வைஃபை ஆன் செய்ததும் மெசெஞ்சர் இன்பாக்ஸில் சில மெசேஜ்கள் வந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே அமைச்சர்கள் மீது ஏதாவது ஊழல் புகார் கிடைக்காதா என்று மத்திய பாஜக அரசு கண்ணில் விளக்கெண்ணெயை ஊற்றிக் கொண்டு தேடி வருகிறது.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலான நடவடிக்கை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளப்படலாம் என்ற தகவல் சில மாதங்களாகவே கசிகிறது. அதேபோல அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை விரைவில் இருக்கும் என்று அண்ணாமலையே செய்தியாளர் சந்திப்புகளில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் அமைச்சர் உதயநிதியைக் குறிவைத்து அதிரடி ஆபரேஷன் ஒன்று தொடங்கப்பட்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சரான பிறகு தனது பிசினஸ் நிறுவனங்களில் இருந்து சட்ட ரீதியாக விலகிவிட்டார். அவரது ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் உட்பட அவர் பங்குதாரராக இருக்கும் நிறுவனங்களில் இருந்து முறைப்படி விலகிவிட்டார் உதயநிதி.
ஏனென்றால் அமைச்சராக இருப்பவர் ஆதாயம் தரும் வேறு ஏதேனும் ஒரு பொறுப்பில் இருக்கக் கூடாது. இந்த அடிப்படையில்தான் உதயநிதி தனது தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து விலகிவிட்டார்.
இதற்கிடையே கடந்த வருடம் பிளாக் ஷீப் யுட்யூப் சேனலை உதயநிதி வாங்கிவிட்டதாக தகவல் பரவியது. “பிளாக் ஷீப் என்ற யு ட்யூப் சேனல் புகழ் மிக்கது. லட்சக்கணக்கான வியூவர்களை கொண்டது. பிளாக் ஷீப் யு ட்யூப் சேனலை நண்பர்களுடன் சேர்ந்து நடத்திய ஆர்ஜே விக்னேஷ் காந்த், அதில் முதலீடு செய்த ஒருவர் விலகிக் கொண்டதால் பொருளாதார நெருக்கடியை சந்தித்தார். அப்போது அந்த யு ட்யூப் சேனலை கலைஞர் டிவி வாங்கியது.
பிளாக் ஷீப் யு ட்யூப் சேனலை செயற்கைக் கோள் தொலைக்காட்சியாக ஒளிபரப்ப கலைஞர் குழுமம் திட்டமிட்டது. அதன்படி கலைஞர் டிவிக்கு சொந்தமான சேனல்களில் ஒன்றான குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருந்த ’ சித்திரம்’ சேனலில் பிளாக் ஷீப் சேனலை ஒளிபரப்ப முடிவெடுத்தது. பிளாக் ஷீப் சேனலில் இருந்து இது தொடர்பாக கடந்த ஆண்டே அதிகாரபூர்வ அறிவிப்பும் வந்தது. இதற்கான சோதனை ஒளிபரப்பும் தொடங்கியது.
கலைஞர் டிவிக்கு உட்பட்ட சித்திரம் சேனல் பிளாக் ஷீப் டிவியாக அவதாரம் எடுத்த நிலையில் இதை நிர்வகிக்கும் பொறுப்பு ஆர்ஜே விக்னேஷ் காந்த், கலைஞர் டிவி கார்த்திக் இருவரிடமும் இருக்கிறது. கலைஞர் குழுமத்தை ஒட்டுமொத்தமாக கார்த்திக் கவனித்துக் கொள்கிறார். உதயநிதியின் சித்தி மகன் தான் கார்த்திக். அதாவது துர்கா ஸ்டாலினுடைய சகோதரியின் மகன்.
இந்த நிலையில் பிளாக் ஷீப் டிவிக்காக புதிய உபகரணங்கள் வாங்கியதில் ஜிஎஸ்டி வரி மீறல்கள் நடந்திருப்பதாக சில நாட்களுக்கு முன் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறை விக்னேஷ் காந்த்துக்கு சம்மன் அனுப்பியிருக்கிறது. விசாரணையும் நடந்ததாக தகவல்.
இது தொடர்பாக தொடர்புடைய அலுவலகங்களில் ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையினர் ரெய்டும் நடத்தியிருக்கிறார்கள். இதன் அடுத்த கட்டமாக கலைஞர் டிவி கார்த்திக்கை ஜிஎஸ்டி புலனாய்வுத் துறையினர் விசாரணைக்காக அழைத்திருக்கிறார்கள்.
ஆனால் விசாரணைக்கு செல்வதில் இருந்து விலக்கு பெறுவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளில் கார்த்திக் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர். உதயநிதியோ, ஜிஎஸ்டி வரியில் பாக்கி இருந்தால் உரிய முறையில் என்ன அபராதமோ அதை செலுத்திவிடலாம் என்று ஆலோசனை சொல்லியிருக்கிறார்.
இந்த நிலையில் கலைஞர் டிவி கார்த்திக் முதல்வரின் குடும்பத்தின் முக்கிய நபர் என்பதாலும் உதயநிதி, சபரீசன் ஆகியோருடன் மிகவும் நெருக்கமானவர் என்பதாலும் அவருக்கு ஜிஎஸ்டி சம்மன் கொடுத்து வரச் சொல்லி விசாரணை நடத்தி…அதன் மூலம் உதயநிதியை குறிவைத்து இதில் அமலாக்கத்துறை மூலம் தலையிட முடியுமா? அதற்கான சட்ட வாய்ப்புகள் உண்டா என்றும் டெல்லியில் தீவிர காய் நகர்த்தல்கள் நடக்கின்றன என்கிறார்கள் டெல்லி சோர்ஸுகள்.
ஆனால் தொழில் ரீதியான இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாக பாஜக அரசு எடுத்துச் செல்ல முயன்றால் அதை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளிலும் தீவிரமாக இருக்கிறது உதயநிதி தரப்பு” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
ராகுல் பேச்சுக்கு திரிணாமுல் எம்.பி. மகுவா மொய்த்ரா பதிலடி
ஈரோடு கிழக்கு : தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி புகார்!
