தெலங்கானாவில் ஆட்சி செய்து வரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 4 பேரிடம் கட்சி மாற பேரம் பேசியதாக பா.ஜ.க. தலைவர்களுடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் ஆட்சி செய்யும் சந்திர சேகர் ராவின் ராஷ்டிரிய சமிதி கட்சிக்கு 103 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வுக்கு 2 எம்.எல்.ஏ.க்களும் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் டி.ஆர்.எஸ். கட்சியைச் சேர்ந்த அச்சம்பேட் எம்.எல்.ஏ. குவ்வல பால்ராஜ், தந்தூர் எம்.எல்.ஏ. ரோகித் ரெட்டி, கொல்லப்பூர் எம்.எல்.ஏ. ஹர்ஷவர்தன் ரெட்டி, பினபாகா எம்.எல்.ஏ. ரேக காந்த ராவ் ஆகியோரிடம் பா.ஜ.க. சார்பில் சிலர் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 26-ம் தேதி இது தொடர்பாக 4 எம்.எல்.ஏ.க்களிடமும் ஹைதராபாத்துக்கு வெளியில் உள்ள அஜீஸ் நகரில் ஒரு தோட்டத்து வீட்டில் வைத்து பேரம் பேசியதாக நந்த குமார், சுவாமி ராமச்சந்திர பாரதி, சிமயாஜுலு ஆகிய 3 பேரை தெலங்கானா போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரும் பாஜக தலைவர்களுடன் இருக்கும் புகைப்பட ஆதாரங்களையும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினர் வெளியிட்டனர். இந்நிலையில் கடந்த 3-ஆம் தேதி அன்று செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் சந்திர சேகர ராவ், பாஜக சார்பில் சிலர் எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசும் வீடியோ ஆதாரத்தை வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.
அந்த வீடியோவில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள ராமச்சந்திர பாரதி என்பவர் கட்சி தாவும் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் 50 கோடி ரூபாய் வழங்க தயாராக இருப்பதாக பேரம் பேசுவதும் எம்.எல்.ஏ.க்களை டெலிவரி என்று வார்த்தையால் குறிப்பிடுவதும் பதிவாகியிருந்தது.
மேலும், பா.ஜ.க.வில் பி.எல்.சந்தோஷ், ஜே.பி. நட்டா, அமித்ஷா ஆகிய 3 பேர் தான் இந்த விஷயங்களைக் கையாள்வதாகவும் மாநில பா.ஜ.க. இதில் தலையிடாது என்றும் கூறுவதும் பதிவாகியுள்ளது.
இந்த விவகாரத்தில் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் பிஎல் சந்தோஷ், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜக்கு சாமி, கேரளாவின் பாரத் தர்மிக ஜனசேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி, கரீம் நகரை சேர்ந்த வழக்கறிஞர் ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் எம்.எல்.ஏ.க்கள் பேரம் பேசப்பட்டது குறித்து விசாரிப்பதற்காக கடந்த 9ஆம் தேதி அன்று ஹைதராபாத் காவல் ஆணையர் தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தெலங்கானா அரசு உத்தரவிட்டது.
இந்த விசாரணைக் குழுவின் முன்பு 21-ம் தேதி அன்று ஆஜராகுமாறு பி.எல்.சந்தோஷ், ஜக்கு சாமி, துஷார் வெள்ளப்பள்ளி, ஸ்ரீனிவாஸ் ஆகியோருக்கு 16-ம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், இதில் வழக்கறிஞர் ஸ்ரீனிவாசை தவிர வேறு யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஸ்ரீனிவாசிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்திய போலீசார் செவ்வாய் கிழமையும் விசாரணையை தொடர்ந்தனர்.
இந்த நிலையில் தான் விசாரணைக்கு ஆஜராகாத பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் உள்ளிட்ட மற்ற 2 பேரும் வெளிநாடு தப்பி செல்லாதபடி தெலங்கானா காவல் துறை லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
இவர்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு லஞ்சம் தர முயன்றதாகவும் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கவிழ்க்கக் கூறி மிரட்டியதாகவும் லுக் அவுட் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இந்த லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 3 பேர் குறித்த தகவல் கிடைத்தால் ஹைதராபாத் நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் பிஎல்சந்தோஷ் உள்ளிட்ட 3 பேரும் லுக் அவுட் நோட்டீஸை பார்த்துவிட்டு சரணடைய மறுத்தால் அவர்களை கைது செய்ய உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரப்படும் என தெலங்கானா காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்துல் ராஃபிக்
ராணிப்பேட்டையில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை!
ஜல்லிக்கட்டு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!