இடைத்தேர்தல் வெற்றியை எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாக தான் பார்க்கிறேன் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று 66,575 வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
அவரைத்தொடர்ந்து அதிமுக சார்பாக போட்டியிட்ட தென்னரசு 43,981 வாக்குகள் பெற்றுள்ளார்.
இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறுகையில், “வெற்றி கிடைக்கும் என்பது தெரியும். ஆனால் இவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.
மிகப்பெரிய அளவில் ஈரோடு மக்கள் வெற்றியை தந்துள்ளார்கள். இது எனக்கு கிடைத்த வெற்றி என்பதை விட முதல்வர் ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றியாக தான் பார்க்கிறேன்.
அதுபோல் எங்கள் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொண்டார். அதற்கு அங்கீகாரம் தரக்கூடிய வகையில் தான் இந்த வெற்றி அமைந்துள்ளது.” என்றார்.
அதிமுக தோல்வியின் காரணம்
மேலும் அவர், “அதிமுக பாஜக வினருக்கு கொத்தடிமையாக இருக்கின்ற காரணத்தால் தான் அவர்களுக்கு இவ்வளவு பெரிய தோல்வி ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை கிடைத்தால் போதும் வெற்றிபெறுவோம் என்று அவர்கள் நம்பியிருந்தால் அதைவிட கனவு காண்கிற விஷயம் வேறு எதுவும் கிடையாது.

என்னை ஆதரித்து கமல் சென்று பிரச்சாரம் செய்த இடங்களில் எல்லாம் பெருவாரியான எண்ணிக்கையில் மக்கள் வெற்றியை தந்துள்ளார்கள்.
கமலை ஒரு நடிகராக மட்டும் நான் பார்க்கவில்லை. அவரை சாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு பன்முகத்தன்மையை விரும்பும் மதசார்பற்ற மனிதராக தான் நான் பார்க்கிறேன்.
கமலின் மக்கள் நீதி மய்யம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணியில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.” என்றார்
மேலும், “வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெல்லும் என்பதற்கான முன்னோட்டம் தான் இந்த வெற்றி.
இந்த வெற்றியின் மூலம் பதவிகள் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஓட்டு போட்டு ஆதரவளித்த ஈரோடு மக்களின் குறைகளை சரிசெய்து, நல்லது செய்ய வேண்டும் என்றே நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ஈரோடு இடைத்தேர்தல்: 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி!
டிஜிட்டல் திண்ணை: மோடிக்கு பிரைவேட் மெசேஜ்… மேடையில் பப்ளிக் மெசேஜ்… ஸ்டாலின் வைக்கும் ட்விஸ்ட்!
தேர்தல் ஆணையர் நியமனம்… சரியான நேரத்தில் உச்சநீதிமன்றம் தலையீடு: ஸ்டாலின்