பட்ஜெட் தாக்கல் : மொரார்ஜி தேசாய் சாதனையை முறியடிக்கும் நிர்மலா சீதாராமன்

அரசியல் இந்தியா

நேற்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய உள்ளார். இதன்மூலம் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்களின் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடத்தை பெற உள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் மறைந்த முன்னாள் துணை பிரதமர் மொரார்ஜி தேசாய் முதலிடத்தில் உள்ளார்.

முன்னாள் பிரதமர்கள் நேரு, லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்த போது மொரார்ஜி தேசாய் ஒட்டுமொத்தமாக 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஒட்டுமொத்தமாக 9 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். அவர் 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாக 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி 8 முறையும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 5 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த நிலையில் தான் ஏழாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார் நிர்மலா சீதாராமன். கடந்த 2019ஆம் ஆண்டு நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 5 முறை முழு பட்ஜெட்டையும், கடந்த பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார்.

இதன்மூலம் அவர் தொடர்ச்சியாக 5 முறை முழு பட்ஜெட்டும், ஒருமுறை இடைக்கால பட்ஜெட்டும் தாக்கல் செய்த முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாயின் சாதனையை முறியடிக்கவுள்ளார்.

தமிழகத்தில் இருந்து 6வது நிதியமைச்சர்!

மேலும் ஆர்.கே.சண்முகம் (கோவை), டி.டி.கிருஷ்ணமாச்சாரி (சென்னை), சி.சுப்பிரமணியம் (கோவை), ஆர்.வெங்கட்ராமன் (தஞ்சாவூர்) மற்றும் ப.சிதம்பரம் (சிவகங்கை) ஆகியோரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து மத்திய நிதி பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ஆறாவது நிதியமைச்சர் என்ற பெருமையையும் நிர்மலா சீதாராமன் (மதுரை) தக்கவைத்துள்ளார்.

நாடு சுதந்திரம் அடைந்து பிரதமராக நேரு பதவியேற்ற பின்பு முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் தாக்கல் செய்தார்.

கடந்த 2020ம் ஆண்டு பட்ஜெட் தாக்கல் செய்தபோது 2 மணி நேரம் 40 நிமிஷங்களுக்கு நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். இதுவே பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் ஒருவர் நிகழ்த்திய உரைகளில் மிக நீளமானது. அதனை இன்று முறியடிப்பாரா என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

சூர்யா பிறந்தநாள் : ரத்தம் தெறிக்கும் கிளிம்பஸ் வெளியிட்ட கார்த்திக்

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர்: டெல்டா பாசனத்துக்கு முன்கூட்டியே நீர் திறக்க வாய்ப்பு!

 

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *