கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று 1,008 தாமரைப் பூக்களை வைத்து நடிகை நமீதா சிறப்புப் பூஜை செய்துள்ளார்.
224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகா சட்டமன்றத்திற்கு இன்று (மே 10) ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவும் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று காங்கிரஸும், ஆட்சி அமைக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளமும் தேர்தல் பிரச்சாரத்தின் போது தீவிரமாக செயல்பட்டன.
தங்களது கட்சி தான் வெற்றி பெரும் என்று அந்தந்த கட்சி நிர்வாகிகள், ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை நமீதா, கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக 1,008 தாமரைப் பூக்களால் அபிஷேகம் செய்துள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு வழிபாடு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று எனது பிறந்தநாள். அதற்காக வாழ்க்கையில் முதல் முறையாக பெரிய பூஜை, அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறோம்.
இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் ஸ்பெஷல். ஏனென்றால், முதல்முறையாக என்னுடைய குழந்தையுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடுகிறேன்.
கர்நாடக தேர்தலுக்காக நான் பெங்களூரு சென்று வந்தேன். கர்நாடக மக்கள் பாஜகவிற்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கர்நாடகாவில் பெரும்பான்மையில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் சிறப்பு பூஜை செய்து கொண்டிருக்கிறோம். 1,008 தாமரைப்பூ வைத்து பூஜை, அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறோம்” என்றார்.
முன்னதாக கர்நாடகாவில் வாக்குப் பதிவு செய்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “காங்கிரஸ் இலவச திட்டங்களை மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் போதோ, அல்லது தற்போது ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்திலோ நிறைவேற்றி இருந்தால், மக்கள் அவர்களை நம்புவார்கள்.
அனைத்து இடத்திலும் வாக்குறுதி கொடுத்து விட்டு யாரோ ஒருத்தர் பார்த்துக் கொள்வார்கள் என்ற நிலையில் இருக்கும் காங்கிரஸை மக்கள் நம்ப மாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
உதவி இயக்குநர் சிகப்பிக்கு முன்ஜாமீன்!
10.5% இட ஒதுக்கீடு: மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்!