பாஜகவுடன் கூட்டணி முறிவு : அதிமுக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

Published On:

| By Kavi

Breaking alliance with BJP AIADMK

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் முடிவெடுத்து அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதிமுகவுக்கும் மாநில பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் எம்.பி.க்கள் கூட்டம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து  இன்றைக்கு இல்லை என்றைக்கும் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்று அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

Breaking alliance with BJP AIADMK

கூட்டம் முடிந்த பின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் செய்தியார்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய கே.பி.முனுசாமி,

“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த ஒருவருட காலமாக திட்டமிட்டே, வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், எங்களுடைய கழக தெய்வங்களான பேரறிஞர் அண்ணா, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவையும் அவதூறாகப் பேசியும், எங்களின் கொள்கைகளை விமர்சித்தும் வருகின்றது.

மேலும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமை, கடந்த 20.08.2023 அன்று மதுரையில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க,

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை” சிறுமைப்படுத்தியும்,

2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களை வழிநடத்தி வரும், எங்கள் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ எடப்பாடி பழனிசாமியை பற்றி அவதூறாக விமர்சித்தும் வருகிறது.

Breaking alliance with BJP AIADMK

இந்தச் செயல், அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கொந்தளிப்பான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் இன்று மாலை (25.9.2023 – திங்கட் கிழமை), பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற, மாவட்டக் கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில்,

2 கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இன்று முதல்,

பாரதிய ஜனதா கட்சியில் இருந்தும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தும் விலகிக் கொள்கிறது என்று ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது” என்று அறிவித்தார்.

அதிமுக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடி வருகின்றனர். அதிமுகவினர் ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி, நடனமாடி கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக தலைமை அலுவலகம் விழாக் கோலம் பூண்டது போல் காட்சி அளிக்கிறது.

பிரியா

படங்கள் : கிட்டு

”அதிமுக – பாஜக கூட்டணி முறிவு துரதிர்ஷ்டவசமானது”: ஜி.கே.வாசன்

பாஜகவுடன் கூட்டணி இல்லை: அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் முடிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel