சட்டமன்றக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதா இல்லை பங்கேற்பதா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக சட்டமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று(அக்டோபர் 17) தொடங்கியது. இரங்கல் தீர்மானத்துக்குப் பிறகு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை.
அதே சமயம் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு பழைய இருக்கைகளே ஒதுக்கப்பட்டு இருந்தன.
ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று சபாநாயகருக்கு ஏற்கனவே 2 முறை கடிதம் கொடுத்திருந்தார் எடப்பாடி பழனிசாமி.
ஆனால் அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஓ.பன்னீர்செல்வத்துக்கு பழைய இடத்திலேயே இருக்கை ஒதுக்கியதால் எடப்பாடியும், அவரது ஆதரவாளர்களும் சட்டமன்ற கூட்டத்தொடரை புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர், அதிமுக 51 ஆவது ஆண்டுவிழா கொண்டாட்டம் இருப்பதால் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று தகவல் வந்ததாகக் கூறினார்.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்ட பிறகு வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றமே எதிர்க்கட்சி துணைத் தலைவராக என்னை அங்கீகாரம் செய்ததை பாசிட்டிவாக பார்க்கிறேன் என்றார்.
இது எடப்பாடி தரப்பை மேலும் கோபமடைய செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி உடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
கே.பி முனுசாமி, எஸ்.பி வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உட்பட பல முக்கிய நிர்வாகிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
இரு நாட்களே நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்கலாமா அல்லது புறக்கணிக்கலாமா என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக அதிமுக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.
கலை.ரா
அதிமுக 51-வது துவக்கவிழா: எடப்பாடி – பன்னீர் தனித்தனியே கொண்டாட்டம்!
காங்கிரஸ் தலைவர் தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு!