வைஃபை ஆன் செய்ததும் அமைச்சரவை மாற்றம் பற்றிய கேள்விகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமல்ல அமைச்சர்கள் கூட தங்களுக்கு இடையிலோ, நெருக்கமானவர்களிடமோ பேசும்போது விவாதிக்கும் முதன்மையான விஷயம், அமைச்சரவைக்குள் மாற்றம் நடக்குமா என்பதுதான். அதிலும் சில ஜூனியர் அமைச்சர்கள் தங்களிடம் பேசும் பத்திரிகையாளர்களிடம், ‘என்னண்னே…என் டிபார்ட்மெண்ட் இருக்குமா? இல்லேன்னா இதையும் உருவிடுவாங்களாண்ணே?’ என்றுதான் உரையாடலை ஆரம்பிக்கிறார்கள்.
7,8,9 தேதிகளில் திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டங்கள் முடிந்த பிறகு அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்பதுதான் இப்போதைய பேச்சு. அதிலும் டெல்டாவில் அமைச்சரவை மாற்றங்களை எதிர்பார்த்து பஞ்சாயத்துகளும் நடக்கத் தொடங்கிவிட்டன.
மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் டிஆர்பி ராஜாவுக்கு இந்த முறை அமைச்சரவையில் வாய்ப்பு அனேகமாக உறுதியாகிவிட்டது என்கிறார்கள். மகன் ராஜாவுக்காக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவே டெல்டாவில் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் என்பதை வைத்தே இதை உறுதியாகச் சொல்கிறார்கள் டெல்டா திமுகவினர்.
டெல்டாவில் இப்போதைக்கு சீனியர் என்றால் திருவையாறு சட்டமன்ற உறுப்பினரான துரை சந்திரசேகரன் தான். இவர் 1989 இல் முதன் முறையாக திருவையாறு தொகுதியில் நடிகர் சிவாஜி கணேசனை எதிர்த்து வெற்றிபெற்றார்.
அதிலிருந்து 96, 2006, 2011, 2021 என எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்றவர் துரை சந்திரசேகர். டி ஆர்பி ராஜாவுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற தகவலை அடுத்து துரை சந்திரசேகர் முதலமைச்சர் ஸ்டாலினுடைய குடும்ப வட்டாரத்தை அணுகியிருக்கிறார். ’நான் 89 இல் இருந்து எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறேன். சிவாஜியையே தோற்கடித்தவன். எனக்கு அமைச்சர் வாய்ப்பு இல்லையா?” என்பதுதான் துரை சந்திரசேகரனின் ஆதங்கம்.
இதைப் புரிந்துகொண்ட டி.ஆர்.பாலு தனது மகனுக்காக துரை. சந்திரசேகரனிடமே பேசியிருக்கிறார். ஏற்கனவே பழனிமாணிக்கத்தை ஓரங்கட்டுவதற்காக துரை சந்திரசேகரன் உள்ளிட்டவர்களை எல்லாம் ஒரே குடையில் ஒருங்கிணைத்தவர் டி.ஆர்.பாலு. அந்த அடிப்படையில் தன் மகன் ராஜா அமைச்சராகும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதைத் தடுக்க வேண்டாம் என்று துரை சந்திரசேகரனிடம் உரிமையாக பாலு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே திருவாரூர் மாசெவும் எம்.எல்.ஏ.வுமான பூண்டி கலைவாணன் தரப்பில் ராஜாவுக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் அதிருப்தியில் இருக்கிறார்கள். கலைவாணன் 2019 சட்டமன்ற இடைத் தேர்தல், 2021 பொதுத் தேர்தல் என இரு முறைதான் எம்.எல்.ஏ.வாக ஆகியிருக்கிறார்.
ஆனால் ராஜா 2011, 2016, 2021 என மூன்றாவது முறையாக தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் என்று சொல்லி திருவாரூர் பஞ்சாயத்தை முடித்த டி.ஆர்.பாலு… தஞ்சாவூர் பஞ்சாயத்தையும் துரை சந்திரசேகரனிடம் பேசியதன் மூலமாக முடித்துவிட்டார் என்கிறார்கள் டெல்டா திமுகவினர். இதனால் டி.ஆர்பி ராஜா அமைச்சர் ஆவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது என்கிறார்கள்.
தற்போது காஞ்சிபுரம் எம்.எல்.ஏ.வாக இருக்கும் திமுக மாணவரணிச் செயலாளருமான சிவிஎம்பி எழிலரசனுக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்படலாம் என்ற தகவலும் அறிவாலயத்தில் கசிகிறது. முதல்வரின் அதிருப்திப் பட்டியலில் அமைச்சர் நாசரும், அமைச்சர் கயல்விழி செல்வராஜும் இருப்பதாகவே தொடர் பேச்சிருக்கிறது.
மேலும் தற்போதைய அமைச்சரவையில் இலாகா மாற்றங்களும் இருக்கலாம் என்று பேசப்படுகிறது. நிதியமைச்சர் பிடிஆர் மீதான கோபம் முதல்வருக்கு குறைந்திருந்தாலும் முற்றிலுமாக மறைந்துவிடவில்லை. அந்த அடிப்படையில் நிதியமைச்சர் பொறுப்பை சீனியர் அமைச்சர்களான புதுக்கோட்டை ரகுபதி, ஈரோடு முத்துசாமி ஆகிய இருவரில் ஒருவருக்கு கொடுக்கலாமா என்றும் ஆலோசனை நடந்துவருகிறது.
பிடிஆருக்கு தற்போது மனோ தங்கராஜ் வகித்துவரும் தகவல் தொழில் நுட்பத் துறையை கொடுக்கலாம் என்றும், மனோ தங்கராஜுக்கு பால் வளத்துறையை கொடுக்கலாம் என்று ஆலோசனைகள் நடப்பதாக கோட்டை வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
அமைச்சரவையில் புதிதாக யார் இணைகிறார்கள், யார் நீக்கப்படப் போகிறார்கள், யார் யார் துறை மாற்றப்பட இருக்கிறது என்பது 10 ஆம் தேதி வாக்கில் தெரியவரலாம் என்பதே லேட்டஸ்ட் நிலவரம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டதா? ஈபிஎஸுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!
குடும்பத்தில் நடந்த பவர் யுத்தம்: முடிவை வாபஸ் பெற்ற சரத் பவார்