டிஜிட்டல் திண்ணை: இடைத்தேர்தல்- ஸ்டாலினுக்கு இரண்டு பரிட்சை! 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் வாட்ஸ் அப்பில் மெசேஜ்கள் வந்து விழுந்தன. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா ஜனவரி 4 ஆம் தேதி அகால மரணம் அடைந்த நிலையில் அது தொடர்பான அரசியல் கேள்விகள் அந்த மெசேஜில் இடம்பெற்றிருந்தன.

அவற்றைப் படித்துவிட்டு வாட்ஸ் அப் தனது பதில்களை மெசேஜ்களாக டைப் செய்தது.

 “காங்கிரஸின் 18 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா அகால மரணம் அடைந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம்  ஜனவரி 5 ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டபோது  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி  சத்ய பிரதா சாகுவிடம் செய்தியாளர்கள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அவர் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானது என்று தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு ஆறு மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். முறைப்படி அறிவிப்பு வந்த பிறகுதான் அதுபற்றி தெரியும்’ என்று பதிலளித்தார்.  

திமுக அரசு  மே 2021 இல் பதவியேற்று  முழுதாக 19 மாதங்கள் முடிந்து 20 ஆவது மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில்  ஆட்சி அமைத்த ஆறு மாதங்களில் இருந்தே திமுகவினரின் தொண்டர்களுக்கு இந்த ஆட்சியால் எந்த பயனும் இல்லை என்ற குமுறல் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தது. ஒரு கட்டத்தில் தொண்டர்களின் இந்த குமுறல் அதிகமாகிக் கொண்டே வந்தது. 

முந்தைய திமுக ஆட்சியைப் போல கட்சிக்காரர்களுக்கு அரசு வேலைகளோ, போக்குவரத்துக் கழகம், மின்சார வாரியம் போன்றவற்றில்  கடைநிலை வேலை வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை என்பது தான் கட்சியினரின் குரல். ஆனால் எதிர்க்கட்சியைப் போலவே ஆளுங்கட்சியான பிறகு கூட்டங்கள், கட்சி நிகழ்ச்சிகள் என தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

ஒரு கட்டத்தில், ‘எல்லா அரசு வேலைகளையும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவே நிரப்ப நிதியமைச்சர் பிடிஆர் அழுத்தம் கொடுக்கிறார். அப்படியென்றால் தேர்தல் வேலைக்கும் டிஎன்பிஎஸ்சி மூலமாகவே ஆள் எடுத்துக் கொள்வார்களா?’ என்ற திமுக கீழ் நிலை நிர்வாகிகளின் கேள்விகள் தலைமைக் கழக நிர்வாகிகள் மூலமாக ஸ்டாலினுக்கு சென்று சேர்ந்தது.

By elections two tests for Stalin

அதன் பிறகுதான் கடந்த மாதம் நடந்த தலையாரி தேர்வு அதாவது கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற்ற நிலையில் கட்சியின் கிளைச் செயலாளர்கள், அவர்களது உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று முதல்வர் அலுவலகத்தில் இருந்தே அமைச்சர்களுக்கு அறிவுறுத்தல்கள் சென்றன.

சீனியர்கள் அமைச்சர்கள் கூட, ‘ஒரு காரியமும் செய்யமுடியலை. எல்லாம் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதிகாரிகள் லாபிதான் முதல்வர் அலுவலகத்தில் எடுபடுகிறது. கட்சிக்காரர்களுக்காக நம்மால் எதுவும் பெரிதாக செய்ய முடியவில்லை.  ஆட்சிக்கு வந்து ரெண்டு வருசம் ஆகப் போகுது… ஏதாச்சும் ஒரு இடைத்தேர்தல் வந்தாதான் கட்சிக்காரங்க அருமை தலைமைக்கு புரியும் போலருக்கு’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். அது இப்போது பலித்துவிட்டது.

இப்படியாக கடந்த இருபது மாத ஆட்சியில் திமுக தொண்டர்கள் திருப்தியாக இல்லை என்ற நிலையில்தான் அடுத்த ஆறு மாதத்துக்குள் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் வர இருக்கிறது. ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணிக் கட்சி காங்கிரஸ் தான் ஈரோடு கிழக்கு தொகுதியை வைத்திருந்தது.  எனவே மீண்டும் காங்கிரஸ் தான் அங்கே போட்டியிடும் என தெரிகிறது. 

முதல்வருக்கு நெருக்கமானவர்களோ, ‘இப்போது நடைபெறும் ஆட்சியில் கட்சிக்காரர்களுக்கு பெரிய அளவு நன்மைகள் கிடைக்காவிட்டாலும் பொதுமக்களுக்கு திருப்தியாக இருக்கிறது.  பெண்களுக்கான இலவச பயணம் பொதுமக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான கடன் தொகைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன.  முதல்வரின் இமேஜ் பெரிய அளவு உயர்ந்திருக்கிறது.

அமைச்சர்கள் சொல்படி கேட்டிருந்தால் பொதுமக்கள் மத்தியில் ஆட்சிக்கு கெட்ட பெயர்தான் ஏற்பட்டிருக்கும். ஆனால் இப்போது பொதுமக்கள் ஆட்சியைப் பாராட்டுகிறார்கள் என முதல்வரைச் சுற்றியுள்ள அதிகாரிகள் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். முதல்வரும் அதை பெரிதாக நம்புகிறார்’ என்கிறார்கள்.

இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்பிருக்கிறது என்றாலும்  ஸ்டாலினுக்கு இது முக்கியமான பரிட்சையாகத்தான் அமையப் போகிறது.  தேர்தல் அன்று தான் மக்கள் ஓட்டு போடுவார்கள், ஆனால் அதுவரைக்கும் தேர்தல் பணிகளை கட்சிக்காரர்கள் தான் செய்ய வேண்டும்  அந்த வகையில்  தொண்டர்களின் திருப்தி, மக்களின் திருப்தி என ஒரே இடைத்தேர்தலில் இரண்டு பரிட்சைகளை சந்திக்க இருக்கிறார் ஸ்டாலின்” என்கிற மெசேஜை செண்ட் செய்தது வாட்ஸ் அப்.

அமைச்சர் மீதான சொத்துகுவிப்பு வழக்கு : நாளை தீர்ப்பு!

இந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வீர்களா?: முதல்வருக்கு வானதி சீனிவாசன் கேள்வி!

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *