சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளானது கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் மனு கொடுத்தார்.
ஸ்டாலின் டெல்லி சென்று வந்த நிலையில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்திற்கு 50 சதவிகிதம் நிதி ஒதுக்க வலியுறுத்தி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 3) மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது.
இந்த கூட்டத்தில் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கு ரூ.63,246 கோடி நிதிஒதுக்கி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மாதவரத்திலிருந்து சிப்காட் வரை 50 நிலையங்களுடன் 45.8 கிமீ நீள வழித்தடத்துக்கும்
கலங்கரை விளக்கத்திலிருந்து பூந்தமல்லி பைபாஸ் வரை 30 நிலையங்களுடன் 26.1 கிமீ நீளம், மற்றும் மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரை 48 நிலையங்களுடன் 47 கிமீ நீளம் என மூன்று வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்ட பின்னர் சென்னை மாநகரம் 173 கிமீ நீளமுள்ள மெட்ரோ ரயில் நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும்.
இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ வழித்தடம் சென்னையின் உள்கட்டமைப்பு வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தரும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்ததற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பதிவில், “எனது கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததற்கு நன்றி. தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இத்திட்டத்தை விரைவில் நிறைவேற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
பாஜகவுக்கு பிரச்சாரம் செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்.பி!
காலநிலை மாற்றம், பெண்ணுரிமை : ஐநாவில் சவுமியா அன்புமணி பேச்சு!