அரசியல்வாதிகள் ஒரு கட்சியிலிருந்து இன்னொரு கட்சிக்கு செல்வதும், தொழிலதிபர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் இணைவதும் அரசியல் அரங்கில் எப்போதும் காணப்படக்கூடிய காட்சிதான்.
ஆனால் கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தலைவர் ஜே. பி. நட்டா சென்னை வந்தபோது மின்ட் சாலை பொதுக்கூட்டத்தில் அவரது முன்னிலையில் பாஜகவில் ஜெயபிரகாஷ் என்ற தொழிலதிபர் இணைந்தார்.
அவர் பாஜகவில் சேர்ந்தது திமுக மேல் மட்டத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பி இருக்கிறது. யார் இந்தத் தொழிலதிபர் ஜெயபிரகாஷ்? ஏன் இவ்வளவு விவாதங்கள்?
அக்னி குழுமம் என்ற பெயரில் பல்வேறு தொழில்களை செய்து வரும் ஜெயபிரகாஷ், அரசியல் ரீதியாகவும் பலத்த தொடர்புகளை கொண்டவர்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், அமைச்சர் சேகர்பாபுவுக்கும் மிகவும் நெருங்கியவரான ஜெயபிரகாஷ் மறைந்த அதிமுக அவை தலைவர் மதுசூதனனுக்கு மிகவும் நெருக்கமான உறவினரும் கூட.
ஒரு காலகட்டத்தில் சேலம் செல்வகணபதி, ஈரோடு முத்துசாமி தூத்துக்குடி மாவட்டம் அனிதா ராதாகிருஷ்ணன், சென்னையைச் சேர்ந்த சேகர் பாபு என அதிமுகவில் கோலோச்சிக் கொண்டிருந்தவர்களை ஜெயலலிதா இருக்கும்போதே ஸ்டாலினின் வேண்டுகோளுக்கு இணங்க திமுகவுக்கு கொண்டு வந்ததில் இந்த ஜெயபிரகாஷ்க்கு முக்கியமான பங்கு உண்டு.
ஸ்டாலினோடு அவ்வளவு நெருக்கமாகி திமுகவிலும் இருந்த ஜெயபிரகாஷ் தன்னால் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு முக்கிய பதவிகளையும் பெற்றுத் தந்தார்.
2021 திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஜெயபிரகாஷ் சற்று தள்ளி வைக்கப்பட்டதாகவே கூறுகிறார்கள் அவரை அறிந்த திமுக நிர்வாகிகள்.
இந்த நிலையில் தொழில் ரீதியாக பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டிருக்கிறார் ஜெயபிரகாஷ். வருமானவரித்துறை ஜெயபிரகாஷின் தொழில் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் அபராதம் விதித்தது.
மேலும் ப. சிதம்பரத்துக்கு சொந்தமான ஒரு நிலத்தை முட்டுக்காடு பகுதியில் ஜெயபிரகாஷ் வாங்கினார். அதை கிறிஸ்டி நிறுவனத்திடம் விற்றிருக்கிறார். இந்த பரிவர்த்தனைகளில் கருப்பு பணம் பரிமாற்றப்பட்டிருப்பதாக தகவல் பரவியது. இதை அறிந்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகிய இரு துறைகளும் ஜெயபிரகாஷை கண்காணித்தனர். ஒரு கட்டத்தில் இதன் அடிப்படையில் ப. சிதம்பரத்துக்கு எதிராக ஜெயபிரகாஷிடம் வாக்குமூலம் வாங்கவும் சில முயற்சிகள் நடந்தன.
இந்த நிலையில் தான் தொழிலதிபர் ஜெயபிரகாஷ் தனது சம்பந்தியான பெங்களூரு பாஜக எம்பி மோகன் மூலமாக தமிழ்நாடு பாஜகவில் ஜே. பி. நட்டா முன்னிலையில் இணைந்திருப்பதாக கூறுகிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
அகில இந்திய நீச்சல் கழகத்தின் தலைவராகவும் இருக்கும் ஜெயபிரகாஷ் அந்த ரீதியில் மத்திய விளையாட்டு துறை அமைச்சரான அனுராக் தாக்கூரையும் சமீபத்தில் சந்தித்திருக்கிறார்.
ஜெயலலிதா இருக்கும்போதே அதிமுகவில் மாவட்ட செயலாளராக இருந்தவர்களை கூட திமுகவுக்கு கொண்டு சென்றவர் ஜெயபிரகாஷ்.
இவர் இப்போது பாஜகவில் இணைந்து இருப்பதால் இவர் மூலமாக திமுகவில் இருந்து பெரும்புள்ளிகள் பாஜகவில் இணைவார்களா என்ற பேச்சும் திமுகவுக்குள்ளேயே எழுந்துள்ளது.
–வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
புதுப்பேட்டை, ஆடுகளம் பட வரிசையில் பைரி இருக்கும் : தரணி ராசேந்திரன்
செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை ஏற்றார் ஆளுநர்