தமிழகத்திற்கு வரும் குடியரசு தலைவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதில்லை என்று இந்திய மாணவர் சங்கம் இன்று (நவம்பர் 26) தெரிவித்துள்ளது.
நான்கு நாட்கள் பயணமாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை தமிழ்நாட்டுக்கு வருகிறார். காலையில் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக கோவை மாவட்டம் சூலூர் விமானப் படைத் தளத்துக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருக்கும் ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார்.
நவம்பர் 28-ஆம் தேதி குன்னூர் வெலிங்டன் முப்படை பயிற்சிக் கல்லூரி விழா, 30-ஆம் தேதி திருவாரூர் மத்திய பல்கலை பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் திரவுபதி முர்மு அன்றைய தினம் டெல்லிக்கு திரும்புகிறார். குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி தமிழகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் சங்கத்தின் (SFI ) மாநில செயலாளர் அரவிந்த சாமி தலைமையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வருகைக்கு எதிராக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டனர்.
நீட் தேர்வுக்கு ஆளுநர் மாளிகை அனுப்பிய கோப்புக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இன்னும் ஒப்புதல் அளிக்காததைக் கண்டித்தும், மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ஆகியோர் அம்மாநிலத்தை பார்வையிடாததைக் கண்டித்தும் இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டமானது நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலீசாரின் நெருக்கடி காரணமாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் அறிவுறுத்தல் காரணமாகவும் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாக SFI தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக குடியரசுத்தலைவரிடம் கோரிக்கை வைக்க உள்ளனர்.
இதுதொடர்பாக எஸ் எஃப் ஐ தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தரும் இந்திய நாட்டின் குடியரசுத் தலைவரை நாங்கள் எதிர்க்கவில்லை.
அதே சமயத்தில், தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவில் கையெழுத்திட்டு சட்டமாக்கிட வேண்டும், தேசிய கல்விக் கொள்கை 2020யை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை குடியரசு தலைவரிடம் முன் வைக்க உள்ளோம்” என இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கேரக்டர் ஆர்டிஸ்ட் : எந்த வேடமானாலும் வெளுத்துக் கட்டும் குணசித்திர நடிகர் இளவரசு
ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… பாஜகவை பின்னுக்கு தள்ளிய ஹேமந்த் சோரன்