Bus service stopped in Chennai Will driver posts be filled

சென்னையில் பேருந்து சேவை பாதிப்பு : ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?

அரசியல்

ஓட்டுநர் பற்றாக்குறையால் சென்னையில் பேருந்து சேவை பாதிப்பு  ஏற்படுவதால் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நிலவும் ஓட்டுனர் பற்றாக்குறை காரணமாக 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் 29.70 லட்சம் தடவை பேருந்து சேவை பாதிக்கப்பட்டதாக -புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக இன்று (அக்டோபர் 1)அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், “சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டுமொத்த சேவைகளில் ஆறில் ஒரு பங்கு சேவை, ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் நிறுத்தப்படுவது போக்குவரத்துத் துறைக்கு தலைகுனிவாகும்.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 3,454 பேருந்துகள் உள்ளன. அவற்றைக் கொண்டு ஒவ்வொரு நாளும் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 3,233 பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.

அவற்றை இயக்குவதற்காக மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் 8,487 ஓட்டுனர்கள் இருக்க வேண்டும். ஆனால், ஏராளமான ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் கடந்த ஆண்டில் ஒவ்வொரு நாளும் 500-க்கும் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனைகளிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தினமும் 500 பேருந்துகள் இயக்கப்படாததால் ஓராண்டில் 29.70 லட்சம் முறை  சென்னையில் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஒரு பேருந்தில் ஒவ்வொரு முறையும் சராசரியாக 75 பயணிகள் பயணிப்பதாக வைத்துக் கொண்டால், 2022-23ஆம் ஆண்டில் மட்டும் சென்னையில் 22.27 கோடி பேர் மாநகர பேருந்து சேவை கிடைக்காமல் அவதிப்பட்டிருப்பார்கள். இது போக்குவரத்துத் துறையின் கடமை தவறுதல் ஆகும்.

சென்னை மாநகர மக்களுக்கு பேருந்து சேவை வழங்க வேண்டியது தான் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் முதன்மை கடமை ஆகும். ஆனால், அதன் ஒட்டுமொத்த சேவையில் ஆறில் ஒரு பங்கு சேவை ஓட்டுனர் பற்றாக்குறையை காரணம் காட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்றால், மாநகரப் போக்குவரத்துக் கழகம் மக்களுக்கு சேவை செய்யும் தகுதியை இழந்து விட்டது என்று தான் பொருள். மக்களுக்கு சேவை செய்யும் விஷயத்தில் மாநகரப் போக்குவரத்துக்கழகம் செய்த இந்தத் தவறை மன்னிக்க முடியாது.

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்படாத பேருந்துகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் அதிகரிக்கக் கூடும். அதற்கு காரணம் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்துக் கழகங்களிலும் சேர்த்து சுமார் 700 பணியாளர்கள் ஓய்வு பெற்றனர்.

அவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதனால், நடப்பாண்டில் இன்னும் கூடுதலாக 100 பேருந்துகளை இயக்க முடியாமல் போகலாம். இதை சுட்டிக்காட்டி, 26.06.2023-ஆம் நாள் அறிக்கை வெளியிட்ட நான், அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களிலும் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், இன்று வரை ஒரே ஓர் ஓட்டுனரைக் கூட அரசு நியமிக்கவில்லை.

Bus service stopped in Chennai Will driver posts be filled

சென்னை மாநகரப் போக்குவரத்துக்கழகம் மட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள பிற அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவே தமிழக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2014-15ஆம் ஆண்டில் அரசுப் பேருந்துகள் ஒரு நாளைக்கு இயக்கப்பட்ட மொத்த தொலைவு 91.90 லட்சம் கி.மீ ஆகும். 2023 பிப்ரவரியில் இது 77.71 லட்சம் கி.மீ ஆக குறைந்து விட்டது. 9 ஆண்டுகளில் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் இயக்க தூரம் சுமார் 14.19 லட்சம் கி.மீ, அதாவது 15.59% வீழ்ச்சியடைந்திருக்கிறது.

இது போக்குவரத்துக்கழகங்களின் வரலாற்று வீழ்ச்சி ஆகும். அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால் இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 8 அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலும் ஒட்டுமொத்தமாக காலியாக உள்ள 30 ஆயிரத்திற்கும் கூடுதலான ஓட்டுனர், நடத்துனர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

பிரியா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஸ்ருதி ஹாசனின் “The Eye”: குவியும் விருதுகள்!

தூய்மை பணி : குப்பைகளை அள்ளிய பிரதமர், ஆளுநர், முதல்வர்கள்!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *