கருப்புக் கொடி… தாக்குதல்… போலீஸ் ஸ்டேஷனில்  பயங்கரம்: திருச்சி சிவா பேட்டி பரபரப்பு!

அரசியல்

திருச்சி என்றாலே திருப்பு முனை என்பது திமுகவினரின் அரசியல் சென்டிமென்ட்.  திருச்சியில் மாநாடு நடத்தினால் வெற்றிகரமாக இருக்கும் என்பதை திமுக புள்ளிகளே மேடைகளிலேயே வெளிப்படையாக பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் மார்ச் 15  ஆம் தேதி திருச்சியில் நடந்த சம்பவங்கள் திமுகவுக்கு எதிர்மறை திருப்பு முனையாக மாறியிருக்கின்றன.

திமுக முதன்மைச் செயலாளரும் அமைச்சருமான கே.என்.நேரு தனது சொந்த மாவட்டமான திருச்சியில் இருந்தால் அன்று முழுதுமே அவருக்கு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் என்று டைட் ஆகத்தான் இருக்கும். இப்படித்தான் மார்ச் 15 ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளை ஒப்புக் கொண்டு பரபரப்பாக அமைச்சர் நேரு பயணித்துக் கொண்டிருந்த நிலையில்… நாடாளுமன்ற மாநிலங்களவை  உறுப்பினர் திருச்சி சிவா இல்லத்தில் நேரு ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதலும், அதைத் தொடர்ந்து  திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் நடந்த அசம்பாவிதங்களும்  திமுகவின் உட்கட்சிப் பிரச்சினை என்பதைத் தாண்டி சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக பூதாகரம் எடுத்திருக்கிறது.

மார்ச் 15 என்னதான் நடந்தது?

வழக்கம்போல் தான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளுக்காக திருச்சி சுற்று வட்டாரத்தில் பயணத்தில் இருந்தார் அமைச்சர் நேரு.  மாநிலங்களவை உறுப்பினரான திருச்சி சிவா பக்ரைன் நாட்டில் நடந்த ஒரு மாநாட்டுக்காக இந்திய நாடாளுமன்ற குழுவில் ஒருவராக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுடன் சென்றிருந்தார்.

அன்று காலை  டால்மியா பாரத் ஃபவுண்டேஷன் சமூக நலத்திட்டத்தின் கீழ் பிராட்டியூர் குளத்தில் முள்செடிகளை அகற்றி தூர்வாரும் பணியை பச்சைக் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார் நேரு. அதன் பின் அடுத்த நிகழ்ச்சிக்காக அவர் எஸ்பிஐ காலனியில் இருக்கும் இறகுப் பந்து மைதானத்தை திறந்து வைப்பதற்காக புறப்பட்டார். நேருவோடு அவரது ஆதரவாளர்களும் கார்களில் அணி வகுத்துச் சென்றனர்.

அமைச்சர் நேருவின் கார் நியூ ராஜா காலனியில் இருக்கும் திருச்சி சிவா வீடு வழியாகத்தான் சென்றாக வேண்டும். அதுதான் வழி. அந்த வழியாக அமைச்சரின் கார் சென்றபோது திருச்சி சிவாவின் வீட்டு வாசலில் இருந்தபடியே பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன் உள்ளிட்டோர் அமைச்சர் நேருவுக்கு கறுப்புக் கொடிகளை காட்டியிருக்கிறார்கள். அவற்றைப் பார்த்து சிரித்துக் கொண்டே நேரு நேராக எஸ்பிஐ காலனிக்கு சென்றுவிட்டார்.

’இறகு பந்து மைதான திறப்பு விழா அழைப்பிதழில் எம்பி திருச்சி சிவாவின் பெயர் போடவில்லை. கல்வெட்டிலும் எம்பி பெயர் போடவில்லை’ என்பதால்தான் திருச்சி சிவா ஆதரவாளர்கள் கறுப்புக் கொடி காட்டியிருக்கிறார்கள். 

இதுகுறித்து எஸ்பிஐ காலனி வாசிகளிடம் பேசியபோது,  “திருச்சி சிவா வீடு அமைந்திருக்கும் நியூ ராஜா காலனிக்கும் இறகுப் பந்து மைதானம் அமைந்திருக்கும் எஸ்பிஐ காலனிக்கும் ஓரிரு தெருக்கள்தான் இடைவெளி. இந்த பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் இந்த இறகுப் பந்து மைதானம் அமைய ஏரியா காரர்கள் முயற்சி எடுத்தோம்.  நமக்கு நாமே திட்டம் என்றால் திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் மூன்றில் ஒரு  பகுதியை மக்கள் தங்கள் பங்காக கொடுத்தால் அரசு மூன்றில் இரு பகுதியை போட்டு திட்டம் செயல்படுத்தப்படும். இதுதான் நமக்கு நாமே திட்டம்.

அதன்படியே ஏரியா வாசிகள் ஒரு தொகையை வசூலித்தோம். நம் பகுதியில் வசிக்கும் திருச்சி சிவாவிடம் எம்பி ஃபண்ட்டில் இருந்து  நிதி பெறலாம் என்று கேட்டோம். ஆனால் எங்களுக்கு கிடைக்கவில்லை.  அதனால் மாநகராட்சியிடம் முறையாக விண்ணப்பித்து ஏரியா வாசிகளின் பங்குத் தொகையை கொடுத்து நமக்கு நாமே திட்டத்தில் இந்த இறகுப் பந்து மைதான பணிகளை முடித்தோம்.

விழா முடிவான தகவல் தெரிந்து சில தினங்கள் முன்பு இந்த மைதானத்துக்கு பங்காற்றிய சிலரிடம் சிவா அங்கிருந்து போனில் பேசினார். ‘என்னை கூப்பிடாமல் நிகழ்ச்சி பண்றீங்களே?’ என கேட்டார். நாங்கள் அமைச்சர் தேதி கொடுத்துவிட்டதையும்  அவரை சந்திக்க இயலாதது பற்றியும் அவரிடமே தெரிவித்தோம். இதெல்லாம் ஏற்கனவே நடந்தது” என்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான் திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் அமைச்சர் நேரு, கலெக்டர் ஆகியோர் வந்த கான்வாய்க்கு கறுப்புக் கொடி காட்டியிருக்கிறார்கள். அமைச்சர் நேரு இதுகுறித்து விசாரித்துவிட்டு எஸ்பிஐ காலனிக்கு சென்று இறகு பந்து மைதானத்தை திறந்து வைத்து அங்கே சில நிமிடங்கள் இறகுப் பந்தும் விளையாடிவிட்டுப் புறப்பட்டார்.

Black flag attack at police station

அங்கிருந்து புறப்படும்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு போன் போட்ட அமைச்சர் நேரு, கலெக்டர் உள்ளிட்ட கான்வாய்க்கு திருச்சி சிவா வீட்டு வாசலில் இருந்து கறுப்புக் கொடிகள் காட்டப்பட்டதை  சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகு  அமைச்சர்  நேரு எஸ்பிஐ காலனியில் இருந்து புறப்பட்டு மணிகண்டம், லால்குடி என்று அடுத்தடுத்த நிகழ்ச்சிகளுக்கு பயணப்பட்டார். திருச்சி சிவா வீட்டில் கறுப்புக் கொடி காட்டியவர்களை உடனடியாக அழைத்துச் சென்றனர் போலீஸார்.

Black flag attack at police station

இந்த நேரத்தில்தான் எஸ்பிஐ காலனிக்கு திரும்பி வந்த நேருவின் ஆதரவாளர்களான  கவுன்சிலரும் மாவட்ட துணைச் செயலாளருமான முத்துச்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் காஜாமலை விஜய் உள்ளிட்டோர் மீண்டும் திருச்சி சிவா வீட்டுக்குள் நுழைந்தனர்.

வீட்டு வாசலில் இருந்த முகப்பு மின் விளக்குகளை அடித்து உடைத்தவர்கள் உள்ளே சென்று கார், டூவீலர் ஆகியவற்றை சரமாரியாக தாக்கினார்கள். தகவல் கிடைத்து கூடுதல்  போலீஸாரும் குவிக்கப்பட்டனர்.  

Black flag attack at police station

அதேநேரம்  நேரு ஆதரவாளர்கள், தங்கள் கார்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சிவா ஆதரவாளர்கள் மீது புகார் அளிக்க  போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். அப்போது ஸ்டேஷனுக்கு உள்ளே இருந்து, ‘உங்களால என்ன புடுங்க முடியும்?’ என்று ஒருவர் சத்தம் போட, ‘நீ எந்த ஊரு?’ என்று நேரு ஆதரவாளர்கள் கேட்க, ‘நான் கும்பகோணத்துக்காரன்’ என்று பதிலளித்துள்ளார் அவர்.

இதைத் தொடர்ந்து தடுத்த பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு நாற்காலிகளை எடுத்து அவர்கள் மீது எறிந்தனர், வெளியே இருந்து சென்றவர்கள். உடனே பெண் காவலர் சாந்தி மைக் மூலம் வெளியே சென்ற போலீசாரை உடனே ஸ்டேஷனுக்கு வருமாறு  பதட்டத்துடன் அழைத்தார்.

இந்த நிலையில் பூதலூரில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் நேரு அந்த பகுதி ஏ.சி. க்கு போன் செய்து, ‘கறுப்புக் கொடி காமிச்சவங்க மேல நடவடிக்கை எதுவும் வேணாம். தலைவர் சொல்லிட்டார்’ என்று சொல்லியிருக்கிறார். அடுத்த இரண்டு மணி நேரத்தில்   செஷன்ஸ் கோர்ட்  காவல்நிலையத்தில்  நடந்த தாக்குதல்  காட்சிகளின்  வீடியோ வெளியாகி பரபரப்பானது.

அதில்  ஒரு பெண் போலீஸாருக்கு காயம் ஏற்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதையறிந்த முதல்வர் டென்ஷனாகி காவல்நிலையத்தையே தாக்கியவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்ய உத்தரவிட்டார். துரைமுருகனும் நேருவைத் தொடர்புகொண்டு, ‘தலைவர்  கட்சியில இருந்து சஸ்பெண்ட் செய்ய சொல்லிவிட்டார் என்ற தகவலையும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர்களை கட்சியை விட்டு சஸ்பெண்ட் செய்த  அறிவிப்பு வெளியானது.

இதற்கிடையே போலீஸார் மீது தாக்குதல் நடத்திய திமுக பிரமுகர்களை தேடி கைது செய்யும் நடவடிக்கைகளில் இறங்கியது போலீஸ்.  இதற்கிடையே அமைச்சர் நேரு வழக்கறிஞர்களிடம், ‘போலீஸ் தேடி கைது செஞ்சதாக இருக்க வேண்டாம். அவங்களை போய் உடனே சரண்டர் செய்யுங்க’ என்று உத்தரவிட்டுள்ளார்.  அதன்படியே நேருவின் ஆதரவாளர்கள் கோர்ட்டில் சரண்டர் ஆகி சிறைக்குச் சென்றனர். 

திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘அமைச்சர் நேருவுக்கும், எம்பி திருச்சி சிவாவுக்கும் எப்போதும் ஒத்துக் கொள்ளாது. இவர் வழியில் அவரோ, அவர் வழியில் இவரோ சம்பந்தப்படுவதே இல்லை. ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு சிலர் இந்த சந்தர்ப்பத்தில் சம்பவம் செய்துள்ளனர்.

காஜாமலை விஜய் ஏற்கனவே திருச்சி சிவாவின் ஆதரவாளராக இருந்தவர்.  பின் நேரு சைடுக்கு வந்தார். அவர் தனது பழைய பாக்கியை  செலுத்துவதற்காக இந்த சம்பவத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும் மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வத்துக்கும் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவுக்கும் ஏதோ பிரச்சினை இருந்திருக்கிறது. அதைக் காரணம் காட்டி அவரும் இந்த நேரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்” என்கிறார்கள்.

இதற்கிடையே அமைச்சர் உதயநிதி முதல்வரிடம்,  ‘மகேஷிடமும் நான் விசாரித்தேன். நேருவுக்கு தெரியாமல்தான் நடந்திருக்கிறது என்கிறார். சிவா வீட்டில் தாக்குதல் நடத்திய வீடியோவை சிவா ஆதரவாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். போலீஸ் நிலையத்தில் நடந்ததை போலீஸே வெளியிட்டு நமக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதை சீரியசாக பார்க்க சொல்லுங்க’ என்று சொன்னதாக சொல்கிறார்கள். 

நேருவின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில்  பக்ரைனில் இருந்து இன்று (மார்ச் 16)  காலை எம்பி திருச்சி சிவா தனது வீட்டுக்கு வந்தார். வாசலிலேயே செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இப்போது எதுவும் பேசும் மனநிலையில் இல்லை. கடந்த காலத்திலும் நான் நிறைய சோதனைகளை சந்தித்திருக்கிறேன். அடிப்படையில் நான் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். எனக்கு என்னைவிட என் கட்சி முக்கியம் என்ற காரணத்தால் நான் பலவற்றை பெரிதுபடுத்தியது இல்லை. யாரிடமும் போய் புகார் சொன்னதும் இல்லை.

Black flag attack at police station

இப்போது நடந்த நிகழ்ச்சி மிகுந்த மனவேதனையை தந்திருக்கிறது. வீட்டில் உள்ள உதவியாளர்களிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். என்னோடு இருந்த சில நண்பர்கள் 65 வயதானவர்கள் எல்லாம் காயம்பட்டிருக்கிறார்கள். பணியாளராக இருக்கும் மூதாட்டி காயம்பட்டிருக்கிறார்.

அதனால் இப்போது நான் எதையும் பேசுகிற மனநிலையில் இல்லை. நான் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ஆனால் இப்போது மிகுந்த களைப்பில் இருக்கிறேன். மனச் சோர்வில் இருக்கிறேன். மனச் சோர்வு என்ற வார்த்தையே எனக்கு கிடையாது. ஆனால் இப்போது நான் பேசும் மனநிலையில் இல்லை.

நான் உங்களிடம் (செய்தியாளர்கள்) பேசுவதை விட வேறு யாரிடம் போய் பேசப் போகிறேன். நீங்கதான் எனக்கு எல்லாமே… நான் உங்களிடம் பிறகு விரிவாக பேசுகிறேன்” என்று வேதனையோடு தெரிவித்துவிட்டு வீட்டுக்குள் சென்றார் திருச்சி சிவா.

வேந்தன் 

பரவும் காய்ச்சல்: 1 முதல் 9-ம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வா? – அமைச்சர் விளக்கம்

இந்த வார தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
1