”குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி என்பது, 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின் அம்சம்” என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும்,
காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் விதி 110ன்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, சில மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை,
பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டுதல்களுடன் அரசாணைகள் வெளியிடப்பட்டன.
அதன்படி அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளான இன்று (செப்டம்பர் 15) மதுரையில் கீழ அண்ணாதோப்பு பகுதியில் அமைந்துள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர், குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டியைப் பரிமாறியதுடன், அவர்களுடன் அமர்ந்தும் உணவருந்தினார்.
இந்தத் திட்டம் குறித்துப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “இன்று குழந்தைகள் காலை உணவு உண்ணும்போது அவர்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி எனக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த திட்டம் அனைத்துப் பள்ளிக்கும் விரைவில் நிறைவேற்றப்படும். இந்த திட்டத்தை இலவசம் என்றோ, சலுகை என்றோ யாரும் நினைக்கக்கூடாது.
இது கடமை. இந்த திட்டத்தால் பள்ளி செல்லும் மாணவர்களின் கல்வி விகிதம் அதிகரிக்கும்.
இடைநிற்றல் குறையும். இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் மாணவர்கள் வாழ்வில் உயர்ந்தால் அதுதான் இந்த அரசின் சாதனை” எனத் தெரிவித்திருந்தார். இந்த திட்டத்துக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பாராட்டு தெரிவித்திருந்தார். அவர், ”அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும்” என பாராட்டியிருந்தார்.
அதுபோல் தமிழக அரசின் இந்த காலை சிற்றுண்டி திட்டமும் ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டாகியது. #TNBreakfast எனும் ஹேஸ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது.
இந்த நிலையில், ”குழந்தைகளுக்கான காலை சிற்றுண்டி என்பது, 2020ல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கையின் அம்சம்” என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தெலுங்கானா மாநில ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் இன்று (செப்டம்பர் 15) ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேசிய கல்விக் கொள்கை மதிய உணவோடு காலை சிற்றுண்டி குழந்தைகளுக்கு கொடுக்க வலியுறுத்துகிறது.
தாய்மொழி உணர்வோடு கூடிய உலகத்தரம் வாய்ந்த கல்வி, காலை, மதிய உணவோடு கற்பிக்கப்படுவதனால் வளமான, வலிமையான பாரதத்தை எதிர்கால சந்ததிக்கு உருவாக்குவோம்” என அதில் பதிவிட்டுள்ளார்.
ஜெ.பிரகாஷ்
காலை உணவு திட்டம் எப்படி உதித்தது? முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!