கர்நாடகா தேர்தல் ரிசல்ட்: பாஜக சொல்வது என்ன?

Published On:

| By Selvam

கர்நாடகாவில் பாஜக தோல்வியை முன்னேற்றத்திற்கான சவாலாக எடுத்துக்கொண்டு 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு மே 10-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. தொடக்கம் முதலே காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

மதியம் 3 மணி நிலவரப்படி பாஜக 20 தொகுதிகளில் வெற்றி, 42 தொகுதிகளில் முன்னிலை, காங்கிரஸ் 48 தொகுதிகளில் வெற்றி 87 தொகுதிகளில் முன்னிலை ஐக்கிய ஜனதா தளம் 8 இடங்களில் வெற்றி 13 இடங்களில் முன்னிலையும் மற்றவை 4 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளன.

ஆட்சியமைக்க தேவையான 113 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கடந்துள்ளது.

இந்தநிலையில் கர்நாடகா மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் பேசியபோது, “பாஜகவால் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை தொகுதிகளை கைப்பற்ற முடியவில்லை.

தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியானதுடன் தோல்விக்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்படும்.

தேர்தல் முடிவுகளை எங்கள் முன்னேற்றத்திற்கானதாக சவாலாக எடுத்துக்கொண்டு 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம். பாஜக வெற்றிக்காக பிரதமர் மோடி மற்றும் கட்சி தொண்டர்கள் தீவிரமாக உழைத்தனர். எங்களால் வெற்றி பெற முடியவில்லை” என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் எடியூரப்பா, “பாஜகவிற்கு வெற்றியும் தோல்வியும் புதிது அல்ல. தேர்தல் முடிவுகளை பற்றி கட்சி தொண்டர்கள் வருத்தம் அடைய தேவையில்லை. தோல்வி குறித்து ஆய்வு செய்யப்படும். தேர்தல் முடிவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 11 மணி நிலவரம்!

வைரலாகும் கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share