Budget 2024 : ‘நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்’ : தமிழ்நாடு புறக்கணிப்பால் கொந்தளித்த ஸ்டாலின்
தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை மத்திய அரசின் பட்ஜெட் தந்துள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூலை 23) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் 2024ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் தமிழ்நாட்டுக்காக எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், “மைனாரிட்டி பாஜகவை மெஜாரிட்டி பாஜகவாக மாற்றிய ஒருசில மாநில கட்சிகளை திருப்திபடுத்தும் வகையில், அந்த மாநிலங்களுக்கு சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். அதையும் நிறைவேற்றுவார்களா என்பது சந்தேகம் தான்.
தமிழ்நாட்டுக்கு மெட்ரோ ரயில் திட்டம் என்று அறிவித்துவிட்டு, அதை கொடுக்காமல் இன்றுவரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல அந்த மாநிலங்களுக்கும் நடக்காது என்பதற்கான எந்த உத்தரவாதமும் கிடையாது.
தமிழ்நாடு இரண்டு மிகப்பெரிய பேரிடரை சந்தித்தது. 37 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு கேட்டோம். ஆனால் இதுவரை 276 கோடிதான் கொடுத்திருக்கிறார்கள். இது சட்டப்படி நமக்கு வர வேண்டும்.
இதில் என்ன வேடிக்கை என்றால், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் என இரண்டு மூத்த அமைச்சர்கள் வந்து பார்த்துவிட்டு சென்றனர். இருந்தும் வெள்ள நிவாரணம் தரவில்லை.
பாஜக ஆட்சியை தாங்கி பிடிக்கும் மாநிலங்களை தவிர மற்ற எல்லா மாநிலங்களையும் நிதியமைச்சர் மறந்துவிட்டார். தமிழ்நாடு என்ற சொல்லே நிதிநிலை அறிக்கையில் இல்லை.
பாஜக அரசின் சிந்தனையிலும், செயலிலும் தமிழ்நாடு இல்லை. பட்ஜெட் என்பது எல்லா மாநிலங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஆனால் இந்த நிதிநிலை அறிக்கையில் நீதி இல்லை. அநீதிதான் அதிகமாக இருக்கிறது.
அரசியலை தேர்தல் களத்தில் பார்த்துகொள்ளலாம்… இப்போது நாட்டுக்காகவும் எல்லோரும் இணைந்து செயல்படலாம் என்று பிரதமர் மோடி நேற்றுதான் சொன்னார்.
ஆனால் அவர் சொன்னதற்கு எதிராக அவரது அரசின் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
டெல்லியில் வரும் 27ம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி அயோக் கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து மாநில முதல்வர்கள் கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் நானும் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்தேன். ஆனால் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசின கூட்டத்தை நான் புறக்கணிக்க உள்ளேன். நாளை நமது எம்.பி.க்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளனர். அதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
நாம் தமிழர் சீமான்… அணிவகுக்கும் ஆடியோக்கள்… அடுத்து வரும் வீடியோக்கள்! அதிர்ச்சிப் பின்னணி!
பட்ஜெட் : தென்மாநிலங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதா?