மதுரை வந்த ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
இன்று (நவம்பர் 2) மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 55ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்று வருகிறது. பொதுவாகப் பட்டமளிப்பு விழாவில் பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநரும், துணை வேந்தராக உயர்கல்வி துறை அமைச்சரும் கலந்துகொள்வார்கள்.
ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் தர ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்க மறுத்து வரும் நிலையில், அவர் கலந்துகொள்ளும் மதுரை காமராஜர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் தான் கலந்துகொள்ளப் போவதில்லை எனக் கூறி உயர்க் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துவிட்டார்.
இந்நிலையில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இன்று காலை சென்னையிலிருந்து மதுரைக்கு விமானம் மூலம் வந்தார்.
அங்கிருந்து ஆளுநர் செல்லக் கூடிய வழியான நாகமலை புதுக்கோட்டை என்கிற பகுதியில் ஆளுநருக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திரண்டு கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
100க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு உடை அணிந்து, கருப்புக் கொடி ஏந்தி, கருப்பு பலூன்களை பறக்கவிட்டு ஆளுநருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.
அப்போது போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து போகச் சொன்னபோது போலீசாருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து அவர்களைக் கைது செய்த போலீசார் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
அதுபோன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவப் பிரசாத் தலைமையிலான போலீசார், ஆளுநர் செல்லும் வழியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது பட்டமளிப்பு விழா நடந்து வரும் நிலையில், ஆளுநர் அங்கிருந்து புறப்பட்ட பிறகே கைதானவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் மதுரையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
24 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்தை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா
மதுரை வரும் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்!