செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொள்வதில் சிக்கல் நீடித்து வருகிறது.
பண மோசடி வழக்கில் அமாலாக்கத் துறை பிடியில் செந்தில் பாலாஜி இருக்கிறார். நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஜூன் 15ஆம் தேதி இரவு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தள்ளுபடி செய்தார். அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை ஏற்று, ஜூன் 23 வரை காவலில் எடுக்க அனுமதி வழங்கினார்.
இந்த உத்தரவின் போது, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தலாம். காவேரி மருத்துவமனையில் இருந்து செந்தில் பாலாஜியை வெளியேற்றக் கூடாது.
செந்தில் பாலாஜிக்கு தரப்படும் சிகிச்சை முறை மற்றும் அவரது உடல்நிலைக்கு எந்த இடையூறும் ஏற்படும் வகையில் நடந்து கொள்ள கூடாது.
மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் குடும்ப உறுப்பினர்களை அமலாக்கத் துறை விசாரணையின் போது பார்ப்பதற்கு அனுமதிக்க வேண்டும். விசாரணையின் போது இடையூறு இருப்பதாக கருதினால் தாராளமாக செந்தில் பாலாஜி தரப்பு நீதிமன்றத்தை அணுகலாம்.
23ஆம் தேதி மாலை வரை காவலில் எடுத்து விசாரித்துவிட்டு, மீண்டும் மருத்துவமனையில் இருந்தவாறு காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த வேண்டும்” என்று நீதிபதி தெரிவித்தார்.
காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்து இரண்டு நாட்கள் ஆகியும் இன்னும் செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தமுடியாமல் சிக்கல் நீடித்து வருகிறது.
கடந்த ஜூன் 15ஆம் தேதி இரவு முதல் காவேரி மருத்துவமனை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சிகிச்சை செய்வதற்கான முதற்கட்ட சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
ஜூன் 16ஆம் தேதி காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், பைபாஸ் சிகிச்சை செய்வதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், மயக்க மருந்து கொடுக்க அவரது உடல் தகுதியாக இருக்கிறதா என சோதித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதுபோன்று, செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் ப்ளாக் இருக்கிறது, அவர் பயத்தில் இருக்கிறார் என்று காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தரப்பில் கூறுகின்றனர்.
வரும் 21ஆம் தேதி பைபாஸ் சர்ஜரி செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. 21ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அவர் சில தினங்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைபடி ஓய்வில் இருக்க வேண்டும்.
ஆனால் நீதிமன்றம் கொடுத்த காவல் அனுமதி 23ஆம் தேதியோடு நிறைவடைகிறது. இதனால் 23ஆம் தேதிக்குள் அமலாக்கத் துறையால் விசாரிக்க முடியுமா என கேள்வியும் எழுந்துள்ளது.
அதேசமயம், செந்தில் பாலாஜிக்கு என்ன சிகிச்சை கொடுக்கிறார்கள், என்னென்ன மருந்து கொடுக்கிறார்கள் என அமலாக்கத் துறையும் விசாரித்து வருகிறது.
இஎஸ்ஐ மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களிடமும் கேட்டறிந்து வரும் அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த கேள்விகளோடு தயாராக உள்ளது.
எனினும் இதுவரை செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் செய்யப்படுவதற்கான தேதி குறித்து அதிகாரப்பூர்வமாக காவேரி மருத்துவமனை அறிவிக்கவில்லை.
பிரியா
ஆளுநருக்கு எதிராக மதிமுக கையெழுத்து இயக்கம்!
பாஜகவில் அடுத்தடுத்து மூன்று பேர் கைது!