7 மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) நடைபெற்று வரும் நிலையில்… இவற்றில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலையில் இருக்கிறது.
தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி உட்பட இந்தியா முழுவதும் ஏழு மாநிலங்களில் 13 சட்டமன்றத் தொகுதிகளில் ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூலை 13) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்காளத்தில் 4, இமாச்சலப் பிரதேசத்தில் 3, உத்தரகண்டில் 2, பீகார், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒரு தொகுதி என 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் டெஹ்ரா தொகுதியில் இருந்து முதலமைச்சரும், காங்கிரஸ் தலைவருமான சுக்விந்தர் சிங் சுகுவின் மனைவி கமலேஷ் தாக்கூர் போட்டியிட்டார். அவர் தனது பாஜக போட்டியாளரான ஹோஷ்யார் சிங்கை விட முன்னிலையில் இருக்கிறார்.
உத்தரகண்ட் மாநிலத்தில், கடந்த ஆண்டு அக்டோபரில் மங்களூர் தொகுதி பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ சர்வத் கரீம் அன்சாரி இறந்தார். அதையடுத்து நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் குவாஷி நிசாமுதீன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளோடு முன்னிலையில் இருக்கிறார்.
பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தற்போது ஆளும் கட்சியான ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.
பிகார் இடைத்தேர்தல், சிட்டிங் எம்.எல்.ஏ பீமா பார்தி ஆர்ஜேடி கட்சிக்குத் தாவியதால் நடந்தது. இங்கே ஐக்கிய ஜனதா தளம் முன்னிலையில் இருக்கிறது.
தமிழகத்தின் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரான அன்னியூர் சிவா ஒன்பதாவது சுற்றில் 57 ஆயிரத்து 393 வாக்குகள் பெற்று மிகப் பெரிய வித்தியாசத்தில் வெற்றியை நோக்கிச் செல்கிறார். பாமக வேட்பாளர் அன்புமணி 24 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
நாடு தழுவிய அளவில், மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விக்கிரவாண்டி தேர்தல்: திமுக முன்னிலை… பட்டாசு வெடித்து நிர்வாகிகள் கொண்டாட்டம்!
வரிசைக்கட்டும் படங்கள்: போனியாகாத ஓடிடி… ‘வணங்கான்’ தப்புமா?