வைஃபை ஆன் செய்ததும் அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் நான்காவது நாளாக நடந்து வரும் ரெய்டுகள் குறித்த தகவல்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
இவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“மே 26 ஆம் தேதி தொடங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடந்து வரும் வருமான வரித்துறை ரெய்டு நான்காவது நாளான 29 ஆம் தேதி வரை தொடர்கிறது. செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக் ஆகியோருடன் தொடர்பில் இருக்கும் பல்வேறு நபர்களை குறி வைத்து இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ரெய்டு குறித்து செந்தில் பாலாஜி அலட்டிக் கொள்ளாமல் தனது கட்சிப் பணிகளையும் அரசு பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறார். அதே நேரம் ஜப்பானிலிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது மகனும் அமைச்சரும் ஆகிய உதயநிதியை தொடர்பு கொண்டு ரெய்டு நிலவரம் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகிறார். மேலும் செந்தில் பாலாஜி தொடர்பிலான இடங்களில் நடந்து வரும் ரெய்டுகளுக்கு பின்னால் வருமானவரித்துறை வைத்திருக்கும் திட்டங்கள் பற்றி தமிழ்நாடு உளவுத்துறையும் முதலமைச்சருக்கு சில முக்கியமான தகவல்களை அனுப்பி இருக்கிறது.

செந்தில் பாலாஜி தற்போது மின்சார மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருக்கிறார். வருமானவரித் துறை தற்போது நடத்தி வரும் இந்த ரெய்டு தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் மெகா முறைகேடுகளை மையமாக வைத்தே இருக்கிறது. டெல்லி மதுபான ஊழல் முறைகேடு போல தமிழ்நாட்டிலும் நடைபெற்று இருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டத் தொடங்கிவிட்டன. இதன் அடிப்படையில் செந்தில் பாலாஜி மீது வருமானவரித் துறை ரெய்டு நடத்தி அதன் மூலம் கிடைக்கும் தரவுகளை வைத்து அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொள்வது என்பதுதான் மத்திய அரசின் திட்டம்.
இதற்கிடையில் 28ஆம் தேதி முதல் தமிழ்நாடு அமைச்சர்களிடையே ஒரு தகவல் பரபரப்பாக அதே நேரம் ரகசியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழ்நாட்டில் இதற்கு முன்பு டாஸ்மாக் துறையை அதிமுக ஆட்சியில் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி ஆகியோர் நிர்வாகம் செய்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ஏற்படாத அளவுக்கு மிகப்பெரிய சர்ச்சைகள் இப்போது ஏற்பட்டுள்ளன. ஆளுங்கட்சியான திமுகவினர் கூட செந்தில் பாலாஜியின் துறை ரீதியான அணுகுமுறைகளில் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே இரண்டு முக்கியமான துறைகளை நிர்வகித்து வரும் செந்தில் பாலாஜியிடம் இருந்து மதுவிலக்கு துறையை எடுத்து வேறு ஒருவருக்கு கொடுக்கலாமா என்ற ஆலோசனை வெளிநாட்டில் இருக்கும் முதலமைச்சர் வட்டாரத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதுதான் அமைச்சர்கள் மத்தியில் நடந்து வரும் ரகசிய விவாதம்.

முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்தை அனைத்து அமைச்சர்களுமே அறிந்திருந்தாலும் திடீரென இப்படி ஒரு தகவல் உலா வருவதை அவர்களால் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
இதற்கிடையே அப்படி ஒருவேளை செந்தில் பாலாஜியிடம் இருந்து டாஸ்மாக் துறையை முதலமைச்சர் மாற்ற வேண்டும் என்று நினைத்தால்… அந்த பொறுப்பு யாருக்கு என்ற போட்டியும் தொடங்கிவிட்டது. ஏற்கனவே அமைச்சர் உதயநிதியோடும் முதல்வர் குடும்பத்தினரோடும் நெருக்கமாக இருக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்… மதுவிலக்கு துறையை பெறுவதற்கான ஆரம்பகட்ட காய் நகர்த்தல்களில் ஈடுபடத் தொடங்கி விட்டார் என்கிறார்கள் திமுக வட்டாரங்களில். இப்போது செந்தில்பாலாஜி நிர்வகிப்பதை விட டாஸ்மாக்கை தான் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் பகிர்ந்துகொண்டிருக்கிறார் அன்பில் மகேஷ்.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு 31ம் தேதி தான் சென்னை திரும்புகிறார். அவர் சென்னை திரும்பியதும் செந்தில் பாலாஜி தொடர்பான விவகாரங்கள் குறித்து கட்சி மற்றும் ஆட்சியின் முக்கியஸ்தர்களோடு நேரடி ஆலோசனை நடத்த இருக்கிறார். அதற்குப் பிறகுதான் இந்த விஷயத்தில் ஒரு முடிவுக்கு வர முடியும். அதுவரை இங்கே சிலரது சில முயற்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
IPL FINAL: டாஸ் வென்ற தோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தது ஏன்?
32 வயதில் கதாநாயகி : அனுபவம் பகிர்ந்த ராஜலட்சுமி