2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 100 மோடி வந்தாலும் பாஜக வெற்றி பெற வாய்ப்பில்லை. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி காவி கூடாரமான பாஜகவை தோற்கடிக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசினார்.
டெல்லியில் நேற்று (பிப்ரவரி 22) இந்திய தேசிய காங்கிரஸின் 33வது தொழிற்சங்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், ”ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் காப்பாற்ற பொதுமக்கள் முன்வரவேண்டும். இதைச் செய்யாவிட்டால் சர்வாதிகாரம் நம் அனைவரையும் அழித்துவிடும்.
பாராளுமன்றத்தை ரப்பர் ஸ்டாம்ப் ஆக மத்திய அரசு மாற்றியுள்ளது. எதிர்கட்சிகளின் கருத்துக்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்க அனுமதிக்கப்படுவதில்லை. அதானி விவகாரத்தில் எதிர்ப்பை பதிவு செய்ததற்காக 12 எம்.பிக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு பெண் எம்பி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பாஜக அரசு முதலாளிகளின் நலனுக்காக செயல்படுகிறது. அதானியின் சொத்து மதிப்பு கடந்த 8 ஆண்டுகளில் ரூ.3,000 கோடியிலிருந்து ரூ.12 லட்சம் கோடியாக உயர்ந்தது.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எப்போதும் பெரிய தொழிலதிபர்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. தொழிலாளர்கள் ஒருபோதும் அதில் அங்கம் வகிக்கவில்லை.
ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அதானி குழுமத்திற்கு எதிரான முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) அமைக்கப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி, திக்விஜய் சிங் உட்பட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுத்தோம். ஆனால் எங்கள் கருத்துக்கள் பாராளுமன்றத்தில் இருந்து நீக்கப்பட்டன.
மற்ற அனைத்து கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலில் 100 மோடி அல்லது 100 ஷாக்கள் வந்தாலும் இனி பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது.
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி காவி கூடாரமான பாஜகவை தோற்கடிக்கும். இது அனைத்து எதிர்கட்சிகளின் ஒத்துழைப்புடன் கண்டிப்பாக நடக்கும்.” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
கிச்சன் கீர்த்தனா: சிக்கன் பர்கர்!
திருப்பதி: தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு!