ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பது உள்ளிட்ட 9 தீர்மானங்கள் பாஜக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
தமிழக பாஜகவின் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டம் கடலூர் மாநகர மையப் பகுதியான கடலூர் புதுநகரில் திருமண மண்டபம் ஒன்றில் இன்று (ஜனவரி 20)நடைபெற்று வருகிறது.
தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வானதி சீனிவாசன் தவிர மற்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதல் தீர்மானத்தில் ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பேற்றுள்ள பிரதமர் மோடிக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 ஆவது தீர்மானத்தில், சட்டமன்றத்தில் நடந்த நிகழ்வுகளுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் திமுகவின் நீண்ட நாள் திட்டமான சேது சமுத்திரத் திட்டத்தை ராமர் பாலம் பாதிக்கப்படாமல் நிறைவேற்றவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அதில் உள்ள சாதக, பாதகங்களை அரசு விளக்கவேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தி இருக்கிறது.
5 ஆவது தீர்மானமாக புதுக்கோட்டை வேங்கைவயலில், பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை இதுவரை கைது செய்யாதது ஏன் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. பட்டியலின மக்களுக்கு நடந்த கொடுமைக்கு அரசு பொறுப்பேற்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இதேபோன்று பெண் காவலர்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறலைக் கண்டித்தும், தமிழக விவசாயிகளையும், நெசவாளர்களையும் திமுக வஞ்சிப்பதாகக் கூறி தொடர்ந்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திராவிட மாடல் ஆட்சியால் தமிழகம் தொழில் வளர்ச்சியில் 4 ஆவது இடத்திற்கு சென்றுவிட்டதாக குற்றம் சாட்டியுள்ள பாஜக, ஊழல்கள் குறித்து அனைத்து ஒன்றிய, நகர, பகுதிகளில் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதென தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.
இதேபோன்று காசி தமிழ்ச்சங்கம் நடத்தியதற்காக மோடிக்கும், மீண்டும் பாஜக தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.பி.நட்டாவுக்கும் பாராட்டு தெரிவித்து என 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கலை.ரா
Comments are closed.