சிறப்பு நிதியாக ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியும், பீகாருக்கு ரூ.26,000 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) காலை சரியாக 11 மணிக்கு தாக்கல் செய்ய தொடங்கினார்.
அதில் பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர பெரும் ஆதரவு கொடுத்த சந்திரபாபு நாயுடுவின் ஆந்திராவிற்கும், நிதிஷ்குமாரின் பீகாருக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு பெருமளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
பீகாருக்கு ரூ.60 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!
அவர் தனது உரையில், ”பீகார் மாநிலத்தில் சாலைகள், மேம்பாலங்கள் அமைக்க ரூ.26,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பீகாரில் 2,400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் ஆலைகள் அமைக்க ரூ.21,400 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
பீகாரில் வெள்ள தடுப்பு மற்றும் பேரிடர் நிவாரணமாக ரூ.11,500 கோடி நிதி வழங்கப்படும்.
புதிய விமான நிலையம், சாலைகள், மேம்பாலங்கள்அமைக்கப்படும். உட்கட்டமைப்பை மேம்படுத்த, வங்கிகள் வழியாக நிதி வழங்கப்படும். புதிய மருத்துவக் கல்லூரிகள், விளையாட்டு உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.
பீகார் மாநிலம் கயாவில் புதிய தொழில் வழித்தடம் அமைக்கப்படும். இந்த நடவடிக்கை கிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும்.
கயாவில் உள்ள விஷ்ணுபோது கோயிலும் மற்றும் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலும் உலகத் தரம் வாய்ந்த பாரம்பரியச் சின்னமாக மாற்றப்படும்.
நாளந்தா பல்கலைக்கழகத்தை புத்துயிர் அளிப்பதோடு, நாலந்தாவை சுற்றுலா மையமாக மேம்படுத்தவும் மத்திய அரசு உதவும்” என்று தெரிவித்தார்.
ஆந்திராவிற்கு ரூ.15 ஆயிரம் கோடி!
தொடர்ந்து, “ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் கனவுத்திட்டமான பொலாவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு நிதி வழங்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
பன்னாட்டு நிதியகங்கள் மூலம் ஆந்திர தலைநகர் அமராவதிக்கு கூடுதல் நிதியாக ரூ.15,000 கோடி வழங்கப்படும்
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் உள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற எங்கள் அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மாநிலத்தின் மூலதனத் தேவையை உணர்ந்து, பலதரப்பு ஏஜென்சிகள் மூலம் சிறப்பு நிதி உதவியை வழங்குவோம்” என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பட்ஜெட் 2024 : வேளாண் துறைக்கு ரூ. 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு!
கள்ளுக் கடைகளைத் திறக்கச் சொல்வது நீதி ஆகுமா ?