டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியிருக்கும் நிலையில், தலைநகரை ஆளும் அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. bjp won who is next cm of delhi
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவியது.
மீண்டும் ஆட்சிக்கு வர ஆம் ஆத்மியும், எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று பாஜக, காங்கிரஸும் முனைப்பு காட்டின.
இந்தநிலையில் இன்று (பிப்ரவரி 8) தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி பாஜக முன்னிலையில் இருக்கிறது.

ஆட்சியமைக்க பெரும்பான்மை 36 என்ற நிலையில், பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் முன்னிலையில் இருக்கின்றன.
முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் தொகுதியான புது டெல்லியில், அவருக்கும் பாஜக வேட்பாளருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. காலை முதல் இருவரும் குறைந்த வாக்குவித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, 4,099 வாக்குகள் அதிகம் பெற்று பாஜக வேட்பாளார் பர்வேஷ் சாஹிப் சிங் முன்னிலையில் இருக்கிறார்.
இப்படி டெல்லியில் பாஜகவின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில், அக்கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுடன் பிரதமர் மோடி உரையாடவுள்ளார்.
அதேவேளையில், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
முதல்வர் ரேஸ் பட்டியலில் யார்? bjp won who is next cm of delhi
டெல்லி முதல்வர் பதவிக்கான ரேஸில் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான மஞ்சிந்தர் சிங் சிர்சா உள்ளதாக தகவல்கள் வருகின்றன. சீக்கியர் முகம் என்ற அடிப்படையில் சிங் தேர்வு செய்யப்படலாம்.
அவர், ரஜோரி கார்டன் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் தன்வதி சண்டேலாவை எதிர்த்து போட்டியிட்டார். தற்போது ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரைக் காட்டிலும் 18,190 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரும், தலித் தலைவருமான துஷ்யந்த் கௌதம் முதல்வர் தேர்வு பட்டியலில் இருக்கிறார். ஆம் ஆத்மி கட்சியில் எம்எல்ஏவாக இருந்த விஷேஷ் ரவியை எதிர்த்து கரோல் பாக் தொகுதியில் போட்டியிட்டு முன்னிலையில் இருக்கிறார்.
2008 மற்றும் 2013 தேர்தல்களில் கோண்ட்லியில் இருந்து போட்டியிட்டு தோல்வி அடைந்த போதிலும், கட்சியில் அவரது மூத்த பதவி மற்றும் தலித் பிரதிநிதித்துவம் ஆகிய காரணமாக வலுவான போட்டியாளராக இருக்கிறார்.

மற்றொரு முக்கிய நபர் பர்வேஷ் சாஹிப். இவர், முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மாவின் மகன். ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்டுள்ளார். கெஜ்ரிவாலை தோற்கடிக்கும் பட்சத்தில் முதல்வர் பதவிக்கு இயல்பான தேர்வாகவும் பர்வேஷ் இருப்பார். ஜாட் பின்னணியில் இருந்து வந்த இவர், டெல்லி பாஜகவில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
டெல்லி முன்னாள் முதல்வர் மதன் லால் குரானாவின் மகன் ஹரிஷ் குரானாவும் களத்தில் உள்ளார். இவரது பெயரும் பரிசீலனையில் இருக்கலாம் என்று தகவல்கள் வருகின்றன.
பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான விஜேந்தர் குப்தாவை முதல்வராக தேர்ந்தெடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆம் ஆத்மியின் ஆதிக்கம் இருந்தபோதிலும் 2015 மற்றும் 2020 ஆகிய இரண்டு தேர்தல்களிலும் ரோகினி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
டெல்லி சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். ஆம் ஆத்மியின் தேர்தல் அலைக்கு எதிரான அவரது பணி மற்றும் அனுபவத்தால் வலுவான போட்டியாளராக உள்ளார்.
டெல்லி பாஜக முன்னாள் தலைவரும், புது டெல்லி முனிசிபல் கவுன்சில் முன்னாள் துணைத் தலைவருமான சதீஷ் உபாத்யாய் மாளவியா நகர் தொகுதியில் போட்டியிட்டு முன்னிலையில் இருக்கிறார். கட்சிக்குள் அவரது கடந்தகால தலைமைப் பாத்திரங்கள் அவருக்கு சாதகமாக உள்ளது.
ஒரு பெண் முதல்வர் என்ற அடிப்படையில் பார்த்தால், ரேகா குப்தா மற்றும் ஷிகா ராய் ஆகிய இருவரது பெயரும் முதல்வர் ரேஸ் பட்டியலில் இருக்கிறது. டெல்லி முனிசிபல் கார்பரேஷன் முன்னாள் கவுன்சிலரான ரேகா டெல்லி பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவராக உள்ளார். இந்த தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் போட்டியிட்டு முன்னிலையில் இருக்கிறார்.
ஷிகா ராய் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டு முன்னிலையில் இருக்கிறார். 60 வயதான இவர், கிரேட்டர் கைலாஷ் வார்டு 173 கவுன்சிலராக இருக்கிறார். 2023ல் டெல்லி மேயர் பதவிக்கு பாஜகவின் தேர்வாக இருந்தவர்.
பாஜகவுக்கு மாறிய முன்னாள் ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான கபில் மிஸ்ரா முதல்வர் ரேஸில் முக்கியமானவராக இருக்கிறார். கெஜ்ரிவால் அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார். பாஜகவின் டெல்லி துணைத் தலைவராக உள்ள இவர், கரவால் நகர் தொகுதியில் போட்டியிட்டு முன்னிலையில் இருக்கிறார். ஆம் ஆத்மிக்கு எதிரான அவரது நிலைப்பாடு, இந்துத்துவா முகம் உள்ளிட்டவை காரணமாக அவர் பாஜக தேர்வு பட்டியலில் ஒருவராக இருக்கிறார்.
மற்றொரு முன்னாள் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லியின் முன்னாள் அமைச்சருமான கைலாஷ் கெலாட்டும் முதல்வராக தேர்வு செய்யப்படலாம். அவர் ஆம் ஆத்மியில் இருந்தபோது நஜாப்கரில் இருந்து இருமுறை வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு சென்றவர்.
இப்படி சுமார் 10 பேர் பெயர் கொண்ட பட்டியல் பாஜக தலைமை கையில் இருக்கும் நிலையில், இதுதொடர்பாக டெல்லி பாஜக தலைவர் வீரேந்திரா சச்தேவா கூறுகையில், “அடுத்த முதல்வர் யார் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும்” என்று கூறியுள்ளார்.
“பிரதமர் மோடியின் தலைமையை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர், ஏனெனில் மக்கள் வளர்ச்சியை விரும்புகிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார். bjp won who is next cm of delhi