வைஃபை ஆன் செய்ததும், கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச் செயலாளர் கொடுத்த பேட்டியின் வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது. சில சோர்ஸுகளின் முக்கியமான சங்கதிகளும் வந்திருந்தன. அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“அக்டோபர் 5 ஆம் தேதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘இனி போட்டி என்பது திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையேதான்’ என்று கூறினார். அதாவது வருகிற மக்களவைத் தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு ரோலே இல்லை என்பதைத்தான் அண்ணாமலை அவ்வாறு கூறினார்.
இதற்கு இன்று (அக்டோபர் 6) கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘யாருக்கு யார் போட்டி என்பதை தேர்தல் களத்தில் மக்கள் முடிவு செய்வார்கள். தமிழ்நாட்டில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி. இது எல்லாருக்கும் தெரியும்’ என்று பதிலளித்தார். இப்படியாக அதிமுகவுக்கும் பாஜகவுக்குமான அரசியல் மோதல்கள் கூட்டணி முறிந்த பிறகு தொடங்கிவிட்டன.
இந்த நிலையில்தான் பாஜக தற்போது அதிமுகவுக்கு எதிரான காய் நகர்த்தல்களை தமிழ்நாடு ஆளுநர் மூலமாக தொடங்கிவிட்டன. கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது அவர் மீது ஊழல் புகார்கள் இருப்பதால் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு முதலமைச்சருக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் முதலமைச்சர் ஸ்டாலினோ, தனது அமைச்சரவையில் துறை இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என்று அரசாணை பிறப்பித்தார்.
இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு பதிலடி கொடுப்பதற்காக தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கடந்த ஜூலை மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் டாக்டர் சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா விநியோகிப்பாளர்களிடமிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை அரசிடம் கோரியது.
மாநில அமைச்சரவை சி.பி.ஐ-யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. ஆனால் அதில் ஆளுநர் இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதனால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.
மேலும் மாநில அரசின் விஜிலென்ஸ் அதிமுக முன்னாள் அமைச்சர்களான கே.சி. வீரமணி, எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது. இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியது. இந்த கடிதங்களும் ஆளுநர் மாளிகையில் நிலுவையிலேயே இருக்கின்றன. அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மீதான எந்த ஊழல் குற்றச்சாட்டு வழக்குகளிலும் நீதிமன்ற விசாரணையைத் தொடங்கிட தேவையான இசைவு ஆணையை ஆளுநர் வழங்கவே இல்லை’ என்று குறிப்பிட்டிருந்தார் அமைச்சர் ரகுபதி.
அதாவது ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அமைச்சரான செந்தில்பாலாஜியைதான் ஊழல்வாதியாக பார்க்கிறார், சிபிஐயே அனுமதி கோரியுள்ள முன்னாள் அதிமுக அமைச்சர்களை ஆளுநர் ஊழல்வாதிகளாக பார்க்கவில்லையா என்ற கேள்வியை அரசியல் அரங்கில் இந்த கடிதம் எழுப்பியது. இதைத் தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியைத் திரும்பப் பெறக் கோரி குடியரசுத் தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஜூலை 10 ஆம் தேதி 19 பக்க கடிதம் எழுதினார். அதிலும் இந்த விவகாரங்களைக் குறிப்பிட்டிருந்தார்.
அன்று அதிமுக-பாஜக கூட்டணி இருந்ததால் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் விவகாரங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கண்டும் காணாமல் இருந்தார். இப்போது அதிமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்ட நிலையில்… அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் விசாரணையைத் தொடங்கிட பச்சைக் கொடி காட்டுமாறு ஆளுநருக்கு டெல்லியில் இருந்து அறிவுறுத்தல்கள் வந்திருக்கின்றன என்கிறார்கள் பாஜக வட்டாரங்களில்.
இது தொடர்பான தீவிர ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இரு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஃபைல் ஆளுநரால் க்ளியர் செய்யப்படும் என்று தகவல்கள் கசிகின்றன. புதுக்கோட்டை, வேலூர் மாவட்டங்களைச் சேர்ந்த மாஜிக்கள்தான் ஆளுநரால் முதலில் வீழ்த்தப்படும் இரு விக்கெட்டுகளாக இருப்பார்கள் என்றும் அதிகார, அரசியல் வட்டாரங்களில் ரகசிய பேசுபொருளாக உள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
“அயலான்” டீசர்: சிவகார்த்திகேயனை மிரட்டும் ஏலியன்!
யாருக்கு யார் போட்டி: அண்ணாமலைக்கு எடப்பாடி பதில்!