அமைச்சரவை மாற்றம் பற்றி எனக்கு எதுவும் தகவல் வரலை என்று முதல்வர் ஸ்டாலினே இன்று (ஆகஸ்டு 22) தெரிவித்துள்ளார்.
இன்று (ஆகஸ்டு 22) நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழக கொடியின் அறிமுக விழா நடந்துகொண்டிருந்தது. அனைத்து சேனல்களும் அதை நேரலை செய்துகொண்டிருந்த நிலையில்… ஆளுங்கட்சியான திமுகவின் அதிகாரபூர்வ டிவி சேனலான கலைஞர் நியூஸ் டிவி.யில், ‘இன்று அமைச்சரவை மாற்றம்’ என்று ஃபிளாஷ் நியூஸ் ஓடியது. உடனடியாக இதுகுறித்து பரபரப்பு தொற்றிக் கொண்டது.
கலைஞர் நியூஸ் டிவி யின் ஃபிளாஷ் செய்தியில், “ இன்று (ஆகஸ்டு 22) மாலை தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல். மூத்த அமைச்சர் ஒருவர் உட்பட மூன்று அமைச்சர்கள் மாற்றப்படலாம் என்றும் மூன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்றும் தகவல். அமைச்சரவை துறை ரீதியான மாற்றமும் இருக்கும்” என்று கலைஞர் டிவியில் செய்தி ஓடியது.
கலைஞர் டிவியில் அரசு பற்றிய செய்தி வந்தால், அதுவும் குறிப்பாக அமைச்சரவை மாற்றம் பற்றிய தகவல் வந்தால் முதல்வரின் கவனத்துக்கு செல்லாமல் வர வாய்ப்பில்லை என்றார்கள் அறிவாலய வட்டாரங்களில்.
இதை அடிப்படையாக வைத்து வெளியேறும் மூன்று அமைச்சர்கள் யார், உள்ளே வரும் மூன்று அமைச்சர்கள் யார்? முக்கியமாக பதவி பறிபோகும் அந்த சீனியர் அமைச்சர் யார் என்ற கேள்விகள் ஊடகங்களிலும் சமூக தளங்களிலும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இன்னொரு பக்கம், விஜய் கொடி அறிமுக விழாவின் மீது கவனம் குவிவதை தடுக்கும் உத்தி என்றும் சில விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த பின்னணியில் இன்று காலை மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ”முதல்வரிடம் நான் பேசினேன். அப்படி ஒரு மாற்றமும் இல்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று காலை எழிலகத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அமைக்கப்பட்ட நவீன முன்னெச்சரிக்கை மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலினிடம், “அமைச்சரவை மாற்றம் பற்றிய செய்திகள் வருகிறதே?’ என்று கேட்கப்பட, ‘எனக்கு வரலை” என்று பதிலளித்துள்ளார் முதலமைச்சர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
–வேந்தன்
தவெக கட்சி கொடி அறிமுக விழாவில் கண்கலங்கிய புஸ்ஸி ஆனந்த்!!
கண் அசைத்த அமித்ஷா… மத்திய அமைச்சராக இருந்து கொண்டே நடிக்க வருகிறார் சுரேஷ் கோபி!