டிஜிட்டல் திண்ணை: இரண்டரை மணி நேர புயல்… திக்குமுக்காடிய அமைச்சர்கள்… ஸ்டாலின் வைத்த ட்விஸ்ட்!

Published On:

| By Aara

வைஃபை ஆன் செய்ததும், “கலைஞர் நியூஸ் டிவியின் ஸ்க்ரீன் ஷாட்டுகளும், முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டியின் வீடியோ க்ளிப்பும் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்தபடியே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது

“இன்று (ஆகஸ்ட் 22) காலை தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது கட்சியின் புதிய கொடியை அறிமுகப்படுத்தும் நிகழ்வை காலை 9 மணிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதனால் தமிழின் பெரும்பாலான தொலைக்காட்சி சேனல்களும் அதை லைவ் செய்துகொண்டிருந்தன.

9.30 மணி வாக்கில் கலைஞர் நியூஸ் தொலைக்காட்சியில் திடீரென ஒரு பிரேக்கிங் நியூஸ் ஓடியது.  ‘இன்று மாலை அமைச்சரவை மாற்றம்’ என்ற தலைப்பிட்டு ஓடிய  அந்த செய்தியில்… ’இன்று (ஆகஸ்டு 22) மாலை தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல். மூத்த அமைச்சர் ஒருவர் உட்பட மூன்று அமைச்சர்கள் மாற்றப்படலாம் என்றும் மூன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் தகவல். அமைச்சரவையில்  துறை ரீதியான மாற்றமும் இருக்கும்”  என்பதுதான் அந்த ஃபிளாஷ் நியூஸ்.

அடுத்த சில நிமிடங்களில் ஸ்டாலின் அமைச்சரவையில் இருக்கும் பெரும்பாலான அமைச்சர்கள் டென்ஷன் ஆனார்கள்.

ஒரு சில ஜூனியர் அமைச்சர்கள் டிவியை பார்த்துவிட்டு தங்களுக்கு நெருக்கமான சீனியர் நிர்வாகிகளுக்கு போன் போட்டனர்.

‘அண்ணே…வேற டிவின்னா கூட நம்பாம இருக்கலாம். நம்ம கலைஞர் நியூஸ்லயே ஓடுதுண்ணே… திமுகவுக்கு அதிகாரபூர்வ பத்திரிகை முரசொலின்னா, அதிகாரபூர்வ டிவி கலைஞர் டிவிதானே… அதுலயே போட்டாங்கண்ணே…’ என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  இன்னொரு பக்கம் பதவி பறிக்கப்பட போகும் அந்த சீனியர் அமைச்சர் யார் என்ற கேள்வியும் எழுந்துவிட்டது. அடுத்ததாக கலைஞர் டிவியில் இருக்கும் தங்களுக்கு அறிமுகமான புள்ளிகளுக்கு போன் போட்டனர். அவர்களும் போனை எடுக்கவில்லை.

9.30 மணி வாக்கில் கலைஞர் நியூஸில் பிரேக்கிங் நியூசாக வந்த செய்தி பல அமைச்சர்களைக் குலுக்கும் ஷேக்கிங் நியூஸாக மாறிவிட்டது. அமைச்சர்களின் ஆதரவாளர்களும் தங்கள் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடுமோ என்று  டென்ஷனாக ஆரம்பித்தனர்.

ஒவ்வொரு அமைச்சர்களும்  முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மாப்பிள்ளை சபரீசன் என இந்த ஆட்சியின் முக்கிய அதிகார மையங்களில் தங்களுக்குத் தோதான சிலரை சோர்ஸுகளாக வைத்திருக்கிறார்கள்.

இந்த செய்தியை பார்த்ததும் அமைச்சர்கள் வட்டாரத்திலிருந்து…  தத்தமது பெரிய இடத்து சோர்ஸுகளுக்கு போன் அடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்காகத்தான் அமைச்சர்கள்  போன் செய்கிறார்கள் என்பதை அறிந்து, அந்த பெரிய இடத்து சோர்ஸுகள் சிலர் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டனர், சிலர் செல்போனை  ஏரோப்ளேன் மோட் போட்டுவிட்டனர். இதனால் அமைச்சர்களுக்கு குழப்பம் அதிகமானது.

கோட்டையில் முதல்வருக்கு நெருக்கமான சில உயரதிகாரிகளை சீனியர் அமைச்சர்கள் சிலரே தொடர்புகொண்டனர். அவர்களுக்கும் இணைப்பு கிடைக்கவில்லை. அறிவாலயத்தில் இருக்கும் நிர்வாகிகளுக்கு இன்று காலை சில மணி நேரங்களில் மட்டும் பெரும்பாலான அமைச்சர்களிடம் இருந்து தலைக்கு பத்து பதினைந்து அழைப்புகளாவது சென்றிருக்கும். அறிவாலய நிர்வாகிகளும் கலவரமாகி,  ’எங்களுக்கு எதுவும் தெரியலைண்ணே…’ என்று  அமைச்சர்களுக்கு விளக்கம் கொடுத்தே ஓய்ந்துவிட்டனர்.

முக்கிய அதிகார மையங்களின் சோர்ஸ்களும் போனை எடுக்கவில்லை, அதிகாரிகளும் போனை எடுக்கவில்லை என்பதால் சில சீனியர்  அமைச்சர்கள் கடும் டென்ஷனாகிவிட்டனர்.  நமக்குத்தான் பதவி போகப் போகிறது என்ற பதைபதைப்பில் சிலருக்கு இரத்த அழுத்தமும் எகிறிவிட்டது.

ஏனென்றால் திமுகவின் பல்வேறு வாட்ச் அப் க்ரூப்புகளில் பதவி பறிக்கப்படும் சீனியர் அமைச்சர் இவர்தான், அவர்தான் என்று தங்களின் விருப்பங்களை  எல்லாம் செய்தியாக பரப்பிக் கொண்டிருந்தனர்.  தென் மாவட்ட சீனியர் அமைச்சரா, வட மாவட்ட சீனியர் அமைச்சரா,  மத்திய மாவட்ட சீனியர் அமைச்சரா என்று திமுகவினரின் வாட்ஸ் அப் க்ரூப்புகளில் பல விவாதங்கள் ஓடிக் கொண்டிருந்தன.

இதனால் மேலும் டென்ஷனான சீனியர் அமைச்சர்கள் மாத்திரைகளை போட்டுக் கொண்டு தங்களது உதவியாளர்களை கோட்டைக்கு அனுப்பி, அங்கே அமைச்சர்களின் அறைகள் ஏதாவது புதுப்பிக்கப்படுகிறதா, மாற்றப்படுகிறதா என்று பார்த்து வரச் சொன்னார்கள். ஆளுநர் மாளிகைக்கு முதல்வர் செல்லும் திட்டம் இருக்கிறதா என்றும் விசாரித்தார்கள். இந்த நிலையில்தான் புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆளுநர் மாளிகைக்கு செல்ல இருக்கிறார் என்று ஃபிளாஷ் நியூஸ் வர மேலும் அலர்ட் ஆகிவிட்டார்கள் அமைச்சர்கள்.

சில அமைச்சர்கள் தங்களுக்கு நெருக்கமான ஆங்கிலப் பத்திரிகையாளர்களை பிடித்து ஆளுநர் மாளிகைக்கு போன் போட்டு இன்னிக்கு ஏதும் கேபினட் மாற்ற நிகழ்ச்சி இருக்கா என்று விசாரிக்கச் சொல்லிக் கேட்டுள்ளனர்.

இப்படி பதவி போகுமோ என்ற பதைபதைப்பில் பல அமைச்சர்கள் திக்குமுக்காடினார்கள் என்றால்…இன்னொரு பக்கம் புதிதாக பதவி பெறும் அந்த மூன்று அமைச்சர்கள் யார் என்ற கேள்வியும் பெரிதாக எழுந்தது.

சுதந்திர தினம் முடிந்ததில் இருந்து ஆறுக்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்குத்தான் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று சென்னையிலேயே முகாமிட்டிருந்தனர்.  இதில் சிலர் நேற்றுதான் ஊருக்குச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை கலைஞர் நியூஸ் பிரேக்கிங் நியூசை பார்த்துவிட்டு,  அவர்கள் இன்ப அதிர்ச்சியாகி சென்னைக்கு விரைந்தனர். அவர்களின் ஆதரவாளர்கள் புதிய அமைச்சர்களுக்கு பரிசுப் பொருட்களை எல்லாம் வாங்கத் தொடங்கிவிட்டனர்.

இந்த பரபரப்புக்கு இடையே மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இன்று காலை 10. 39 மணிக்கு, “இன்று அமைச்சரவை மாற்றம் எதுவும் இல்லை. நான் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசினேன். அவரே உறுதி செய்தார்’ என்று ஒரு பதிவிட்டார். ஆனபோதும் அமைச்சர்களிடையே டென்ஷன் குறையவில்லை.

இந்நிலையில் இன்று காலை எழிலகத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட நவீன முன்னெச்சரிக்கை மையத்தைத் திறந்து வைத்தார்.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலினிடம்,  “அமைச்சரவை மாற்றம் பற்றிய செய்திகள் வருகிறதே?’ என்று கேட்கப்பட, ‘எனக்கு வரலை’ என்று  சிரித்துக்கொண்டே பதிலளித்தார் முதலமைச்சர்.

அந்த நியூசை கேட்ட பிறகுதான் அமைச்சர்கள் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.  ‘சி.எம்.மா இருக்குற தலைவரே எனக்கு தகவல் வரலைனு சிரிச்சுக்கிட்டே சொல்றாரு. அப்படின்னா கலைஞர் நியூஸ்ல பிரேக்கிங் நியூஸ் எப்படி வந்திருக்கும்? என்ன நடக்குதுண்ணே தெரியலையே… ஒருவேளை ஏதும் ஆழம் பாக்குறாங்களா?’ என்று அப்போதும் அமைதியாகாமல் விசாரணையில் இறங்கினர் சில அமைச்சர்கள்.

‘விஜய் கொடி அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு பெரிய அளவு மீடியா கவரேஜ் கிடைச்சிடக் கூடாதுனு இப்படி ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருப்பாங்களோ’ என்றும் அமைச்சர்களுக்கு இடையில் விவாதம் நடந்தது.

இதையெல்லாம் தாண்டி நாம் கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘அமைச்சரவை மாற்றம் நெருங்கிக் கொண்டுதான் இருக்கிறது. செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் சேர்க்கும் வகையில் மாற்றத்தை வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டம் முதல்வரிடம் இருக்கிறது. அதனால் தள்ளிப் போவதாகவும் ஒரு பேச்சிருக்கிறது’ என்று கிசுகிசுக்கிறார்கள்.

ஆனபோதும் இன்று காலை கலைஞர் டிவி பிரேக்கிங் நியூசில் தொடங்கி, முதல்வரின் பிரஸ் மீட் வரையிலான இரண்டரை மணி நேரமும் திக்குமுக்காடிய அமைச்சர்கள், அதற்குப் பிறகும் டென்ஷன் குறையாமல் இருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

 

கொல்கத்தா மாணவி கொலை வழக்கு : “ஏன் இத்தனை குளறுபடிகள்?” நீதிபதி பர்திவாலா

கலைஞரின் அனைத்து நூல்களும் நாட்டுடைமை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share