தி விட்டு அமைச்சராகிறார் டி.ஆர்.பி.ராஜா. தற்போது தங்கம் தென்னரசு வகிக்கும் முக்கியமான தொழில் துறையை ராஜாவிடம் கொடுக்க முடிவு செய்திருக்கிறார் ஸ்டாலின். இது ராஜாவுக்கு சவாலான துறைதான்.

பிடிஆருக்கு தமிழ் வளர்ச்சியா?

நிதியமைச்சர் பிடிஆர் பேசியதாக வெளியான ஆடியோக்கள் வெளிவந்த உடனேயே உளவுத்துறை மூலம் அது அவருடைய குரல்தான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார் முதலமைச்சர் ஸ்டாலின். அதனால்தான் பிடிஆரை ராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தினார். சில மூத்த நிர்வாகிகள், சபரீசன் ஆகியோரின் வற்புறுத்தல் காரணமாக பிடிஆரின் அமைச்சர் பதவி தப்பியது.

ஆனால் நிதித் துறையை அவரிடம் இருந்து மாற்ற உறுதியாக இருக்கிறார் முதலமைச்சர். பிடிஆரிடம் இருந்த நிதித்துறையை தங்கம் தென்னரசுவிடம் கொடுக்க முடிவெடுத்த ஸ்டாலின்… தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித் துறையை பிடிஆருக்கு டெபுடேஷனாக கொடுக்கலாமா என்று ஆலோசித்தார்.

ஆனால் பட்ஜெட் வாசிக்கும்போது பிடிஆரின் தமிழ் உச்சரிப்பு பலத்த விமர்சனங்களை சம்பாதித்தது. தமிழ் வளர்ச்சித் துறையை பிடிஆரிடம் கொடுத்தால் அது பிடிஆருக்கு டெபுடேஷனாக இருக்காது, தமிழுக்குத்தான் டெபுடேஷனாக இருக்கும் என்று முதல்வரிடம் சிலர் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். இதையடுத்து தற்போது மனோ தங்கராஜ் வகிக்கும் தகவல் தொழில் நுட்பத் துறைக்கு பிடிஆரை அமைச்சராக்க முடிவு செய்தார் ஸ்டாலின்.

பிடிஆர் செய்த தவறுக்கு மனோ தங்கராஜுக்கு தண்டனையா?- உதயநிதி எதிர்ப்பு!

இந்த கருத்துகளை எடுத்து பிடிஆரிடம் தகவல் தொழில் நுட்பத் துறையைக் கொடுத்துவிட்டு தற்போது அத்துறை அமைச்சராக இருக்கும் மனோ தங்கராஜுக்கு தங்கம் தென்னரசுவிடம் இருக்கும் தமிழ் வளர்ச்சித் துறையைக் கொடுக்கவும் முடிவு செய்தார் ஸ்டாலின்.

இதையறிந்த அமைச்சரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி முதல்வரைச் சந்தித்து, ‘தப்பு செஞ்சது பிடிஆர். அவருக்கு தண்டனை கொடுக்காம ஏன் மனோ தங்கராஜுக்கு தண்டனை கொடுக்குறீங்க? மனோ தங்கராஜ் மாவட்டச் செயலாளராக இருக்கார். அவரு கட்சி நடத்தணும். அதனால அவருக்கு கூடுதல் துறை ஒதுக்கலாமே தவிர தகவல் தொழில் நுட்பத் துறையிலேர்ந்து தமிழ் வளர்ச்சித் துறை மனோ தங்கராஜுக்கு டி ப்ரமோட் ஆக இருக்கும்’ என முதல்வரிடமே வாதாடியிருக்கிறார் உதயநிதி. இதனால் இந்த விவகாரம் இன்னும் ஆலோசனையிலேயே இருக்கிறது.

ஒரே விக்கெட் -ஆவடி நாசருக்கு பதில் ரகுபதிக்கு பால் வளம்

இந்த அமைச்சரவை மாற்றத்தில் பதவி பறிக்கப்படும் ஒரே அமைச்சராக ஆவடி நாசர் மட்டுமே இருந்தால் அது ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

ஆவடியில் இருந்து அவர் வகிக்கும் ஆவின் வரை நாசர் மீது பல்வேறு புகார்கள் வரிசைகட்டி வந்துகொண்டிருக்க்கின்றன. சில மாதங்களுக்கு முன் நாசரின் மகனை ஆவடி மாநகர செயலாளர் பதவியில் இருந்து கட்டம் கட்டினார் ஸ்டாலின்.

ஆனாலும் அமைச்சர் நாசரின் ஆட்டங்கள் குறையவில்லை என்றும் அதனால் அவர் பதவி பறிக்கப்படுகிறது என்றும் காரணம் கூறுகிறார்கள். ஆவடி நாசரின் பால் வளத்துறையை புதுக்கோட்டை மாவட்டம் ரகுபதிக்கு கொடுக்க முதலமைச்சர் முடிவு செய்திருக்கிறார்.

அப்பா செஞ்சிடுவாரா…-உதயநிதி கமென்ட்

12 ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் நடக்கலாம் என்று சொல்லப்படும் தகவல்களைப் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அவருக்கு நெருக்கமான சிலர் பேசியிருக்கிறார்கள். அப்போது உதயநிதி,

‘அதிகாரிகளை மாத்தறதப் பத்தியே அப்பா அவ்வளவு யோசிப்பாரு. கடைசியில வேணாம்னு விட்டுருவாரு. அப்படிப்பட்டவரா அமைச்சர்களை மாத்துவாருனு நினைக்கிறீங்க?’

என்று தனக்கே உரிய சிரிப்போடு கமெண்ட் அடித்திருக்கிறார் உதயநிதியின் சிரிப்புக்கேற்பத்தான் அமைச்சரவை மாற்ற விவகாரத்தில் குழப்பத்தில்தான் இருக்கிறார் ஸ்டாலின்” என்கிற தகவலுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

நாளை தேர்தல் இன்று முக்கிய அறிக்கையை வெளியிட்ட ஒப்பந்ததாரர்கள் சங்கம்!

அடுத்த 2 மணி நேரத்தில்… 19 மாவட்டங்களுக்கு மழை!

Cabinet reshuffle Stalin confusion
+1
0
+1
2
+1
0
+1
4
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *