டெல்டா மாவட்டங்களில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கலைஞர் பயின்ற திருக்குவளையில் உள்ள பள்ளியில் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை இன்று (ஆகஸ்ட் 25) துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி கடந்த வருடம் தொடங்கப்பட்டது தான் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம். 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்துக்காக, 2023-24 நிதியாண்டில் ரூ.404.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்த அரசாணையும் வெளியாகியிருந்தது.
முன்னதாக, முதல் கட்டமாக தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் செயல்பட்டு வரும் 1,545 தொடக்கப் பள்ளிகளில் ரூ.33.56 கோடியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் 1.14 லட்சம் மாணவ-மாணவிகள் பயன் அடைந்து வந்த நிலையில், மாணவர்களின் வருகைப்பதிவும் அதிகரித்தது தெரியவந்தது.
அதனால், இந்த திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்ய முதல்வர் முடிவு செய்தார். இந்நிலையில், 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், இன்று (ஆகஸ்ட் 25 ) ஆம் தேதி முதல், மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மறைந்த முதல்வர் கலைஞர் பயின்ற திருக்குவளை பள்ளியில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் குழந்தைகளிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த திட்டம் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
அசத்தல் விலை: வந்தாச்சு ஹீரோ கிளாமர் 125 பைக்!