ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி: கூட்டணிக் கட்சிகளை சமாளித்து முடித்த திமுக

அரசியல்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி டிசம்பர் 23ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் தர்காவில் சந்தனக்கூடு நிகழ்ச்சியை ஒட்டி கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினார்.

சந்தனக் கூட்டுக்கு வரும் ஆளுநரை எதிர்த்து கண்டன போராட்டம் நடத்த களமிறங்கிக் கைதானார்கள் திமுக கூட்டணிக் கட்சியினர்.
டிசம்பர் 23ஆம் தேதி காலை திருச்சி விமான நிலையத்தில் இருந்து  தஞ்சாவூரிலிருந்து கார் மூலம் திருவாரூர் வழியாக நாகப்பட்டினம் சென்று அங்கிருந்து நாகூர் செல்வது தான் ஆளுநரின் பயணத்திட்டம். அவரது நாகூர் வருகை பற்றி அறிந்ததுமே திமுகவின் தோழமைக் கட்சிகள் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்க திட்டமிட்டன.

இது பற்றிய ஆலோசனைக் கூட்டங்களும் நாகை மாவட்ட காங்கிரஸ் தலைவர் அமிர்தராஜாவால் நடத்தப்பட்டன ஏற்கனவே கடந்த 2022 ஏப்ரலில் மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் ரவி வந்த போது அப்போதும் திமுகவின் கூட்டணி கட்சிகள் அவரை எதிர்த்து போராட்டம் நடத்தின.

அந்த ஆர்பாட்டத்தில் ஆளுநர் கால்வாய் மீது கற்களும் கம்புகளும் கொண்டு தாக்கப்பட்டதாக சமீபத்தில் ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு சர்ச்சையை ஒட்டி டிஜிபிக்கு எழுதிய கடிதத்திலேயே ஆளுநர் அலுவலகம் குற்றம் சாட்டியிருந்தது.

Image

இந்த நிலையில் தான் ஆளுநரின் நாகூர் வருகை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட எஸ்.பி.க்களுக்கும் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் இருந்து ஆளுநருக்கு எந்த நெருடல் தரும் நிகழ்வுகளும் ஏற்பட்டு விடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. அதேநேரம் திமுகவின் கூட்டணிக் கட்சியினர் ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள் என்றால் அவர்களைத் தடுக்காமல் நாசூக்காக கையாள வேண்டும் என்றும் எஸ்.பி.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திமுக தலைமையும் ஆளுநர் விஷயத்தில் இப்போது கள ரீதியாக போராட வேண்டாம் என்றே மாசெக்களுக்கு தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இருவரும் அமர்ந்து பேச வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறியிருக்கிறார். இதற்காக ஆளுநரும் முதலமைச்சரை அழைத்திருக்கிறார். வெள்ள நிவாரண பணிகள் இருப்பதால் அதையெல்லாம் முடித்துவிட்டு ஆளுநரை முதல்வர் சந்திக்க வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் திமுக ஆளுநருக்கு எதிரான போராட்டங்களில் நேரடியாக களமிறங்குவது சரியாக இருக்காது என்பது தலைமையின் எண்ணம்.

அதன் அடிப்படையில் திமுக இந்தப் போராட்ட களத்தில் எந்த பங்கும் செலுத்தாமல் ஒதுங்கிக் கொண்டது. ஆனால் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்திய தீருவது என்று விடாப்பிடியாக இருந்தன. டெல்டாவில் உள்ள இந்த கட்சிகளின் பொறுப்பாளர்களிடம் அந்தந்த மாவட்ட எஸ்பிக்கள் தொடர்பு கொண்டு போராட்டம் வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தனர். ஆனால் இதற்கு கூட்டணி கட்சியினர் ஒப்புக்கொள்ளவில்லை. அதையடுத்து போராட்ட ஸ்பாட்டுகளை குறைத்துக் கொள்ளுமாறு கண்டிப்பும் கனிவுமாய் போலீஸ் திமுகவின் கூட்டணிக் கட்சியினரை தாஜா செய்தது. மேலும்  சில இடங்களில் ஆளுநர் நாகூர் செல்லும்போதும், சில இடங்களில் ஆளுநர் திரும்பும்போதும் போராட்டங்களை வைத்துக் கொள்ளவும் போலீஸ் கேட்டுக் கொண்டது.

இந்த அடிப்படையில் திருவாரூரில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் கீழ்வேளூர் பைபாஸ் சாலை அருகே ஆளுநருக்கு எதிராக கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ஆர். என். அமிர்தராஜா 22 ஆம் தேதி நாகையில் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி முடிவு செய்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மமக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டன.

திருச்சி, தஞ்சாவூரில் இருந்து திருவாரூர் வந்த ஆளுநர் திருவாரூர் விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து காலை உணவு சாப்பிடுவது என்பது நிகழ்ச்சி நிரல். அந்த அடிப்படையில் 9 மணிக்கு மேல் திருவாரூரில் இருந்து ஆளுநர் புறப்படுவதாக திட்டம். திருவாரூரில் திருவிக அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் சிலரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரும் ஆளுநருக்கு எதிராக போராட்டத்தில் இறங்கும் முன்னரே கைது செய்யப்பட்டார்கள்.  மேலும் திருவாரூர் தாண்டி நாகை செல்லும்போது  காங்கிரஸ் உள்ளிட்ட  கட்சியினர் ஆளுநர் பயணம் மேற்கொள்ளும் பைபாஸ் சாலையில் கீழ்வேளூர் சந்திப்பு அருகே போராட்டம் நடத்தத் திட்டமிட்டனர்.

போலீஸ் தரப்பில், ‘சார் எத்தனை மணிக்கு வருவீங்க?’ என்று கேட்க 10 மணிக்கு ஆர்பாட்டத்துக்கு வந்துவிடுவோமென்று சொல்லியிருக்கிறார்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர். இதையடுத்து அன்று அதிகாலை முதலே கீழ்வேளூரை சுற்றியுள்ள நான்கு திசைகளிலும் பாதுகாப்பை பலப்படுத்தி, போராட்ட ஸ்பாட்டுக்கு வெளியூரில் இருந்து யாரும் வராமல் கவனமாக பார்த்துக் கொண்டது போலீஸ்.

இந்த நிலையில் காலை 9.45 மணிக்கெல்லாம் ஆளுநருக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தத் தொடங்கினார்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியினர். காங்கிரஸ் மாவட்ட தலைவர் அமிர்தராஜா, மார்க்சிஸ்ட் மாசெ முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து உள்ளிட்டோர், சுமார் 50 பேர் திரண்டு, ‘ஆளுநரே திரும்பிப் போ… ஆளுநரே திரும்பிப் போ…’ என்றெல்லாம் முழக்கங்கள் எழுப்பினார்கள்.

ஆளுநர் திருவாரூரில் காலை உணவு எடுத்துக் கொண்டு திருவாரூரில் இருந்து புறப்பட்டு நாகை மாவட்ட எல்லையைத் தொட்ட நிலையிலேயே… ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை வேனில் ஏற்றி கைது செய்து கீழ்வேளூரில் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி காலை 10 மணிக்கு மேல் நாகூர் சென்று அங்கே இருபது நிமிடங்கள் வழிபாடு நடத்திவிட்டு, திரும்பி அதே வழியில் சென்றார். அவர் நாகை மாவட்ட எல்லையை தாண்டிய பிறகுதான் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தனர் போலீசார்.

நாம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுக கூட்டணிக் கட்சியினரிடம் பேசியபோது, “ இந்த போராட்டம் பற்றி போலீசார் தொடர்ந்து எங்களிடம் பேசி வந்தனர். ‘ஆளுநர் கான்வாய்க்கும் ஏதும் ஆகிவிடக் கூடாது. கூட்டணிக் கட்சியினரும் போராட்டம் நடத்தணும் என்பதுதான் எங்களுக்கு மேலிட உத்தரவு’ என்று போலீஸார் கூறினார்கள். நாங்கள் வேறு எப்படித்தான் போராடுவது?” என்று கேட்கிறார்கள்.

ஒருவழியாக ஆளுநர், கூட்டணிக் கட்சிகள் என இரு தரப்பினரையும் திமுக சமாளித்துவிட்டது.

வேந்தன்

வெள்ள பாதிப்புகள்: முதல்வரிடம் பேசிய பிரதமர்

தனுஷ் இயக்கும் காதல் கதை: டைட்டில் என்ன தெரியுமா?

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *