கர்நாடகாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் இன்று ஏப்ரல் 11ஆம் தேதி இரவு கட்சியின் தேசிய தலைமையால் வெளியிடப்பட்டுள்ளது. பாஜகவின் கர்நாடக மாநில தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பட்டியலை டெல்லியில் வெளியிட்டார். அப்போது இணை பொறுப்பாளரும் தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை உடன் இருந்தார்.
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வரும் மே 10 தேதி நடைபெற இருக்கிறது. இதற்காக காங்கிரஸ் கட்சி ஏற்கனவே இரண்டு வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது.
ஆனால் ஆளும் பாரதிய ஜனதா கட்சியோ ஏகப்பட்ட உட்கட்சி பிரச்சனைகளாலும் கோஷ்டி மோதல்களாலும் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யமுடியாமல் தவித்து வந்தது. இதற்கிடையே தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடக சட்டமன்ற தேர்தலுக்கான இணை பொறுப்பாளராக தேசிய தலைமையால் நியமிக்கப்பட்டார்.
கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வந்த போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையிலேயே இல்லை. இதற்கு காரணம் கர்நாடக பாஜக வேட்பாளர் பட்டியலில் ஏற்பட்ட இழுபறி தான் என்று அண்ணாமலை தரப்பில் தெரிவித்தனர்.
இப்படி தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் ஒரு வழியாக இன்றைய இரவு வெளியிடப்பட்டுள்ளது.
189 வேட்பாளர்கள் அடங்கிய இந்த முதல் பட்டியலில் 52 பேர் புது முகங்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது தற்போதைய தொகுதியான ஷிகான் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார்.
கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜகவின் முக்கிய தலைவருமான எடியூரப்பாவின் மகன் விஜயந்திரா ஷிக்காரி புரா தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் எடியூரப்பா கடந்த 1983 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஏழு முறை வெற்றி பெற்றவர் என்பது முக்கியத்துவம் நிறைந்தது.
பாஜக தேசிய செயலாளரும் தமிழ்நாடு பொறுப்பாளருமான சி.டி. ரவி சிக்மகளூர் தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி. கே. சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அமைச்சராக இருக்கும் அசோகா போட்டியிடுகிறார். இதிலே குறிப்பிடத் தகுந்த விஷயம் என்னவென்றால் மாநில காங்கிரஸ் தலைவரை எதிர்த்து கனகபுரா தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் அசோகா இரண்டாவதாக தனது சொந்த தொகுதியான பத்மநாப நகர் என்ற தொகுதியிலும் போட்டியிடுகிறார். இரண்டு தொகுதிகளில் போட்டியிட அமைச்சர் அசோகாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. டி கே சிவக்குமாரை எதிர்த்து ஒருவேளை தோல்வியடைய கூடுமோ என்ற பயத்தால் தான் இரண்டு தொகுதிகளில் அமைச்சர் அசோகா நிற்கிறார் என்று இந்த பட்டியலை பார்த்து காங்கிரஸார் பேசி வருகிறார்கள்.
இந்த வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக மாநிலத்துக்கான தேர்தல் பொறுப்பாளர் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “189 வேட்பாளர்களில் 52 பேர் புது முகங்களாக நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் இந்த பட்டியல் அமைந்துள்ளது” என்றார்.
–வேந்தன்
பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள்: பொது விடுமுறை அறிவிப்பு!
டிஜிட்டல் திண்ணை: 40%… ஸ்டாலின் போடும் மாஸ்டர் பிளான்!