”தரமில்லாத பொருட்களை வாங்கினால்…” -அதிகாரிகளை எச்சரித்த அமைச்சர் எ.வ.வேலு

அரசியல்

சாலை பாதுகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், தரமற்ற பொருட்களை வாங்காதீர்கள், நல்ல தரமான பொருட்களை வாங்குங்கள் விபத்துகளை குறையுங்கள் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை எச்சரித்துள்ளார்.

சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து குறைப்பது சம்பந்தமாக நேற்று( ஜூன் 6) ஆம் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஆய்வு கூட்டத்தை நடத்தினர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு

கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வெ.கணேசன், கடலூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்களான ஐயப்பன், சபா ராசேந்திரன், சிந்தனைச் செல்வன், ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ், எஸ்.பி. ராஜாராம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப்யாதவ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் எஸ்.பி.ராஜாராம் அமைச்சர் வேலுவிடம் கோப்பு ஒன்றைக் கொடுத்தார். அது ராஜாராம் எஸ்.பி-யாக பொறுப்பேற்றதிலிருந்து மாதந்தோறும் விபத்துகள் குறைந்து வருவது பற்றிய ரிப்போர்ட்.

கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசும்போது, ”சாலை ஓரங்களில் விளம்பர பலகை மற்றும் பேனர்களை வைக்கக்கூடாது. இது அரசு எடுத்த முடிவு, அதுபோன்ற விளம்பர பேனர்களை வைக்காத அளவுக்கு பார்த்துக்கொள்ளுங்கள்” என்றார்.

அமைச்சர் கணேசன் பேசுகையில், ”திட்டக்குடி, பென்னாடம், தொழுதூர் பகுதியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அதிகமாக பாலங்கள் கட்டிக் கொடுத்துள்ளார். இன்னும் கொஞ்சம் மேம்பாலங்கள் கட்ட ஏற்பாடுகள் செய்தால் எங்கள் பகுதியில் விபத்துகள் குறையும்.

கடலூர் -பண்ருட்டி சாலையில் நெல்லிக்குப்பம் நகரப் பகுதியில் சாலை குறுகிப்போய் உள்ளது. அந்தப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்தினால் விபத்துகள் இன்னும் குறையும்” என்று ஆலோசனை கூறினார்.

”விக்கிரவாண்டி- கும்பகோணம் சாலை வேலையை விரைவாக முடித்தால் அவ்வப்போது நடக்கும் விபத்துக்களை குறைக்கலாம்” என்று சட்டமன்ற உறுப்பினர் சபா ராசேந்திரன் பேசும்போது தெரிவித்தார்.

”கடலூர் நகரப்பகுதியில் குறிப்பாக அரசு தலைமை மருத்துவமனை சாலையில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் டிராபிக் ஏற்பட்டு விபத்துகள் நடைபெறுகிறது” என்றார் ஐய்யப்பன்.

சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் பேசுகையில், ”வீராணம் ஏரி பகுதியில் பத்து கிலோமீட்டர் தூரம் சாலை அமைக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

Buy quality products Minister warned the authorities

அனைத்து எம்.எல்.ஏ -க்களின் குறைகளைக் கேட்ட தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ”பாலம் கட்டவேண்டும், சாலை போடவேண்டும் என்ற கோரிக்கைகளை பிறகு பேசுவோம். இப்போது விபத்துகள் குறைப்பது சம்பந்தமாகவும் சாலை பாதுகாப்பு விஷயமாகவும் பேசுவோம்” எனத் துவங்கியவர்,

”விபத்துகளை குறைப்பதில் கடலூர் மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலில் சென்னை , இரண்டாவது மயிலாடுதுறை, மூன்றாவது கடலூர் என்று உள்ளது. விரைவில் விபத்துகளை குறைப்பதில் கடலூர் மாவட்டம் முதலிடம் வரவேண்டும். வரும் என்ற நம்பிக்கையும் எனக்கு உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரமான பொருட்களை வாங்குங்கள். சாலை மற்றும் சாலை ஓரங்களில் பதிக்கப்படும் ரிப்ளக்டர்கள் தரமில்லாமல் உள்ளது. நான் எண்ணூர் தொழிற்சாலைக்குள் போயிட்டு வந்தேன். அங்கே இரண்டு தரத்தில் உள்ளதைப் பார்த்தேன்.

ரிப்ளக்டர் 100 ரூபாயிலும் உள்ளது, 400 ரூபாயிலும் உள்ளது. அந்த 400 ரூபாயில் உள்ள ரிப்ளக்டர் வாங்குங்கள். அதேபோல் சாலையில் உள்ள ஸ்பீடு பிரேக் பகுதியில் தரமற்ற வெள்ளை நிறத்தில் பெயின்ட் அடிக்கிறீங்க. ஆனால் அதற்கான தரமான பெயின்ட் உள்ளது. அதை வாங்கி அடியுங்கள். கார் மற்றும் பைக்கில் பயணம் செய்பவர்களுக்கு ஸ்பீடு பிரேக் இருப்பது தெரியாமல் விபத்துகள் ஏற்படுகிறது” என்று அதிகாரிகளை எச்சரித்தார் அமைச்சர்.

தொடர்ந்து, கடந்த காலங்களில் சாலை பாதுகாப்பு பணிக்கு பள்ளி, கல்லூரி மாணவர்களை இணைத்துக் கொள்வார்கள். எங்கே சி.இ.ஒ இருக்கிறாரா” எனக் கேட்டார் அமைச்சர். உடனே, சி.இ.ஓ எழுந்து நின்றதும், ”ஒகே, ஸ்கவுட், என்.சி.சி, என்.எஸ்.எஸ் மாணவர்கள் கணக்கு எடுத்து காவல்துறையினருடன் இணைந்து செயல்பட சொல்லுங்கள்” என அதிகாரிகளுக்கு ஒரு மணி நேரம் வகுப்பு எடுத்துவிட்டு புறப்பட்டார் அமைச்சர் வேலு. 

வணங்காமுடி

ஓசியில் பிரட் ஆம்லெட் கேட்டு தகராறு : 4 போலீஸார் இடைநீக்கம்!

கைவசம் அரை டஜன் படங்கள்: குஷியில் குந்தவை

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *