கேபினட் மாற்றம்: அமைச்சர் பிடிஆருக்கு கூடுதல் துறை!

அரசியல்

தமிழக அமைச்சரவையில் நாளை (டிசம்பர் 14) உதயநிதி ஸ்டாலின் புதிய அமைச்சராக  பதவியேற்க இருக்கும் நிலையில் மற்ற சில அமைச்சர்களின் துறைகளும் மாற்றப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்பு பலமாகிக் கொண்டே இருக்கிறது. 

இந்த வகையில் ஏற்கனவே  மின்னம்பலம் செய்தியில்,  அமைச்சர் ஐ. பெரியசாமியிடம் இருந்துவரும் கூட்டுறவுத் துறை,  அமைச்சர் பெரியகருப்பனிடம் கொடுக்கப்பட இருக்கிறது என்றும் அதேபோல பெரியகருப்பன் வசம் இருக்கும் ஊரக வளர்ச்சித்துறை பெரியசாமியிடம் மாற்றி தரப்பட இருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

மேலும்  அமைச்சர்கள் சேகர்பாபு, மதி வேந்தன், ராமச்சந்திரன் ஆகியோரது துறைகளிலும் மாற்றம் நடக்கவிருக்கிறது என்பதை தெரிவித்திருந்தோம்.  இந்த நிலையில் தமிழக நிதித் துறை அமைச்சரும் அவ்வப்போது பலத்த சர்ச்சைகளுக்கு  ஆளாகுபவருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அவர் தற்போது வகிக்கும் நிதித்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை, சிறைத் துறை  ஆகியவற்றோடு மேலும் ஒரு கூடுதல் பொறுப்பை அளிக்க இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் கோட்டை வட்டாரங்களில்.
பிடிஆர்  தொடர் சர்ச்சைகளில் அடிபட்டதையடுத்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரிடமிருந்த ஐடி விங் மாநில செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டது.   அவர் அமைச்சராக தொடர்ந்த போதிலும் அவருக்கு கட்சி ரீதியான முக்கியத்துவம் ஏதும் அளிக்கப்படவில்லை.  இதை அண்மையில் அவர் மதுரையில் ஒரு பேட்டியில்  வெளிப்படையாகவே குறிப்பிட்டார்.  சமீபத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் மதுரை மாநகர் மாவட்டத்திற்கு தன்னையோ தனது ஆதரவாளரையோ மாவட்ட செயலாளராக கொண்டுவரும்படி தலைமையிடம் கோரிக்கை வைத்து அதற்கான காய்களையும் நகர்த்தினார் பிடிஆர்.  ஆனால்  அதில் அவரால் வெற்றியடைய முடியவில்லை. 

இதன் பிறகு மாநில நிர்வாகிகள் நியமனத்தின்போது அமைச்சர் பிடிஆருக்கு திமுக மாநில சொத்து பாதுகாப்புக் குழு செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.  இந்த நிலையில் தற்போதைய அமைச்சரவை மாற்றத்தில் பிடிஆருக்கு அவர் தற்போது வைத்திருக்கும் துறைகளோடு கூடுதல் துறையும் தரப்பட இருக்கிறது.
அமைச்சர் ஐ. பெரியசாமி தற்போது கூட்டுறவுத் துறையுடன் புள்ளியியல் துறை, முன்னாள் ராணுவத்தினர் நலத்துறையையும் நிர்வகித்து வருகிறார்.  அவரிடமிருந்து கூட்டுறவுத்துறை பெரிய கருப்பனுக்கு அளிக்கப்படும் நிலையில் புள்ளியியல் துறையை  எடுத்து நிதியமைச்சர் பிடிஆர் வசம் அளிக்க இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்கிறார்கள் கோட்டை வட்டாரங்களில். 

கடந்த அதிமுக ஆட்சியில் புள்ளியியல் துறை முடங்கி இருந்தது என்றும் எந்த திட்டங்களுக்கும் தொடர்பான சரியான புள்ளிவிவரப்  பதிவுகள் இல்லை என்றும் தொடர்ந்து  வெளிப்படையாகவே பேசி வந்தார் பிடிஆர்.  இந்த நிலையில் அவருக்கு ஈடுபாடும்  விருப்பமும் மிக்க  புள்ளியியல் துறையை பிடிஆரிடமே  கொடுக்க முடிவு செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். 

எனவே பிடிஆருக்கு கூடுதலாக ஒரு துறை கிடைக்க இருக்கிறது.

வேந்தன்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: வெளுக்கப்போகும் மழை!

விவாகரத்து: சோகத்தில் ஹன்சிகா குடும்பம்!

+1
0
+1
2
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *