கனிமொழி -தயாநிதி மாறன்- அழகிரி : கோபாலபுரம் குடும்பத்துக்குள் நட்டா வீசிய தோட்டா!

Published On:

| By Kavi

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா தனது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதன் முதலில் தமிழகத்திலிருந்து துவக்கி இருக்கிறார்.

தமிழகத்துக்கு நாங்கள் தரும் முக்கியத்துவம் எப்படிப்பட்டது என்பது இதிலிருந்து தெரியும் என்று கோவை மாவட்டம் காரமடையில் நேற்று நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பாஜக தேசிய தலைவர் நட்டா பேசுகையில் தமிழகத்துக்கு பிரதமர் மோடியின் அரசாங்கம் அளித்துள்ள நலத்திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டார்.

அதன்பிறகு திமுக மீதான தனது தாக்குதலை தொடங்கினார்.

“நரேந்திர மோடி தலைமையின் கீழ் நாடு பாதுகாப்பாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு என்னும் மாநிலம் பாதுகாப்பான கைகளில் இல்லை.

தமிழகத்தை ஆளும் திமுக என்பது ஒரு மாநில கட்சி அல்ல. அது ஒரு குடும்பத்துக்கு மட்டுமான கட்சி தான். மாநிலத்துக்கான நலன்களைப் பற்றி கவலைப்படுவதை விட குடும்பத்துக்கான நலன்களை பற்றியே அந்த கட்சி அதிகம் கவலைப்படும்.

குடும்பக் கட்சி என்பதிலும் அது முதல் குடும்பத்திற்கான கட்சி மட்டுமே. ஸ்டாலினுடைய சகோதரர்களுக்கோ சகோதரிகளுக்கோ அங்கே இடமில்லை. ஒரே ஒரு குடும்பத்துக்கான கட்சியாக மட்டுமே திமுக செயல் படுகிறது. கருணாநிதி அண்ட் சன்ஸ் என்பது தான் திமுகவாக இருக்கிறது.

டி எம் கே என்பதற்கு டி என்றால் டைனஸ்டி அதாவது குடும்ப ஆட்சி எம் என்றால் மணி பணம் பண்ணுதல் மட்டுமே. கே என்றால் கட்டப்பஞ்சாயத்து” என்று நட்டா விளக்கம் கொடுக்க மேடையில் இருந்தவர்களும் கூட்டத்தில் இருந்தவர்களும் ரசித்து சிரித்தனர்.

நட்டாவின் இந்த பேச்சு கலைஞரின் கோபாலபுரம் குடும்பத்துக்குள்ளேயே சலசலப்புகளை எழுப்பி விடும் அளவுக்கு இருக்கிறது என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

Bullet fired by Nadda at the gopalapuram

“திமுகவில் இருந்து 2014 லேயே அதாவது கலைஞர் திடமான உடல் நலத்தோடு இருக்கும்போதே ஸ்டாலினுடைய அண்ணன் மு.க. அழகிரி நிரந்தரமாக நீக்கப்பட்டார். இன்று வரை அவரால் கட்சிக்குள் திரும்ப முடியவில்லை. அவருடைய மகன் துரை தயாநிதியும் கட்சியில் எந்த செல்வாக்கையும் பெறவில்லை.

அதேபோல கலைஞரால் 2007 இல் மாநிலங்களவை உறுப்பினர் ஆக்கப்பட்ட கனிமொழி தற்போது திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டு இருக்கிறார். தன் குடும்பத்தின் கடுமையான எதிர்ப்பை மீறியும் கனிமொழியை முழுவதுமாக ஓரங்கட்ட முடியாது என்பதாலும்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் ஸ்டாலின். கனிமொழியை துணை பொதுச் செயலாளர் ஆக்கியதன் காரணமாகத்தான் உதயநிதிக்கு மிக விரைவில் அமைச்சர் பதவியும் அளிக்கப்பட்டது.

இப்போது திமுகவில் கனிமொழியை விட உதயநிதி தான் சகல அதிகாரங்களையும் சகல செல்வாக்கையும் பெற்றவராக இருக்கிறார்.

இவர்கள் மட்டுமல்ல கலைஞரின் மனசாட்சியாக செயல்பட்ட முரசொலி மாறனின் வாரிசு தயாநிதி மாறனுக்கும் கட்சியில் இப்போது பெரிய அளவில் செல்வாக்கு இல்லை.

இந்த பின்னணியில் அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோர் ஸ்டாலின் குடும்பத்தின் மீது வருத்தத்திலும் கோபத்திலும் இருப்பதை உணர்ந்துதான் ஜே. பி. நட்டா கோபாலபுரம் குடும்பத்துக்குள்ளேயே கோவையிலிருந்து கல் வீசி இருக்கிறார்.

ஏற்கனவே அண்ணாமலை தமிழகத்தில் ஒரு ஏக்நாத் ஷிண்டே உருவாகுவார் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். அங்கே உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரேவிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதையும் இங்கே உதயநிதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதையும் அண்ணாமலை ஒப்பிட்டு வருகிறார்.

இந்தப் பின்னணியில் கலைஞரின் குடும்ப வாரிசுகளான அழகிரி, கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரை தாண்டி ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகிய அவரது முதல் குடும்பம் மட்டுமே செல்வாக்கோடு இருப்பதை வெளிப்படையாக பேசியிருக்கிறார் நட்டா.

திமுகவை குடும்பக் கட்சி என்று விமர்சனம் செய்வது மிக மிக வழக்கமான ஒன்றாகிவிட்டது. ஆனால் குடும்பக் கட்சியிலும் முதல் குடும்பத்திற்கான கட்சி என்ற பாஜக தேசிய தலைவர் நட்டாவின் தோட்டா எங்கே எப்படி வெடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார்கள் பாஜக சீனியர் நிர்வாகிகள்.

ஆரா

மூக்கு வழியே கொரோனா தடுப்பு மருந்து: மருத்துவரின் முக்கிய அறிவுரை!

புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: மக்கள் அவதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.