முரளி சண்முகவேலன்
லண்டனிலிருந்து முரளி சண்முகவேலன் எழுதும் தொடர்
காலனியக் கருத்தியல்கள் ஊடகங்களில் கலாச்சாரப் பண்டங்களாக நுகரப்பட்டு வருகிறது என்று போன வாரம் எழுதி முடித்திருந்தேன்.
ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, கனடா, நியூசிலாந்து நாடுகளைச் சேர்ந்த ஊடகங்களில் ‘பார்டர் செக்யுரிட்டி’ (எல்லைப் பாதுகாப்பு / border security), ‘நத்திங் டு டெக்ளேர்’ (மடியில் ஒன்றுமில்லை / nothing to declare) என்ற தலைப்புகளில் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகப் பிரசித்தம். இந்த நிகழ்ச்சிகளின் தொடர்ந்து வெளிப்படும் ஒரு பொதுவான கரு, வளரும் நாடுகளிலிருந்து பிரயாணம் செய்து மேற்குலகுக்கு வரும் நபர்களின் ‘உண்மையான’ நோக்கத்தைக் கண்டறிவதாகும். அதாவது வெள்ளையரல்லாத பிரயாணிகள் வெள்ளை நாடுகளில் குடியேறுவதைத் தடுப்பது பற்றிய ரியலிட்டி ஷோ நிகழ்ச்சி.
இம்மாதிரியான நிகழ்ச்சிகளின் (ஊடக) அரசியல் நோக்கமானது வெள்ளையரல்லாத நாடுகளிலிருந்து வரும் பிரயாணிகளின் வருகை குறித்த நோக்கங்களை சந்தேகத்துக்கு உட்படுத்தி, அன்னார்களின் சுயமரியாதையையும் கேள்விக்குள்ளாக்கி, அவர்களைத் திரும்பி அனுப்புவது பற்றியதாகும். உள்ளபடியே, மேற்குலகிற்கு வரும் சிலர் தங்களது வருகைகளுக்குப் பொய்க் காரணங்கள் சொன்னாலும், அவர்களை நடத்தும் விதம் மிகவும் கேள்விக்குரியது. இந்நிகழ்ச்சிகளின் பிரபலமே வெள்ளை உலகம் மற்றவர்களை நடத்தும் விதத்திலும், பொய்ப் பிரயாணிகளைக் கண்டறியும் முறையிலும், வெள்ளை அதிகாரத்தை உயர்த்திப் பிடிப்பதிலும் உள்ளது.
புனிதமான’ வெள்ளை எல்லை
சுருக்கமாகச் சொன்னால் பார்டர் செக்யுரிட்டி நிகழ்ச்சியின் கருவானது வெள்ளை இனத்தைச் சாராதவர்கள் மேற்குலகிற்கு வரும் போது அவர்களின் வருகையை வெள்ளை அரசாங்கம் சந்தேகிப்பது பற்றியதாகும். ஏனெனில், ‘வெள்ளை எல்லை புனிதமானது’.
பார்டர் செக்யுரிட்டி (அ) நத்திங் டு டிக்ளேர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மேற்கத்திய நாடுகளில் மிகவும் பிரசித்தி பெற்றவை. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் இந்நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படுவது கிடையாது என்பது யதேச்சையானதல்ல (ஆனால் யூட்யுபில் காணக் கிடைக்கிறது). உலகமயமாக்கல் என்னும் குடையின் கீழே பல்வேறு மேற்கத்தியத் தொலைக்காட்சிகளும் ஹாலிவுட் திரைப்படங்களும் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் சூழலில் இந்த நிகழ்ச்சி மட்டும் ஏன் ஒளிபரப்பப்படாமல் இருக்கிறது? காரணம், இந்நிகழ்ச்சி வெள்ளையரல்லாதோரின் சுயமரியாதையை எள்ளல் செய்யும் ஒரு காலனியத் தொலைக்காட்சி நிகழ்ச்சி.
அதே சமயம், இந்நிகழ்ச்சி பிரிட்டனில் தினசரி ஒளிபரப்பப்படுகிறது. அதாவது ‘பார்டர் செக்யுரிட்டி’ பிரிட்டன் வீடுகளில் ஒரு (ரியலிட்டி) டிவி சீரியல். இந்நிகழ்ச்சிகள் வெள்ளைக் காலனியத்தின் பெருமிதக் கொடியைப் பறக்கவிட்டு, கறுப்பர்கள் அல்லது வெள்ளையரல்லாதோர்களை இரண்டாந்தரக் குடிகளாகப் பார்வையாளர்கள் முன் நிறுத்துகிறது.
வளரும் நாடுகளிலிருந்து வரும் மக்கள் அல்லது வெள்ளை இனத்தவரல்லாத குடிகள், மேற்கு நாடுகளில் தங்கி விடுவார்களோ என்ற அச்சமே பார்டர் செக்யுரிட்டி போன்ற நிகழ்ச்சிகளின் கரு. இந்நிகழ்ச்சிகள் பூமியின் சில பகுதிகளை வெள்ளையாகப் பாதுகாக்கும் முயற்சியின் அடிப்படையில் இயங்குகிறது.
அது மட்டுமல்லாமல் வளரும் நாடுகளிலிருந்து மேற்குலகிற்கு வரும் பிரயாணிகள் போதைப் பொருட்கள், தடை செய்யப்பட்ட உணவுப் பொருட்களை உள்ளே ‘கடத்தி’ வந்துவிடுவார்களோ (ஆஸ்திரேலியாவில் இலவங்கப் பட்டை தடை செய்யப்பட்ட பதார்த்தம்!), அதனால் நம் மண்ணுக்கு பாதிப்பு விளைந்துவிடுமோ என்பதையும் படப்படப்புடன் ‘பார்டர் செக்யுரிட்டி’ ரியலிட்டி டிவி ஒளிபரப்புகிறது.
வெள்ளை நாடுகளில் எல்லை என்பது ஒரு தேசத்தின் இறையாண்மை சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அது காலனியத்தின் வெளிப்பாடாகவே இருந்து வருகிறது என்றால் மிகையல்ல.
தேச எல்லைகளும் நாகரிகமும்
மனித சமுதாயத்தின் நாகரிகங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் தேச எல்லை என்பது ஒரு முரணாகும். அறிவியலின் கூற்றுப்படி நாம் அனைவரும் கிழக்கு ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித குலத்தின் வழித்தோன்றல்களே. ஆக இன்று செழித்து வரும் மனித குலம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. எல்லை அரசியலுக்கு எதிரானது. எல்லைகள் மனித குலத்தின் நாகரிக வளர்ச்சிக்கு எதிரானவை. காலனிய ராச்சியங்களான பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுக்கல், பெல்ஜியம் போன்ற நாடுகள் பிற நிலங்களில் காலூன்றிய போது எல்லைகள் எதுவும் மதிக்கப்படவில்லை. ஐரோப்பியர்களின் ‘எல்லை’ மீறலால் நடந்த நிகழ்வே இன்றைய வட அமெரிக்கச் சமுதாயம். நமது தெற்காசிய நாடுகள்கூடக் காலனிய எல்லை மீறலின் உருவாக்கமே. இன்று உலகம் முழுவதும் உள்ள எல்லை அரசியலில் காலனியக் கருத்தியலின் நச்சு உள்ளது என்றால் மிகையல்ல. அதிலும் மேற்குலக ஊடகங்களின் இனவெறிப் பங்கினைக் குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.
ஆக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாவதின் நோக்கம்தான் என்ன? மேற்கத்திய வெள்ளை நாடுகளின் விமான /கடல் எல்லைகளை, வளரும் நாடுகளிலிருந்து வரும் குடியேறிகளிடமிருந்து காக்க வேண்டும் என்று சீரியல் வாயிலாகச் சொல்லும் மேற்குலகின் ஊடக அரசியல் என்ன? அதை ஒரு தினசரி ஊடக நாடகமாக ஒளிபரப்புவதினால் என்ன பயன்?
அடுத்த வாரம் பார்க்கலாம்.
கட்டுரையாளர் குறிப்பு: முரளி ஷண்முகவேலன்
[முரளி ஷண்முகவேலன்](https://mobile.twitter.com/muralisvelan) – ஊடக மானுடவியல் ஆய்வாளர் – லண்டன் பல்கலைக்கழகம் – ஸ்கூல் ஆஃப் ஓரியண்டல் & ஆஃப்ரிக்கன் ஸ்டடீசில் , சாதி மற்றும் தகவல்தொடர்பு குறித்து ஆய்வு மேற்கொண்டிருப்பவர்.
(தொடரின் அடுத்த பகுதி வரும் புதன்கிழமை…)
கட்டுரை 1: [பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?]
கட்டுரை 2: [விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?]
கட்டுரை 3: [காலனியமும் சேவை நிறுவனங்களும்]
கட்டுரை 4: [காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்]
கட்டுரை 5: [சாம் செல்வன்; டரினிடாட் தமிழர்]
கட்டுரை 6: [சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்]
கட்டுரை 7: [ஈழ அரசியலும் காலனியத்துவமும்]
கட்டுரை 8: [கலைஞரும் காலனியமும்]
கட்டுரை 8: [காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும்!]