பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக நாளை (ஏப்ரல் 8) தமிழ்நாட்டிற்கு வரவுள்ளார். அதனை முன்னிட்டு முதுமலையில் உள்ள பொம்மன்-பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 3 மணியளவில் சென்னை விமான நிலையத்திற்கு வருகிறார் பிரதமர் மோடி. அங்கு ரூ.1,260 கோடி மதிப்பீட்டில் அதிநவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டிருக்கும் ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை தொடங்கி வைக்கிறார்.

மாலை 4 மணியளவில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சென்னை – கோவை இடையேயான வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
மேலும் தாம்பரம் – செங்கோட்டை இடையேயான விரைவு ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு ரயில்வே திட்டங்களையும் துவக்கி வைக்கிறார்.
அதன்பின்னர் காரில் புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார்.
பின்னர் பல்லாவரம் ஆல்ஸ்ட்ராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்னர் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர், இரவு 8.45 மணிக்கு தனி விமானம் மூலம் கர்நாடகாவின் மைசூருக்கு செல்கிறார்.
2வது நாள் பயண விபரம்
மறுநாள் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7.15 மணிக்கு பந்திப்பூர் சரணாலயத்தைப் பார்வையிடுகிறார்.
பிறகு ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி மாவட்டம் மசினக்குடிக்கு வருகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.
அங்கு சமீபத்தில் ஆஸ்கர் வென்ற ‘தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளி தம்பதியைப் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கிறார்.

பிரதமரின் பயணத் திட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தீவிர பாதுகாப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளையில் முதுமலையில் பிரதமர் சந்திக்க உள்ள பொம்மன் – பெள்ளி தம்பதிக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்தம்பதியை சந்திக்க வரும் அனைவரும் சோதனைக்கு பின்னரே தற்போது அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
நம்பியை தொடர்ந்து ஜி.டி.நாயுடுவாக உருமாறும் மாதவன்
பேனா நினைவு சின்னம்: மத்திய அரசுக்கு பொதுப்பணித்துறை கடிதம்!