நள்ளிரவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு கர்நாடகா ஜெயா நகர் தொகுதியில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (மே 13) நடைபெற்றது. இதில் ஆரம்பம் முதல் பெருவாரியான தொகுதிகளில் முன்னிலை வகித்தது காங்கிரஸ்.
மொத்தம் 224 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட கர்நாடகா சட்டசபையில் 135 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.
நேற்று இரவு வரை பாஜக 65 இடங்களிலும், ஜேடி(எஸ்) 19 இடங்களிலும் வெற்றி பெற்றதாக இந்திய தேர்தல் ஆணையம் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கர்நாடகாவின் ஜெயா நகர் தொகுதியில் மட்டும் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது.
இந்த தொகுதியில் காங்கிரஸின் சௌமியா ரெட்டிக்கும், பாஜக வேட்பாளர் சி கே ராமமூர்த்திக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
முதலில் காங்கிரஸின் சௌமியா ரெட்டி தேர்தல் ஆணையத்தால் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமமூர்த்தி, வெற்றி வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால், வாக்குகளை மீண்டும் எண்ணும்படி கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து அங்கு மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது.
இதுகுறித்து அறிந்த கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார், செளமியா ரெட்டியின் தந்தை ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு நேரில் சென்று தேர்தல் அதிகாரிகளிடம் முறையிட்டனர். அப்போது காவல்துறைக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது வாக்கு எண்ணும் மையத்திற்குள் பாஜக தலைவர் அசோக் மற்றும் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா இருக்கும் வீடியோவும் சர்ச்சையை கிளப்பியது.
எனினும் அங்கு தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அவர் தலைமையில், சௌமியா ரெட்டியின் தந்தை ராமலிங்க ரெட்டி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது “ஜெயநகர் சட்டமன்றத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சௌம்யா ரெட்டி வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மறு வாக்கு எண்ணிக்கை என்று கூறி முடிவை மாற்ற முயல்கின்றனர். இதில் பாஜக எம்பி சூர்யா, பாஜக தலைவர் அசோக் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளின் தலையீடு உள்ளது” என்று டி.கே.சிவகுமார் குற்றஞ்சாட்டினார்.
இந்த சம்பவங்களுக்கு மத்தியில், ஜெயாநகர் தொகுதியில் காங்கிரஸின் சௌமியா ரெட்டியை (57,781) விட 16 வாக்குகள் அதிகமாக பெற்ற பாஜகவின் ராமமூர்த்தி (57,797) வென்றதாக தேர்தல் அதிகாரிகள் நள்ளிரவில் அறிவித்தனர்.
இதன்மூலம் இறுதி தேர்தல் முடிவாக பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளின் எண்ணிக்கை 66 என அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, பாஜகவின் மறு சரிபார்ப்பு கோரிக்கைகளின் பேரில், காலையில் நிராகரிக்கப்பட்ட ராமமூர்த்தியின் 160 வாக்குகள் செல்லுபடியாகும் என்று கடைசி நேரத்தில் தேர்தல் ஆணையம் கூறுவதை ஏற்க முடியாது என்றும், பாஜக வேட்பாளர் மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்றும் கூறியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்
ஸ்டாலின் குட் புக்கில் அமுதா: உள்துறை செயலாளரான கதை!