ரிப்பன் பில்டிங்கில் எரிந்த மேயர் அறை: ரீவைண்ட் ஆகும் இன்னொரு ‘தீ மேட்டர்’!  

Published On:

| By Aara

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் ஏடிஜிபி கல்பனா நாயக்கின் அலுவலக அறையில் கடந்த 2024 ஜூலை மாதம் தீ விபத்து ஏற்பட்டது. Burned Mayor Chamber Rewind

ஆனால், அது தீ விபத்தல்ல, ஆணையத்தில் நடந்த முறைகேடுகளை தட்டிக் கேட்டதற்காக திட்டமிட்டே நடத்தப்பட்ட சதிச் செயல் என கல்பனா நாயக் டிஜிபியிடம் புகார் கொடுத்தார். சமீபத்தில் இந்த  பகீர் செய்தி வெளியானது.

இதுகுறித்து டிஜிபி அலுவலகம் விளக்கம் அளித்தது. அதேபோல சீருடை பணியாளர் தேர்வாணையமும் விளக்கம் கொடுத்தது. இதுகுறித்து சிபிசிஐடி விசாரணையா அல்லது சிபிஐ விசாரணையா என்ற விவாதமும் அதிகாரிகள் மத்தியில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இதே போல 18 வருடங்களுக்கு முன்பு சென்னையை உலுக்கிய ஒரு தீ விபத்து ‘சம்பவம்’  அரசியல் வட்டாரங்களில்  ரீவைண்ட் செய்யப்பட்டு விவாதிக்கப்படுகிறது.  

2005-ஆம் ஆண்டு அப்போதைய துணை மேயரும் பொறுப்பு மேயருமான கராத்தே தியாகராஜன் பரபரப்பான நபராக அறியப்பட்டிருந்தார்.

அவர் மலேசியா சென்றிருந்த நேரத்தில் 2005 அக்டோபர் 10 ஆம் தேதி  துணை மற்றும் பொறுப்பு மேயரான கராத்தே தியாகராஜனின் அறை, மற்றும் உதவி பொறியாளர் அறை தீப்பிடித்து எரிந்தன.

இது தீ விபத்தாக அறியப்பட்டாலும் இதன் பின்னால் அரசியல் இருப்பதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.  

அப்போதைய மேயர் ஸ்டாலின் அதிமுக அரசு கொண்டுவந்த சட்டத்தால் மேயர் பதவியை துறந்ததால், அதிமுகவைச் சேர்ந்த துணை மேயர் கராத்தே தியாகராஜன் பொறுப்பு மேயராகவும் ஆனார்.  ஒருகட்டத்தில் கராத்தே தியாகராஜன் முதல்வர்  ஜெயலலிதாவுக்கு எதிராக திரும்பினார்.

அப்போது கராத்தே தியாகராஜனை தீவிரமாக கண்காணித்தது ஜெயலலிதா அரசு. ரிப்பன் பில்டிங்கில் இருக்கும் மேயரின் அறையில்  சில முக்கியமான ஆவணங்கள் நகலெடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பதாகவும்,  அது ஜெயலலிதாவுக்கே சிக்கலை ஏற்படுத்தும் என்றும் உளவுத்துறை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரிப்போர்ட் கொடுத்தது. Burned Mayor Chamber Rewind

இந்த நேரத்தில்தான் பொறுப்பு மேயர் கராத்தே தியாகராஜன் மலேசியாவில் இருந்தபோது, அவரது அறை மற்றும் உதவி பொறியாளர் அறை ஆகியவை தீப்பிடித்து எரிந்தன. இதில் பல ஆவணங்கள் சாம்பலாயின.  இந்த ஆபரேஷனை மேலிட உத்தரவின் பேரில் திட்டமிட்டவர் அப்போதைய உளவுத்துறை எஸ்.எஸ்.பி. சிவனாண்டியா என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்கில் தீ விபத்து ஏற்பட்டதால் அப்போதைய தீயணைப்புத்துறை இயக்குனரான ஏடிஜிபி ரேங்கில் இருந்த டோக்ரா ஐபிஎஸ் உடனடியாக சம்பவ இடத்தை பார்வையிட்டார்.

தீ விபத்து நடந்த இடத்தை தீயணைப்புத்துறை இயக்குனர் பார்வையிட்டதற்காக அவர் உடனடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். கடமையைச் செய்த ஒரே காரணத்துக்காக அவர் மீது ஏவப்பட்ட டிரான்ஸ்பர்  நடவடிக்கையே தீ விபத்தின் மேலான சந்தேகத் தீயை அன்று அரசியல் வட்டாரங்களில் அதிகப்படுத்தியது. Burned Mayor Chamber Rewind

தற்போதைய கல்பனா நாயக்கின் புகார் பற்றிய உரையாடல்களின் போது, இந்த  பழைய ரிப்பன் பில்டிங் தீயையும் ரீவைண்ட் செய்கிறார்கள் அரசியல் வட்டாரங்களில்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share