முரசொலி செல்வம் மறைவுக்கு செல்வப்பெருந்தகை, அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கலைஞரின் மருமகனான முரசொலி செல்வம், கடந்த 50 ஆண்டுகளாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
அவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரில் இன்று காலை காலமானார்.
அவர் உடல் இன்று கோபாலபுரத்துக்கு கொண்டுவரப்பட்டு தொண்டர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முரசொலி செல்வத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்!
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “திராவிட இயக்க முன்னோடியும், முத்தமிழறிஞர் கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வம் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
முரசொலி பத்திரிகையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி அந்நாளிதழை மேம்படுத்தியவர். முரசொலி பத்திரிகையின் நிர்வாக ஆசிரியராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்தவர். முரசொலியில் சிலந்தி என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளை எழுதி, திராவிட இயக்க கொள்கைகளை பரப்பியவர்.
முரசொலிக்கு எதிரான ஆட்சியாளர்களின் அடக்குமுறையையும், வழக்குகளையும் துணிவுடன் எதிர்கொண்டவர். முரசொலி செல்வம் மறைவு திராவிட முன்னேற்ற கழகத்திற்கும், முரசொலி நாளேட்டிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரை இழந்து வாடும் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.கழக நண்பர்களுக்கும் மற்றும் முரசொலி ஆசிரியர் குழுவினர் மற்றும் பணியாளர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.
பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்!
அதே போன்று தமிழக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தங்கை கணவரும், முரசொலி மாறன் அவர்களின் சகோதரரும், முரசொலி நாளிதழின் முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன்.
முரசொலி செல்வம் குடும்பத்தினருக்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். முரசொலி செல்வம் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!” என குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
முரசொலி செல்வம் மறைவு: திமுக கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட உத்தரவு!