சென்னையில் இன்று (மார்ச் 1) நடந்த தனது பிறந்தநாள் கூட்டத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பேசிய பேச்சு 2024 மக்களவைத் தேர்தலுக்கான தெளிவான செய்தியை ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் தந்திருக்கிறது.
சென்னை நந்தனம் ஒய் எம்சிஏ மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தலைவர்களின் வாழ்த்துரைக்குப் பின் ஏற்புரையாற்றிய ஸ்டாலின்,
“நமது திராவிட மாடல் ஆட்சி தமிழ்நாட்டு எல்லையைத் தாண்டி இந்தியா முழுதும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பழமையான கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே, காஷ்மீரத்து சிங்கம் ஷேக் அப்துல்லாவின் மகன் ஃபரூக் அப்துல்லா, இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத முகங்களாக கோலோச்சிய முலாயம் சிங் யாதவ் மகன் அகிலேஷ், லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி என்னை வாழ்த்த வந்திருக்கிறார்கள்.
எனக்கு சீனியர்களும் ஜூனியர்களும் என்னை வாழ்த்த வந்திருக்கிறார்கள். இது எனது பிறந்தநாள் விழாவாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான புதிய அரசியலுக்கான தொடக்கமாகவும் அமைந்திருக்கிறது. இதுதான் எனக்கு மகிழ்ச்சி.
காங்கிரஸ் கட்சியின் 85 ஆவது மாநாட்டில் இயற்றப்பட்ட தீர்மானம், ‘ஆக்கபூர்வமான செயல் திட்டத்தின்படி ஒருமித்த சிந்தனை கொண்ட கட்சிகளோடு சேர்ந்து செயல்பட தயார்’ என்ற அந்த தீர்மானம் எனக்கு கிடைத்த சிறந்த பிறந்தநாள் பரிசு.
2024 தேர்தல் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட யார் ஆட்சி அமைக்கக் கூடாது என்பதற்கான தேர்தல். ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தும் பாஜகவை வீழ்த்த அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாடுகளை கொண்டு தேசிய அரசியலை தீர்மானித்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணரவேண்டும். இதை காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்லுகிறேன்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நடந்த அனைத்து தேர்தல்களிலும் நாம் வெற்றி பெற்றோம் என்றால் அதற்கு காரணம் ஒற்றுமைதான். தமிழ்நாட்டைப் போல ஒற்றுமையான கூட்டணியை அகில இந்தியா முழுமைக்கும் அமையுங்கள் என்று சேலத்தில் ராகுல் காந்தியை வைத்துக் கொண்டு சேலத்தில் சொன்னேன். இங்கே இருக்கும் அழகிரி, தங்கபாலு ஆகியோர் அதற்கு சாட்சி.
காங்கிரஸ் அல்லாத கூட்டணி என்று சிலர் சொல்லும் காரணங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தேர்தலுக்கு பின் கூட்டணி என்று சொல்வதும் சரியாக வராது.
எனவே பாஜகவை வீழ்த்த நமக்குள் இருக்கும் அனைத்து கருத்து வேறுபாடுகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, சிம்பிள் எலக்ட்ரல் அரித்மேடிக் அடிப்படையில் ஒன்றுபட வேண்டும். 2024 தேர்தல் களத்துக்கான போர் வியூகம் வகுக்கும் பாசறைக் கூட்டமாக எனது பிறந்தநாள் கூட்டம் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி.
இங்கே வந்திருக்கும் தலைவர்கள் இந்த செய்தியை டெல்லிக்கு எடுத்துச் செல்லுங்கள், இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் எடுத்துச் செல்லுங்கள். அடுத்த ஆண்டு மார்ச் என்பது அகில இந்திய அரசியலில் அறுவடைக் காலமாக இருக்கட்டும்” என்ற ஸ்டாலின், “வரும் மக்களவைத் தேர்தலில் 2004 ஐ போல 40க்கு 40 நமது கூட்டணியே வெற்றி பெற வேண்டும். இப்போதே அதற்கு உழைக்கத் தொடங்க வேண்டும்” என்று வேண்டுகோள் வைத்து முடித்தார்.
2024 தேர்தலுக்கு ஸ்டாலின் வகுத்தளித்துள்ள ப்ளூ பிரின்ட் ஆகவே அவரது பிறந்தநாள் விழா பொதுக்கூட்ட பேச்சு பார்க்கப்படுகிறது.
–ஆரா’
எனக்கு எழுபது வயதா…மு.க.ஸ்டாலின் உரை!