அமைச்சரவை மாற்றம் தொடர்பாக மூத்த அமைச்சர் துரைமுருகன் இன்று (மே 9) விளக்கமளித்தார்.
சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, விரைவில் அமைச்சரவை மாற்றப்பட இருப்பதாகவும், புதிய முகங்கள் இடம் பெற வாய்ப்பு இருப்பதாகவும், சிலர் நீக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறதே என்று கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், “இது பற்றி எனக்குத் தெரியாது. ஒரு முதலமைச்சர் தனக்கு கீழ் பணியாற்றுவர்களை மாற்றலாம், அவர்களை நீக்கலாம், புதிய பதவிகளை போடலாம். இது முதலமைச்சரின் அதிகாரம். அதில் யாரும் கேள்வி எழுப்ப முடியாது” என்றார்.
இலாகாக்கள் மாற்றப்படுகிறதா, நீங்கள் நிதியமைச்சர் ஆவீர்கள் என்று சொல்கிறார்களே என்ற கேள்விக்கு, “இருக்கட்டும்… வேண்டாம் என்றா சொல்றோம்” என பதிலளித்தார்.
துணை முதல்வர் பதவி கொண்டு வரப்படுகிறதா என்று கேட்டதற்கு, “இதையெல்லாம் சித்தரஞ்சன் சாலையில் போய் நின்று கேட்க வேண்டும். அமைச்சரவையில் மாற்றம் இருக்கிறதா இல்லையா என்றே எனக்கு தெரியாது. பிறகு யார் போய் ஆளுநரை சந்திக்கிறார்கள் என்று எனக்கு எப்படி தெரியும்” என்றார்.
தொடர்ந்து பேசிய துரைமுருகன், “நான் இன்று காலை சென்னை வந்ததும் முதல்வர் வீட்டுக்குதான் போனேன். அவரை பார்த்தேன். லீலா பேலஸ் ஹோட்டலில் ஒரு நிகழ்ச்சி என்றார். நான் கோட்டைக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.
நீங்கள் போங்க நான் வருகிறேன் என்றார். கோட்டைக்கு சென்று ஃபைல்ஸ் எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு போன் வந்தது. முதல்வருக்கு காலில் வலியாக இருக்கிறது. அதனால் கோட்டைக்கு வரவில்லை. டெஸ்ட் எடுக்க போகிறார் என்றனர்.
சரி டெஸ்ட் எடுக்க சொல்லுங்கள் நான் மாலை வந்து பார்க்கிறேன் என்று சொன்னேன். இப்போது மதிய சாப்பாட்டுக்கு வந்துவிட்டேன்” என்றார்.
நாளை மறுநாள் பதவி ஏற்பு விழா இருக்கிறதா என்ற கேள்விக்கு, இருந்தால் போவோம் என நகைச்சுவையாக பதில் அளித்தார்.
“நான் இரண்டு நாட்களாக சென்னையில் இல்லை. திருநெல்வேலி, நாகர்கோயில் சென்றுவிட்டு 10 மணிக்குத்தான் வந்து இறங்கினேன். ஒரு நாள் இல்லை என்றாலும் பாதி விஷயம் தெரிவதில்லை. ஆளுநர் பேச்சு எல்லாம் காலாவதியாகிவிட்டது. முதலமைச்சரின் வெளிநாட்டு பயணத்தின் போது நான் உடன் செல்லவில்லை. பயிற்சிக்காக நீர்வளத்துறை அதிகாரிகளை அனுப்பியிருக்கிறேன்” என்றார்.
அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆளுநரை பார்க்க போகிறீர்களா என்ற கேள்விக்கு, “உங்களது யூகங்கள் எல்லாம் சரியாக இருந்தால் போய் பார்ப்போம். இது பெரிய உலக ரகசியம் இல்லை” என கூறினார்.
பிரியா
அமித்ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!
ஆசிரியர் மீது பெப்பர் ஸ்ப்ரே அடித்த மாணவி!