சென்னையில் பி.எல். சந்தோஷ்… பாஜகவில் அண்ணாமலை செல்வாக்கு தொடருமா?

அரசியல்

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிலையில், கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி சென்னையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, ‘யார் வந்தாலும் சென்றாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடரும். பாஜகவுக்கும் திமுகவுக்கும்தான் தமிழ்நாட்டில் போட்டி’ என்று கூறினார்.

இந்த விவகாரம் குறித்து பாஜகவின் தேசிய தலைமை இதுவரை அதிகாரபூர்வமாக எந்த கருத்தும் கூறாத நிலையில், பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளரான பி.எல். சந்தோஷ் இன்று (அக்டோபர் 9) இரவு சென்னை வருகிறார். அவர் நாளை (அக்டோபர் 10) தமிழக பாஜகவின் மையக் குழு கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

இதையொட்டி தமிழ்நாடு பாஜகவில் முக்கிய விவாதங்கள் நடந்து வருகின்றன.

பாஜக நிர்வாகிகள் சிலர் நம்மிடம், “அண்ணாமலையால்தான் தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணி உடைந்துவிட்டது. இதை அதிமுகவே வெளிப்படையாக சொல்லியிருக்கிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் வழிகாட்டி என்று கருதப்படும் பி.எல். சந்தோஷின் சென்னை வருகை  தமிழக பாஜகவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மாவட்டத் தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் பாஜக தேசிய தலைமையின் கவனம் உள்ளது. அதன் பின் தமிழ்நாடு கூட்டணி நிலவரம் பற்றி கவனிப்பார்கள் என்று கூறினார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடியே ஒருவேளை நேரடியாக பேசினால் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமைய வாய்ப்புண்டு. ஆனால் அப்படி அமைந்தால் இரு கட்சித் தொண்டர்களும் ஏற்க மாட்டார்கள். எடப்பாடிக்கும் அது பின்னடைவாகவே இருக்கும்

இந்த நிலையில் நாளை நடக்க இருக்கும் மையக் குழு கூட்டம் முக்கியமானதாக இருக்கிறது. அண்ணாமலைக்கு இதுவரை முழு சுதந்திரம் கிடைப்பதற்கு காரணமாக இருந்த சந்தோஷின் அணுகுமுறை அப்படியே தொடருமா அல்லது மாறுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உடல் நலம் இல்லாமல் ஓய்வில் இருக்கும் அண்ணாமலையும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வார். தமிழ்நாட்டில் கூட்டணி முறிவு பற்றி தேசிய தலைமை என்ன நினைக்கிறது என்பதை இந்த கூட்டத்தில் சந்தோஷ் விளக்குவார் என்று எதிர்பார்க்கிறோம்.

மேலும், பாஜக தலைமையிலான கூட்டணி பற்றியும், பாஜகவின் வேட்பாளர்கள் தேர்வு பற்றியும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு கமிட்டி அமைக்கப்பட இருக்கிறது. அதுபற்றியும் முடிவெடுக்கப்படலாம். ஆனால் முக்கியமான ஒரு விஷயமும் தேசிய தலைமைக்கு சென்றிருக்கிறது.

அதாவது அதிமுகவுடனான கூட்டணி முறிவுக்குப் பின்னால் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன், எல். முருகன், வானதி சீனிவாசன், கரு. நாகராஜன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளே கூட தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகிறார்கள். அதுபற்றியும் இந்த கூட்டத்தில் பேசப்படலாம்” என்கிறார்கள் பாஜக நிர்வாகிகள்.

சந்தோஷ் கலந்துகொள்ளும் மையக் குழு கூட்டத்துக்குப் பின் தமிழக பாஜகவில் அண்ணாமலையின் செல்வாக்கு கூடுமா குறையுமா என்பது தெரியவரும்.

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ODI Worldcup: ஆதிக்கத்தை தொடரும் நியூசிலாந்து!

இஸ்ரேல் போர் : பாலஸ்தீனத்துக்கு காங்கிரஸ் ஆதரவு!

+1
0
+1
1
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

1 thought on “சென்னையில் பி.எல். சந்தோஷ்… பாஜகவில் அண்ணாமலை செல்வாக்கு தொடருமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *