இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஜப்பான் பிரதமரை நோக்கி பைப் குண்டு வீசப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஜப்பான் நாட்டின் வகாயாமா பகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பிரச்சாரத்துக்காக சென்றார்.
ஜப்பான் நேரப்படி இன்று காலை 11.30 மணிக்கு வகாயாமா மாகாணத்தில் உள்ள சைகாசாகி மீன்பிடித் துறைமுகத்திற்கு சென்ற பிரதமர், அங்கு மீன் உணவுகளை சுவைத்துவிட்டு தனது உரையை தொடங்க இருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக திடீர் வெடி சத்தம் கேட்டு புகை கிளம்பத் தொடங்கியது. பிரதமர் பேசிக்கொண்டிருந்த இடத்தின் மிக அருகில் இந்த வெடிப்பு சத்தம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பகுதியே புகைமண்டலமாக மாறிய நிலையில், உடனடியாக பிரதமரின் பாதுகாப்பு காவலர்கள் அவரை சூழ்ந்துகொண்டு அங்கிருந்து அவரை அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தின் போது பிரதமருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து வகாயாமா போலீஸ் தரப்பில், பைப் வடிவிலானா கையெறி குண்டு ஒன்று வீசப்பட்டிருப்பதாகவும், இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் கூடியிருந்த மக்கள் சிதறி ஓடினர். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய பிரதமர் ஷின்சோ அபே கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டு இருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமராக ஃபுமியோ கிஷிடா பதவி எற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
ராகுல் விவகாரம்: காங்கிரஸ் இன்று ரயில் மறியல்!
வேலைவாய்ப்பு: மீன்வள பல்கலைக் கழகத்தில் பணி!