காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவால் காலியான ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான திருமகன் ஈவெரா மாரடைப்பால் கடந்த 4 ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்தார். காலியான தொகுதிக்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும்.
இந்தநிலையில் நாகாலாந்து, மேகாலயா, திரிபுரா மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று(ஜனவரி 18)அறிவித்தது.
அதனுடன் சேர்த்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் அறிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது. மனுத்தாக்கலுக்கான கடைசி நாள் பிப்ரவரி 7.
இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 2,26,876 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் – 1,10,713, பெண்கள் – 1,16,140, மூன்றாம் பாலினத்தவர் – 23 பேர் ஆவர்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக சார்பில் நின்ற காங்கிரஸ் உறுப்பினர் திருமகன் ஈவெரா, அதிமுக சின்னத்தில் போட்டியிட்ட தமாகா உறுப்பினரை தோற்கடித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இது பெரும் எதிர்ப்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.
கலை.ரா
’ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்கு மேலும் ஒரு சர்வதேச விருது!
“அந்தக் காலத்தில் தமிழ்நாடு இல்லை” – மீண்டும் சர்ச்சையில் ஆளுநர்!