ஜூலை 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடல் எங்கே அடக்கம் செய்யப்படுவது என்ற விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பெரம்பூரில் இருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்று அவரது மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தார்கள்.
அதற்கு சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் காவல்துறையினரும் எந்த பதிலும் சொல்லாததால்…. இந்த உத்தரவாதம் கிடைக்கும் வரை ஆம்ஸ்ட்ராங்கின் உடலை வாங்க மாட்டோம் என்று குடும்பத்தினர் தெரிவித்துவிட்டனர்.
இதனால் போஸ்ட் மாடம் மற்றும் எம்பாம் செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் சார்பாக திரைப்பட இயக்குனர் பா. ரஞ்சித், பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் ஆகியோர் அதிகாரிகளிடம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்த இடம் வீடுகள் நிறைந்த குடியிருப்பு பகுதி என்பதால் அங்கே உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று மாநகராட்சி அதிகாரிகளும் குடும்பத்தினரிடமும் பா.ரஞ்சித் உள்ளிட்டவர்களிடமும் தெரிவித்தனர்.
ஆனால், ‘ மூப்பனார், விஜயகாந்த் ஆகியோருக்கு கொடுத்ததைப் போல இப்போதும் கொடுக்க வேண்டும்’ என்று ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் அழுத்தம் கொடுத்தார்கள்.
இந்த நிலையில் புரசைவாக்கம் முன்னாள் எம்எல்ஏவான ரங்கநாதனிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு இந்த விவகாரம் தொடர்பாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் பேசி அவர்களை சமாதானப்படுத்துமாறு கேட்டிருக்கிறார்.
இதையடுத்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரிடம் பேசியுள்ளார் எம்எல்ஏ ரங்கநாதன்.
அவர்களும் பகுஜன் சமாஜ் கட்சியினரும் பா. ரஞ்சித் உள்ளிட்ட ஆம்ஸ்ட்ராங்கின் நண்பர்களும் அவரது உடலை பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்திலேயே அடக்கம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் தொடுத்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக ஜூலை 7 காலை மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் தகவல் வந்தது.
இதை சுட்டிக்காட்டி ரங்கநாதன் தரப்பில், ‘முதலில் அவரது உடலை பெற்றுக் கொள்ளுங்கள். அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தை தொடர்ந்த நிலையில் தான் ஜூலை 6 ஆம் தேதி இரவு 9 மணிக்கு பிறகு ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கின் சகோதரிக்கு சொந்தமான இடம் மாதவரத்தில் இருப்பதாகவும் அங்கே அவரது உடலை அடக்கம் செய்யலாமா என்ற தகவல் ரங்கநாதனுக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதை உடனடியாக அமைச்சர் சேகர்பாபு மூலம் அரசுத் தரப்புக்கு தெரிவித்துள்ளார்கள். அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் அது நீர் பிடிப்பு மிக்க பகுதியாக இருப்பதால் அங்கே அடக்கம் செய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.
ஆம்ஸ்ட்ராங்கின் குடும்பத்தினர் வலியுறுத்தும் இடம் குடியிருப்பு பகுதி என்பதால் அங்கே உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் மாநகராட்சி அதிகாரிகள்… ஏதாவது ஒரு சுடுகாட்டில் ஆம்ஸ்ட்ராங் அடக்கம் செய்வதற்கு தனியாக இடம் கொடுக்கலாமா என்ற ஆலோசனையும் நடத்தினர்.
இந்த சூழ்நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடுத்த அவசர வழக்கு இன்று ஜூலை 7 காலை 8.30 மணிக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வேந்தன்
தன்னைக் கடித்த பாம்பை திருப்பிக் கடித்து உயிர் தப்பிய இளைஞர்!
காசாவில் ஐந்து ஊடகவியலாளர்கள் உட்பட 29 பேர் பலி!