2026ல் சீமானுடன் விஜய் கூட்டணியா? : புஸ்ஸி ஆனந்த் பதில்!
சீமானுடன் கூட்டணி அமைப்பது குறித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தான் முடிவு செய்வார் என கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று (ஜூன் 9) தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டது. மேலும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலை புறக்கணித்து, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதே எங்களது இலக்கு என்று அறிவித்தார் விஜய்.
அதனையடுத்து தமிழ்நாட்டின் அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் அவர், சமூகவலைதளங்களில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதன்முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி அலுவலகம் புதுக்கோட்டையில் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திறந்து வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “நாம் தமிழர் கட்சியோடு கூட்டணி சேருவது குறித்து தலைவர் விஜய் தான் அறிவிப்பார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னமும் இரண்டு ஆண்டு காலம் உள்ளது. அவசரப்பட வேண்டாம்.
தமிழக வெற்றிக் கழகம் மக்களோடு இணைந்து மக்கள் பணியாற்றி வருகிறது. புதுக்கோட்டையைத் தொடர்ந்து அடுத்ததாக நாமக்கல்லில் மாவட்ட அலுவலகம் திறக்கப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் அடுத்த கூட்டம் வரும் 18-ம் தேதி கூட்டம் என்று எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இந்த தகவல் எப்படி வெளியானது என்று தெரியவில்லை. வரும்2026-ம் ஆண்டு தான் எங்களுடைய இலக்கு என்று ஏற்கனவே தலைவர் விஜய் அறிவித்து விட்டார்” என்று புஸ்ஸி ஆனந்த் பேசினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விமர்சனம் : பேட் பாய்ஸ் – ரைடு ஆர் டை!
”தீவிர அரசியலில் இருந்து விலகுகிறேன்” : கண்ணீருடன் விடைபெற்ற வி.கே.பாண்டியன்